நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 22 மே, 2017

தமிழகப் பண்பாட்டு அரசியலைப் பேசும் வையவனின் கிறுக்கும்... நறுக்கும் நூல்


     திருவண்ணாமலையில் வாழும் பாவலர் வையவனின் படைப்புகளைப் பதினைந்து ஆண்டுகளாகக் கவனித்து வருகின்றேன். சிந்தனையாளன் ஏட்டில் இவர் வரையும் சமகால நிகழ்வுகளை விளக்கும் பாத்தெறிப்புகள் உள்ளத்தை இழுத்து நிறுத்தும் உறுதி வாய்ந்தவை. பாவலர் தமிழேந்தி அவர்களின் படைப்புக்கு நிகராக எழுதிச் செல்லும் வையவனின் பன்முக ஆற்றலை நான் நன்கு அறிவேன். உதவி வேண்டி யாரேனும் இவரிடம் வந்தால் இயன்ற உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சி காண்பவர். தம் வருவாயின் ஒரு கூறினைப் பொதுப்பணிக்கு வழங்குவதில் மனநிறைவு காண்பவர். அறிஞர் ஆனைமுத்துவின் கொள்கைகளை நெஞ்சில் தேக்கிக்கொண்டு, ஆசிரியப் பணியாற்றும் இவர் தமிழ்நாட்டு நடப்புகளை உற்றுநோக்கித் தம் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றார். 1) என் மனைவியின் கவிதை(1998), 1). ஞானத்திலிருந்து(2000), 3). மனசு சுற்றிய மாவளி( 20060, 4). சதுரங்கக் காய்கள்(2015) உள்ளிட்ட படைப்புகளைத் தந்த வையவன் ஒரு மிகச் சிறந்த ஓவியர். தம்மைச் சுற்றி நடக்கும் நடப்புகளை உற்றுநோக்கி, அவற்றை அழியாத கவிதைப் படைப்புகளாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்.

     பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் வையவன் தம் படைப்புகள் சென்று சேரவேண்டிய இடத்தை மனத்துள் பதியவைத்துக்கொண்டு எளிய வடிவத்தில் "கிறுக்கும்.. நறுக்கும்" என்ற நூலினைத் தந்துள்ளார். தாம் சொல்ல நினைக்கும் செய்தியைப் புரிந்துகொள்வதற்கு வடிவம் ஒரு தடையாக இருத்தல் கூடாது என்று எளிய நடையில் நறுக்குகளைத் தந்துள்ளார். கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் நறுக்குகள் என்ற தலைப்பில் வரைந்துள்ள நூலினை முன்மாதிரியாக அமைத்துக்கொண்டு, இந்த நறுக்குகளைத் தந்துள்ளார். பேராசிரியர் த. பழமலையின் நல்ல அறிமுகம் நூலுக்கு வலிமை சேர்க்கின்றது. தமிழ்க் கவிதையுலகில் புதிய போக்கினை உருவாக்கியவர் பேராசிரியர் த. பழமலை என்பதால் இந்த நூலின் நாடியைப் பிடித்துப் பார்த்து முன்னுரை எழுதியுள்ளார். ஓவியர் மருதுவின் படங்கள் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.

     "கிறுக்கும்... நறுக்கும்" நூல் 208 நறுக்குகளைக் கொண்டு அமைந்துள்ளது. உணர்த்த நினைக்கும் பொருளை எளிமையாகவும் கவிதை நயம் மிளிரவும் வையவன் இந்த நூலில் வழங்கியுள்ளார். சமகால நடப்புகள் அனைத்தையும் விடுபாடு இல்லாமல் எழுதியுள்ளமைக்கு இவரைப் பாராட்டுதல் வேண்டும். தமிழ்த்தேசிய அரசியல், பகுத்தறிவு, பெண்ணியம், அயல்நாட்டு மோகம், உள்ளூர் அரசியல், உலக அரசியல், சுற்றுச்சூழல் சீர்கேடு, கல்விமுறை, ஈழத்து அரசியல் சிக்கல், தேர்தல், இயற்கை,  தன்னம்பிக்கை என்று பல்வேறு பொருள்களில் எழுதியுள்ள நறுக்குகளில் இடம்பெற்றுள்ள செய்திகள் மக்களுக்கு அறிமுகம் ஆகவேண்டியனவாக உள்ளன. தொன்மச் செய்திகளின் துணையுடன் பல நறுக்குகளை வழங்கியுள்ளார். நூலை எடுத்தவர்கள் படித்துமுடித்துவிட்டு வைக்கும் வகையில் உருவமும் உள்ளடக்கமும் உள்ளன.

"ஒருமுறைதான் குறுக்கே போனது
ஓராயிரம்முறை ஓடுகிறது
மனத்துக்குள் பூனை" (நறுக்கு 13)

என்று பாவலர் வையவன் வரைந்துள்ள நறுக்கு இவரின் பகுத்தறிவுப் பார்வைக்கும் மூடநம்பிக்கை ஒழிப்புக்குமான சான்றாக உள்ளது. ஒரு செய்தியைச் சொல்லும் நேர்த்தியுடன் கவிதையாகப் புனையும் ஆற்றல் உள்ளவராக வையவனை இந்த வரிகள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

"வேரொன்றுமில்லை
தரைக்கு மயிர்சிரைக்கும் வேலைதான்
நூறுநாள் வேலை" (நறுக்கு 25)

என்று கிராமப்புறங்களில் இன்று நடைபெறும் நூறுநாள் வேலைத்திட்டப் பணியை கிண்டல்செய்கின்றது வேறொரு நறுக்கு.

"கதவுகள் திறந்தே இருப்பதால்
நாய்கள் நுழைந்துவிடுகின்றன
முகநூல் பக்கத்திலும் இன்பாக்சிலும்" (நறுக்கு 47)

என்று வையவன் வரைந்துள்ள நறுக்கு எவ்வளவு உண்மை என்பதை முகநூல் பயன்படுத்துவோர் நன்கு அறிவர். சமகாலத்துச் செய்திகளைப் பதிந்து வைப்பதில் - படைப்பாக்குவதில் வையவன் வல்லவர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

"இவர் ஏராளமான விருதுகளை
வாங்கியுள்ளார்...
எவரும் "கொடுக்கவில்லை!" (நறுக்கு 55)

என்று இன்றைய இலக்கிய உலகில் நடக்கும் விருது நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.

"நெடுநாளாய்ப் புரியாமலிருந்தது
சில ஊடகங்கள் எழுதும்
"கவர்" ஸ்டோரியின் பொருள்" ( நறுக்கு 79)

என்று ஊடகங்கள் காசுக்கு விலைபோகும் தன்மையை அழகாகத் தோலுரித்துக்காட்டும் வையவன் போன்ற படைப்பாளிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

"எளிய சிறகுகளால்
கடலைக் கடந்துவிடுகிறது
பறவை!" (நறுக்கு 78)

என்று தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளைத் தந்துள்ள பாவலரின் கற்பனையாற்றலும் எழுத்து வன்மையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

"போதிமரந்தான் என்பதில்லை
எந்த மரத்தின்கீழும் வரும்
’ஞானம்’"   (நறுக்கு 84)

என்று வையவன் இன்றைய கல்விமுறையை நமக்கு நினைவூட்டி, அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்காமல் தனியார் பள்ளிகளுக்குப் படையெடுக்கும் பெற்றோர்களை மென்மையாகத் திருத்த முனைகின்றார்.

"விரிந்தது மொட்டு
விடுதலையானது
நறுமணம்" (நறுக்கு 86)

என்று இயற்கையை நுண்மையாக நோக்கி எழுதியுள்ள வையவனின் வரிகளில் அடர்ந்த கவிதையாற்றல் இருப்பதை உணரமுடியும்.

"மயிரா அது?
மழித்தால் மறுநாளே முளைக்க...
‘மரம்’டா! (நறுக்கு 93)

என்று குறைந்த சொற்களில் சமூகத்தின் மேல் கொண்ட கோபத்தை வெளிப்படுத்தி, இயற்கையைப் பாதுகாக்க நம்மைத் தூண்டுகின்றார்.

"வண்ண வண்ணப் பலூன்களில்
நிரப்பப்பட்டிருக்கிறது
சின்னஞ் சிறுவர்களின் ஆசை!"  (நறுக்கு 121)

என்று எளிமையான உவமைகாட்டி மிகப்பெரிய உண்மைகளை நமக்கு உணர்த்தும் கவிதையாற்றலின் உரிமையாளரான பாவலர் வையவனை வாழ்த்தி வரவேற்பது நம் கடமையாகும்.

தனித்தனியாய்ச் சிதறிக்கிடக்கிறது
தமிழர்களுக்கான நாடு
உலக வரைபடத்தில் ( நறுக்கு 163)

என்று தமிழர்களின் புலப்பெயர்வையும், தொலைநோக்குப் பார்வையையும் வையவன் கவிதை பதிவு செய்துள்ளது.

"கபிலவஸ்துவில் பிறந்து
முள்ளிவாய்க்காலில் இறந்தான்
புத்தன்" ( நறுக்கு 190)

என்று ஈழத்தின் சோக முடிவினையும் வீரம் தோய்ந்த வரலாற்றையும் நமக்கு மூன்று வரிகளில் நினைவூட்டுகின்றார்.

"கூட்டில் உயிரைவைத்துவிட்டு
இரைதேடப் போகிறது
தாய்ப்பறவை" (நறுக்கு 201)

என்று தாய்மை உணர்வைத் தூண்டும் வரிகள் மிகத் தேர்ந்த படைப்பாளிகளுக்கு உரிய சிறப்பினை இவருக்குத் தருகின்றது.

"வண்டுக்குச்
செய்தி அனுப்புகிறது மலர்
’மணம்’" (நறுக்கு 186)

என்று அழகியல் நழுவும் கவிதையை வையவன் தந்துள்ளமை இவரின் சொல்லாட்சிக்கும் இயற்கை ஈடுபாட்டுக்கும் சான்று பகர்கின்றது.

"வயிற்றிலடித்துக்கொண்டு
வாய்வலிக்கக் கத்துகிறது சேவல்
சூரியத்திருடன்" ( நறுக்கு 37)

என்று அழகிய கற்பனையில் நம் மனக்கண்முன் காலைக் கதிரவனின் காட்சித் தோற்றத்தைப் படிமமாக்கி நம் கவிஞர் நிறுத்துகின்றார். பாரதியிலும் பாவேந்தரிலும், காசி ஆனந்தனிலும் உருவாகும் கற்பனையும், படைப்பாற்றலும், எளிய வெளியீட்டு உத்திகளும் நம் வையவனின் படைப்பில் நெளிந்தோடுவதைக் காணமுடிகின்றது. அப்துல் ரகுமான், காசி ஆனந்தன் கவிதைகளின் தாக்கம் சில இடங்களில் தென்படுகின்றன.

     இந்த நூலில் மிகவும் எளிய செய்திகளை உரைநடை வடிவில் கொண்ட சில நறுக்குகள் உள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும். இவற்றைத் தவிர்த்திருக்கலாம். அல்லது செறிவூட்டியிருக்கலாம்.

     தலையணை நூல்களை உருவாக்கி, மக்களைக் குழப்பியடிக்கும்  நடையைக் கொண்ட எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டு, மிக எளிய வரிகளால் அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் வையவனைப் போன்ற மக்கள் படைப்பாளிகள்தான் இந்த நாட்டுக்குத் தேவை. இவர்களால்தான் மொழி ஏற்றம்பெறும். இளம் படைப்பாளிகள் தோன்றுவார்கள். இவருக்கு என்று மேடை அமைத்துத் தருவோம். இவரின் படைப்பினை ஆர்வமுள்ளவர்களுக்கு அறிமுகம் செய்வோம். இவரைப் போலும் கவிதை படைப்பவர்களை வளர்த்தெடுப்பதன் வழியாகத் தமிழர்களுக்குத் தேவையான படைப்புகளை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். சமகாலத் தமிழ்ப் பண்பாட்டு அரசியலைப் பதிவுசெய்துள்ள இந்த அரிய நூலினைக் கவிதை ஆர்வலர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். மாணவர்கள் படித்தால் நல்ல படைப்பாளிகள் நூற்றுக்கணக்கில் உருவாக வாய்ப்பு உள்ளது.

நூல்: கிறுக்கும்... நறுக்கும்
ஆசிரியர்: பாவலர் வையவன்

கிடைக்குமிடம்:

நெசவுக்குடில்,
54, பிள்ளையார் கோயில்தெரு, தமிழ் மின்நகர்,
திருவண்ணாமலை - 606 601, தமிழ்நாடு

பேசி: 0091 94421 10020
விலை: 80.00 உருவா

பக்கம் 96.

ஞாயிறு, 21 மே, 2017

நாகர்கோயில் உலகத் திருக்குறள் மாநாட்டு நினைவுகள்...

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஐயாவிடம் நலம் வினவுதல்

மு.இ, அருமை அண்ணாச்சி வி.ஜி.சந்தோஷம் அவர்களுடன்..

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாட்சிமைதங்கிய அரசியார் கௌரி பார்வதி பாய் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்லும் காட்சி: மு.இ, அறிஞர் பத்மநாபன் உள்ளிட்டோர்


  நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறித்தவக் கல்லூரி அரங்கில் 2017 மே 17,18,19 ஆகிய மூன்று நாளும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் வருகை தந்து ஆய்வுரை வழங்கினர். சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனமும், மொரீசியசு நாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டிற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் திருக்குறள் ஆர்வலர்கள் இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். அறிஞர்களின் ஆய்வுரைகளைச் செவிமடுக்கவும், நண்பர்களைச் சந்தித்து ஆய்வுப்போக்குகளை அறிந்துகொள்ளவும் நான் சென்றிருந்தேன்.

 முனைவர் ஜான் சாமுவேல், பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் மிகச்சிறந்த திருக்குறள் பற்றாளருமான அருமை அண்ணாச்சி வி.ஜி. சந்தோஷம், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் கிரிகோரி ஜோம்ஸ், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் மருதநாயகம், பேராசிரியர் கா.செல்லப்பன், பேராசிரியர் சொர்ணம்(மொரீசியசு) முனைவர் முகிலை. இராசபாண்டியன், அறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார், முனைவர் கடவூர் மணிமாறன், கவிஞர் காவிரிநாடன், திருக்குறள் இராம. மாணிக்கம், பேராசிரியர் பா. வளன்அரசு, முனைவர் பத்மநாபன், பா.மா. ஆறுமுகம், ’கொங்கு கல்வெட்டு ஆய்வு’ துரை. சுந்தரம், நெல்லை ஆ. சுந்தரம் உள்ளிட்ட நண்பர்களைச் சந்திக்கவும் கண்டு உரையாடவுமான வாய்ப்பு எனக்கு அமைந்தது.

 திருக்குறள்கயமைஅதிகாரச் செய்திகளும் மாக்கியவெல்லியின் சிந்தனைகளும் என்ற தலைப்பில் என் கட்டுரை அமைந்தது. கயமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள செய்திகள் இத்தாலிய அரசியல் அறிஞன் மாக்யவெல்லியின் இளவரசன் நூலில் எவ்வாறு எதிரொலிக்கின்றது என்பதை எடுத்துரைக்கும் வகையில் என் கட்டுரையை அமைத்திருந்தேன். சற்றொப்ப இரண்டு திங்களாகப் பல நூல்களையும் திருக்குறள் உரையையும் கற்று என் கட்டுரையை வடிவமைத்திருந்தேன். நாமக்கல் புலவர் பொ.வேல்சாமி அவர்களுடன் உரையாடி, என் கட்டுரைச் செய்திகளை செழுமைப்படுத்தினேன்.

 மாநாடு நடைபெறும் நாளில் காலைப்பொழுது ஒன்றில் சுசீந்திரம் திருக்கோயில் சென்று அங்குள்ள இசைத்தூண்களையும், சிற்பங்களையும் கண்டு வந்தோம். அதுபோல் தேரூர் சென்று கவிமணி அவர்களின் நினைவு இல்லம் கண்டோம். இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்த ஆய்வறிஞர் பத்மநாபன், முனைவர் நா. கணேசன் ஆகியோர்க்கு நன்றியன்.

 தமிழுக்கு ஆக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல், மொரீசியசு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் ஆகியோர் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள்.

மு.இ, முனைவர் நாக. கணேசன், கவிஞர் வி.ஜி. சந்தோஷம்
மு.இ, முனைவர் நாக. கணேசன், கவிஞர் வி.ஜி. சந்தோஷம்

திங்கள், 15 மே, 2017

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - நாகர்கோயில்அனைத்துலகத் திருக்குறள் மாநாடு  2017 மே மாதம் 17 ஆம் நாள் (புதன்கிழமை) காலை பத்து மணிக்கு நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் தொடங்குகிறது. சென்னை ஆசியவியல் நிறுவனமும் மொரீசியசில் உள்ள பன்னாட்டுத் தமிழ்ப் புலம்பெயர்வு அமைப்பும் இணைந்து மூன்று நாள் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டை நாகர்கோயிலில் நடத்துகின்றன. உலகின் பல நாடுகளிலிருந்தும் பேராளர்கள் கலந்துகொண்டு திருக்குறள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாட்சிமைதங்கிய அரசியார் கௌரி பார்வதி பாய் அவர்கள் திருக்குறள் மாநாட்டைத் தொடங்கிவைக்கின்றார். ஹாங்காங்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் அகராதியியல் துறையின் அறிஞருமான கிரிகோரி ஜோம்ஸ் அவர்கள் மாநாட்டில் தொடக்கவுரையாற்றுகின்றார்.  நடுவண் அமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருட்டினன் அவர்கள் கலந்துகொண்டு, மாநாட்டை ஒட்டி நடைபெறும் கண்காட்சியைத் தொடங்கிவைக்கவும், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சேவூர் இராமச்சந்திரன் அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிடவும் உள்ளனர்.

மொரீசியசு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் வரவேற்புரையாற்றவும், ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல் நோக்கவுரையாற்றவும் உள்ளனர்.

அருட்தந்தை தேவகடாட்சம், மகாகுரு பால பிரஜாபதி அடிகளார், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், பேராசிரியர் மருதநாயகம், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் கா.செல்லப்பன், பேராசிரியர் கு.மோகனராசு, பேராசிரியர் தி. முருகரத்தினம் உள்ளிட்ட ஆய்வறிஞர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.


உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆய்வறிஞர்கள் திருக்குறள் குறித்த ஆய்வுரை வழங்க உள்ளனர். மூன்று நாள் நாகர்கோயிலில் நடைபெறும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு திருக்குறளுக்குப் பெருமை சேர்க்கும் மாநாடாக அமையும்.

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் ஆவணப்பட, குறும்பட விருதுகள் விழாமு.இ,, ’லாக்கப்’ நாவலாசிரியர் ஆட்டோ சந்திரா, சுப்ரபாரதிமணியன், இரவி

திருப்பூரில் 14.05.2017 (ஞாயிறு) காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆவணப்பட, குறும்பட விருது, சக்தி விருது வழங்கும் விழாவிற்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகள் கலந்துகொண்ட நிகழ்வாக இது இருந்தது.

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு படைப்பாளிகளைப் போற்றி விருதளித்தும், உரையாற்றச் செய்தும் சிறப்புச் செய்தனர். சென்னையிலிருந்து எழுத்தாளர் இந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். திருப்பூரில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் கவிஞர்  சின்னசாமி இ.ஆ.ப. அவர்களும் கலந்துகொண்டு படைப்புகள் குறித்து உரையாற்றினார்.

திரு. தங்கவேலன், ’லாக்கப்’ புதினம் எழுதிய ஆட்டோ சந்திரா(கோவை), பேராசிரியர் மணிவண்ணன், தங்கவேலன், கோவை அரவிந்தன், மு.இளங்கோவன் உள்ளிட்ட படைப்பாளிகள் கலந்துகொண்டு கலை இலக்கியப் போக்குகள், தங்கள் படைப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். வழக்கறிஞர் இரவி உள்ளிட்ட எழுத்தாளர்கள் நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்குப் பின்புலமாக இருந்தனர்.

பெண் படைப்பாளர்களுக்குச்  சக்தி விருது வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெண் படைப்பாளர்கள் வந்திருந்தனர்.  தங்கள் படைப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். எழுத்தாளர் சுந்தரபுத்தன், திருவையாறு சௌந்தர் உள்ளிட்ட நண்பர்களைக் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கலை இலக்கியப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விழாவாகவும் சமகாலத்தின் கலை இலக்கியப் போக்குகளை அறிந்துகொள்ளும் விழாவாகவும் இது இருந்தது. 

லாக்கப் நாவலாசிரியர் ஆட்டோ சந்திராவின் அன்பில்...


வெள்ளி, 12 மே, 2017

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்திற்குத் திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் விருது!திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கு விருது வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துகின்றது. அந்த வகையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை .சுந்தரேசனார் ஆவணப்படத்திற்கு இந்த ஆண்டு  விருது வழங்கிப் பாராட்டுகின்றது.  14.05.2017 (ஞாயிறு) காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது வழங்கப்பட உள்ளது. குறும்பட இயக்குநர்கள், பெண் எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் அரிய நிகழ்வாக அமையும்.

கவிஞர் இந்திரன், கவிஞர் சின்னசாமி இ.கா.ப. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

இடம்: மத்திய அரிமா சங்கக் கட்டிடம், காந்திநகர், (திருப்பூர் அவினாசி சாலையில் காந்தி நகர் உள்ளது, சர்வோதயா சங்கம்  பேருந்து நிறுத்தம்) 

செவ்வாய், 9 மே, 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி வெளியீடு!

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டியை வே.ஆனைமுத்து வெளியிட, முனைவர் ஒப்பிலா. மதிவாணன் பெற்றுக்கொள்ளும் காட்சி.

இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் துறவறப் பயிற்சி பெற்ற, தமிழ் மாமுனிவர், பேராசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி இன்று (09.05.2017)  மாலை புதுச்சேரியில் அமைந்துள்ள திரு. சீனு. அரிமாப்பாண்டியன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அறிஞர் வே. ஆனைமுத்து அவர்கள் சுவரொட்டியை வெளியிட, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா. மதிவாணன் பெற்றுக்கொண்டார். புரவலர் தூ. சடகோபன், பாவலர் சீனு. தமிழ்மணி, பாவலர் சீனு. தமிழ்நெஞ்சன், திரு. திருவாசகம், ஓவியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் சுவரொட்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

புதன், 3 மே, 2017

விபுலாநந்தர் ஆவணப்படப் பதிவு நினைவுகள்!


பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்

ஆவணப்படம் எடுத்தல் என்பது அவ்வளவு எளிய செயல் அன்று. அதுவும் அயல்நாட்டில் பிறந்த ஒருவரை - எந்தப் பின்புல உதவியும் இல்லாமல் படமாக்குவது  அரிதினும் அரிதாகும். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கிய கதையை எழுதப் புகுந்தால் அது கம்பராமாயணம்போல் பல கிளைக்கதைகளைக் கொண்டு பரந்து விரியும். விபுலாநந்தருடன் தொடர்புடைய ஒவ்வொரு செய்தியையும் திரட்டுவதும் உறுதிப்படுத்துவதும் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விபுலாநந்த அடிகளார் பணிபுரிந்தமை அனைவரும் அறிந்த செய்தியாகும். அந்த ஒற்றைவரிச் செய்தியை உறுதிப்படுத்த நான்கு நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. முதலில் இற்றைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அரங்க. பாரி அவர்களைச் சந்தித்து ஒளிப்பதிவு செய்து மீண்டோம்.

அடுத்துப் பேராசிரியர் மௌனகுரு அவர்களை இலங்கையில் சந்தித்து ஒளிப்பதிவு செய்த பொழுதும் இதனை உறுதிப்படுத்தினார். மேலும் திருவேட்களச் செய்திகளை விரித்தும் உரைத்தார். இதுவும் போதுமானதாகத் தெரியவில்லை. விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி செய்த காலத்தில், அந்நாள் துணைவேந்தர் அவர்கள் அடிகளார் வகுப்பிலிருந்து திரும்பிவரும்வரை தமிழ்த்துறைத் தலைவர் அறையில் காத்திருந்த ஒரு நிகழ்வைப் பேராசிரியர் கு.சிவமணி வேறு வகையில் சொன்னார். அதுவும் ஒருநாள் பதிவானது.

விபுலாநந்தரின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பணிக்காலத்தை நேரில் கண்ட சான்றாக இருப்பவர் பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்(அகவை 102) என்பதறிந்து அவரிடம் சில விவரங்களைப் பெற அவரின் சென்னை இல்லத்திற்கு ஒருநாள் சென்றோம்.

முன்பே பேராசிரியர் இலெ.ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களை நேரில் கண்டு உரையாடியுள்ளேன். இந்தமுறை பேராசிரியரைச் சந்தித்தபொழுது உடல் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். ஆச்சி அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் என் வருகையையும், விருப்பத்தையும் சொல்லி நம் பேராசிரியர் அவர்களைப் படுக்கையிலிருந்து எழுப்பி, அழைத்து வந்து கூடத்தில் அமர வைத்தனர். என்னை அறிமுகம் செய்துகொண்டு, என் பெயர், பணி விவரம் கூறினேன். ஆனால் எதுவும் ஐயா அவர்களுக்குக் காதில் விழவில்லை. விபுலாநந்த அடிகளாரின் அண்ணாமலை நகர் வாழ்க்கையைக் குறித்த விவரங்களை அறிய வந்துள்ளமையை, என் வலிமையைக் கூட்டிப் பலமுறை எடுத்துரைத்தும் அவர்களுக்கு உணர்த்தமுடியவில்லை.

அந்த நேரத்தில் ஆச்சி அவர்கள் ஒரு குறிப்புச் சொன்னார்கள். தடித்த எழுத்துகளில் வேண்டிய விவரங்களை எழுதிக் காட்டும்படிச் சொன்னார்கள். அவ்வாறும் செய்து பார்த்தேன். அப்பொழுதும் வேண்டிய விவரங்களைப் பெறமுடியவில்லை. மீண்டும் ஒவ்வொரு எழுத்தாக எழுதி, விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பணியாற்றிய விவரத்தைப் பதிவு செய்தோம். இந்தமுறை தொடர்பு இல்லாத பல செய்திகள் அவர் உரையுடன் கலந்து வந்தன. அவை யாவும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாறாகும். இடையில் விபுலாநந்தர் குறித்த அரிய செய்திகளையும் பேராசிரியர் தெரிவித்தார். அரிய பல செய்திகளைக் கொண்ட நீண்ட ஒளிப்பதிவாக இது இருந்தது. முழுமையாகப் பதிவுசெய்தோம்.


பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த, பல்லாயிரம் பேராசிரியர்களைச் சந்தித்த, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்ப் பேராசிரியராகவும். பொறுப்புத் துணைவேந்தராகவும் (பலமுறை) இருந்த பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் அவர்களின் உரை எங்கள் ஆவணப்படத்தின் முதன்மைப் பதிவாக இருக்கும். மூத்த தமிழறிஞரின் குரலைப் பதிவு செய்து ஆவணப்படுத்திய மனநிறைவுடன் புதுவைக்குத் திரும்பினோம்.திங்கள், 1 மே, 2017

கன்னங்குடா உழுதொழிற் பள்ளு: பதிப்புரையும் முன்னுரையும்


ஈழத்துப்பூராடனார்

(கட்டுரை விளக்கம்: அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலைத் தமிழகத்தில் மறுபதிப்புச் செய்ய ஐயாவிடம் இசைவு வேண்டினேன். ஐயா அவர்களும் இசைவு வழங்கியிருந்தார்கள். நூல் அச்சிட்டு, மேலட்டை அச்சிட்டு ஐயாவின் பார்வைக்கும் அனுப்பியிருந்தேன். பொருள் முட்டுப்பாடு காரணமாக நூலை அச்சிடாமல் இருந்தேன். 13.12.2007 இல் எழுதிய நூல் பதிப்புரை இன்று கண்ணில் தென்பட்டது. யாருக்கேனும் பயன்படும் என்று பதிப்புரையை மட்டும் என் வலைப்பதிவில் பதிகின்றேன். யாரேனும் முன்வந்தால் கன்னங்குடா உழுதொழிற் பள்ளினை வெளியிடலாம்).

கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலின் ஆசிரியர் ஈழத்துப்பூராடனார் ஆவார். இவர் ஈழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெருமை இவருக்கு உண்டு. தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, நாட்டுப்புறவியல், சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் எனப் பலதுறை நூல்களை இவர் தந்துள்ளார். பல களஞ்சியங்களையும் இவர் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு என்பது பிற பள்ளு நூல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு உள்ளது. கடவுளின் பெருமை, அரசனின் பெருமை கூறும் வண்ணம் பிற பள்ளுநூல்கள் இருக்க, இப் பள்ளுநூல் உழவர்களுக்கும்- உழவுத் தொழிலுக்கும் முதன்மைதரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நெல்வகை, மாட்டுவகை, உழுதொழில் மக்களின் பேச்சுவழக்குகள், கூத்துவகைகள், கலையுணர்வு, காதல்வாழ்க்கை, உழவுமுறை முதலியவற்றை விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சிற்றிலக்கியம் என்ற பழைய வடிவத்தை எடுத்துக்கொண்டாலும் வாழும் காலத்து வாழ்க்கையினையும் சமூக நடப்புகளையும் ஆசிரியர் இணைத்து எழுதியுள்ளார்.

கன்னங்குடா  நூல்பெயர்

கன்னங்குடா என்பது தென் ஈழத்தின் மட்டக்களப்பு அடுத்த உழுதொழில் ஊர். பாரதக்கதையில் குறிப்பிடப்படும் கன்னன்(கர்ணன்) நினைவாக இவ்வூர் பெயர்பெற்றதை ஆசிரியர் 'ஈகையாலே உயிர்துறந்த இரப்பார்க்குக் கொடையளித்த மாகையன் கன்னனவன் மாட்சியுள்ள பெயர்பூண்டு' என்று குறிப்பிடுவர். இவ்வூரில் பண்டைத்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களும், பண்பாடுகள், கூத்துக்கலைகள் வழிபாட்டுமுறைகள் இன்றும் சிதைவுறாமல் உள்ளன. கன்னங்குடா கூத்துக்கலையின் தொட்டில் என்னும் சிறப்புடையது என்று சி.மௌனகுரு மதிப்பிடுவர்.

இவ்வூர் நெய்தல் சார்ந்த மருதநில ஊர். இங்கு 350 குடும்பங்களாக ஏறத்தாழ 1500 சிவனிய வழிபாட்டு மக்கள் வாழுகின்றனர். இவ்வூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இருபாங்கு கூத்துகள் (தென்மோடி,வடமோடி) படைக்கப்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட அண்ணாவிமார்கள் வாழ்ந்தனர். இங்கு உழவர்களே மிகுதியாக உள்ளனர். அவர்களின் வாழ்வியல் சார்ந்த செய்திகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பு மாநிலத்தின் வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் வயற்களச் சொற்கள் மிகுதி. அச்சொற்கள் யாவும் உழவுத்தொழிலின் தொழில்நுட்பச் சொற்களாகும். அச்சொற்களையும்,அச்சொற்களைப் பயன்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் வண்ணம் அமைந்த இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

உள்ளடக்கச் செய்திகள்

கடவுள் வணக்கம், பாடுகளம் பற்றிய சிறப்பு, போடியார் எனப்படும் பண்ணையாரின் வீட்டு அமைப்பு,போடியாரின் வருகை, வயல்வேலை தொடங்குதல், வயல்அதிகாரி, முல்லைக்காரன் (வேலையாள்) தோற்றம், உழவர்களின் மனைவிமார் தோற்றம், கழனிக் கன்னியர் நாட்டுவளம் பாடுதல், போடியார் படியளத்தல், போடியாரிடம் மள்ளர் மாரியம்மன் சடங்கு செய்ய வேண்டுதல், மழைவேண்டிப் பூசை செய்தல், மழைபொழிதல், வெள்ளம் வடிதல், மட்டக்களப்பு வாவியின் சிறப்பு, ஆற்றுமீன்கள், வயல்வேலை தொடக்கம், மாட்டுவகைகள், போடியார் உழவைத் தொடங்குதல்,கலப்பை வகை, அமைப்பு, நெல்வகை, இளையபள்ளியின் மோகத்தால் பள்ளன் கடமை தவறல், பண்ணைக்காரன் முருகனை வினவல், இளையாள்-மூத்தாள் ஏசல், போடியார் முருகனைக் கண்டித்தல் - தண்டித்தல், இரு மனைவியரும் மன்னிக்க வேண்டுதல், முருகனை மாடு முட்டுதல், இரு மனைவியரும் புலம்பல், போடியார் பொறுப்பேற்றல், முருகன் வேளாண் வெட்டுக்கு ஆயத்தம் செய்தல், வசந்தன் கூத்து, போடியார் வீட்டு விருந்து, போடியாரின் அன்புரை, கள்ளுண்டு மகிழல், புதுப்புனலாடல், போடியாரின் புரட்சி எண்ணம் முதலியவற்றை விளக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது.

நூலின் புதுமைச்செய்திகள்

ஈழத்துப்பூராடனார் 'பள்ளு' என்னும் பழையவடிவத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் பல புதுமைகளைக் காலச் சூழலுக்கு ஏற்பச் செய்துள்ளார். கடவுள்வாழ்த்து, குடும்பக்கட்டுப்பாடு, சாதிமறுப்புத் திருமணம் முதலிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ஈழத்துப்பூராடனார் வயற்களச் சொற்கள் அழியாமல் காக்கவும், வயற்கள மக்களின் வாழ்க்கையமைப்பும், அதில் தொடர்புடைய கலைகளைப் பாதுகாக்கவும் இப்பள்ளு நூலைப் படைத்துள்ளார். இந்நூலுள் ஈழத்தில் வழங்கும் பல கலை வடிவங்களைக் குறிப்பிட்டும் விளக்கமாக எடுத்துரைத்தும் உள்ளார். மழைக்காவியம்,  குரவையிடல்,  வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து, கொம்பு விளையாட்டு, கண்ணகையம்மன் வழிபாடு, வதனமார் சடங்குவசந்தன்கூத்து (வேளாண்மை வெட்டு), கும்மி, புனலாட்டு, பப்புருவாகன் கூத்துநம்பிக்கைகள், குறிகேட்டல் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார் (மேலும்இதுபற்றி அறியஎன் வாய்மொழிப்பாடல்கள் நூலில் ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்னும் கட்டுரையைக் காண்க).

ஈழத்துப்பூராடனார் மக்களிடம் வழங்கும் பல வழக்குச் சொற்களையும்வழக்குத் தொடர்களையும் தம் நூலில் பதிவுசெய்துள்ளார். 'தம்பியுள்ளான் படைக்கஞ்சான்', தானாடாவிட்டாலும் தன் தசைகளாடும்', 'பிஞ்சிலே பழுத்துவிட்டாய்', 'தலைபோக வந்தது தலைப்பாகையோடு போனதடா', 'ஆட்டு மாட்டைக்கடித்தபுலி ஆயனையே எதிர்த்தாற்போல' என்னும் தொடர்கள் இதற்குச் சான்றாகும்.

ஈழத்துப்பூராடனார் வயற்களமக்களின் உழுதொழிற் சொற்களைப் பதிவு செய்யும் நோக்கமும் இந்நூலில் நிறைவேறியுள்ளது. போடியார், முல்லைக்காரன், அதிகாரி, வட்டை, கமக்காரன், வட்ட விதானையார், இழவான், கடியன், சலவைக்காரன், பதக்கடை, துமி, வதனமார் சடங்கு, உம்மாரி, வேளாண்மை வெட்டு முதலான எண்ணிறந்த சொற்களை நூலாசிரியர் இந்நூலில் பதியவைத்துள்ளார். அகரமுதலிகளில் இணையவேண்டிய ஈழத்தின் பேச்சுவழக்குச்  சொற்களை இந்நூல் தாங்கியுள்ளது.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். எனவே அண்மைக் காலமாகத் தமிழிலக்கிய வரலாறு உலக அளவில் விரித்து எழுதப்பட்டு வருகின்றது. கல்லூரி மாணவப் பருவத்திலேயே உலக அளவில் தமிழ்இலக்கிய வளர்ச்சி, தமிழ் ஆராய்ச்சி பற்றி அறிந்த நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபொழுது அயலகத்தமிழ் பற்றி அறியவும் ஆராயவும் தலைப்பட்டேன்.

1997 இல் அயலகத்தமிழ் என்னும் ஏடு தொடங்க முயன்றேன். அவ்வேட்டை மனத்தில் கொண்டே அயலகத்தமிழ் என்னும் ஒரு கட்டுரையை அந்நாளில் வெளியிட்டேன்(..நி). இவ்வாறு அயலகத்தமிழ் பற்றி அறியவும் ஆராயவும் வித்திட்டது அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்களின் நூல்களாகும். அப்பெருமகனாரின் கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலில் உழுதொழில் மக்களின் வாழ்வினை அறிந்து மகிழ்ச்சியுற்றிருந்தேன். உழவர்குடியில் பிறந்த எனக்கு  அந்நூலில் வேட்கை ஏற்பட்டமை வியப்பன்று. இந்நூல் தமிழகத்து மக்கள் அறியவேண்டும் என்னும் நோக்கில் மறுபதிப்பாக வெளியிட நினைத்தேன். அவ்வாறு வெளியிட இசைவு தந்ததுடன் தமிழகப் பதிப்பிற்கான வழிகாட்டலையும் ஈழத்துப்பூராடனார் வழங்கினார். அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் நன்றி உரியவாகும்.

முதற்பதிப்பில் இருந்த சில எழுத்துப்பிழைகள் இப் பதிப்பில் களையப்பட்டுள்ளன. வடிவமைப்பில் சில செப்பங்களைச் செய்துள்ளேன். எழுத்து வடிவம் முதற்பதிப்பில் பழைய எழுத்து வடிவில் இருந்தது. இப்பதிப்பில் தமிழக அரசு பின்பற்றும் எழுத்துவடிவம் பின்பற்றப்பட்டுள்ளது.


கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலை அச்சிட உதவிய அண்ணன்மார் கே.அறிவுமதி, வே.இளங்கோ, .தேவநேயன், பொறியாளர் இராச.கோமகன், கணேசமூர்த்தி (சோதி எண்டர்பிரைசசு), வடிவமைப்பில் உதவிய வசந்தகுமார், தட்டச்சில் உதவிய தங்கை இரமா ஆகியோர்க்கு என்றும் நன்றியன்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி-605 003

13.12.2007