நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 15 மே, 2017

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - நாகர்கோயில்



அனைத்துலகத் திருக்குறள் மாநாடு  2017 மே மாதம் 17 ஆம் நாள் (புதன்கிழமை) காலை பத்து மணிக்கு நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் தொடங்குகிறது. சென்னை ஆசியவியல் நிறுவனமும் மொரீசியசில் உள்ள பன்னாட்டுத் தமிழ்ப் புலம்பெயர்வு அமைப்பும் இணைந்து மூன்று நாள் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டை நாகர்கோயிலில் நடத்துகின்றன. உலகின் பல நாடுகளிலிருந்தும் பேராளர்கள் கலந்துகொண்டு திருக்குறள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாட்சிமைதங்கிய அரசியார் கௌரி பார்வதி பாய் அவர்கள் திருக்குறள் மாநாட்டைத் தொடங்கிவைக்கின்றார். ஹாங்காங்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் அகராதியியல் துறையின் அறிஞருமான கிரிகோரி ஜோம்ஸ் அவர்கள் மாநாட்டில் தொடக்கவுரையாற்றுகின்றார்.  நடுவண் அமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருட்டினன் அவர்கள் கலந்துகொண்டு, மாநாட்டை ஒட்டி நடைபெறும் கண்காட்சியைத் தொடங்கிவைக்கவும், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சேவூர் இராமச்சந்திரன் அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிடவும் உள்ளனர்.

மொரீசியசு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் வரவேற்புரையாற்றவும், ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல் நோக்கவுரையாற்றவும் உள்ளனர்.

அருட்தந்தை தேவகடாட்சம், மகாகுரு பால பிரஜாபதி அடிகளார், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், பேராசிரியர் மருதநாயகம், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் கா.செல்லப்பன், பேராசிரியர் கு.மோகனராசு, பேராசிரியர் தி. முருகரத்தினம் உள்ளிட்ட ஆய்வறிஞர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.


உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆய்வறிஞர்கள் திருக்குறள் குறித்த ஆய்வுரை வழங்க உள்ளனர். மூன்று நாள் நாகர்கோயிலில் நடைபெறும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு திருக்குறளுக்குப் பெருமை சேர்க்கும் மாநாடாக அமையும்.

கருத்துகள் இல்லை: