நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

சிந்தனைக் கவிஞர் பனப்பாக்கம் கு. சீத்தா

பனப்பாக்கம் கு. சீத்தா

பாவேந்தர் பாரதிதாசன் குயில் இதழைப் படித்தவர்களுக்கும், உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதை இதழ்களைப் படித்தவர்களுக்கும் நன்கு அறிமுகமான பெயர் பனப்பாக்கம் கு. சீத்தா என்பதாகும். திராவிட இயக்கச் சிந்தனையும், தமிழ்ப்பற்றும் கொண்ட பனப்பாக்கம் கு. சீத்தா அவர்கள் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். பன்னூலாசிரியராகவும், பல கவியரங்க மேடைகளில் தித்திக்கும் கவிதைகளைப் படைத்தவராகவும் விளங்கும் இவர்தம் வாழ்க்கைப் பயணம் வற்றாத கவியாறாக ஓடியுள்ளது.

விழுப்புரத்தை அடுத்துள்ள பனப்பாக்கம் என்னும் ஊரில் திருவாளர்கள் குப்புசாமி, வீரம்மாள் ஆகியோரின் மகனாக கு. சீத்தா 24. 10. 1937 இல் பிறந்தவர். கு. சீத்தாராமன் என்பது இவர்தம் இயற்பெயராகும். பனையபுரத்தில் தொடக்கக் கல்வியும், விக்கிரவாண்டியில் (விக்கிரம பாண்டிய புரம்) நடுநிலைக் கல்வியும், வளவனூர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியும் பெற்றவர். இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். அதன் பிறகு பி.லிட், முதுகலைப் பட்டம் என்று தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்தவர். வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக இருந்து 1995 இல் பணி ஓய்வு பெற்றவர்.

பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் 1962 இல் திருமதி இந்திராணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அன்புச்செல்வி, அறிவுச்செல்வி, அறிவண்ணல், அனிச்சமலர் ஆகிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

இராஜாஜியின் குலக்கல்வித்திட்டம் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றவர். ஆசிரியர் போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறைசென்றவர்.

பனப்பாக்கம் கு. சீத்தா அவர்கள் குயில், தென்றல், திராவிடநாடு, நம்நாடு, முரசொலி, முல்லை, காவியம், இலக்கியம், கவிதாமண்டலம், நமது நாடு உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து கவிதை எழுதியவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார், உவமைக்கவிஞர் சுரதா, கவியரசு கண்ணதாசன், கவியரசு முடியரசன், பாவலர் வாணிதாசன் ஆகியோர் தலைமையில் கவியரங்கேறியவர். இவர்தம் கவிதைகளையும் தமிழ்ப்பணிகளையும் ஆராய்ந்து பலர் பட்டம் பெற்றுள்ளனர்.

பனப்பாக்கம் கு. சீத்தா அவர்களின் நூல்கள் பாட நூல்களாக இருந்துள்ளன. இவர் தமிழ்நாட்டரசின் பாடநூல் குழுவில் இடம்பெற்று 11 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களின் ஆசிரியராக இருந்தவர். மலேசியாவில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மறை ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டவர்.

'கு. சீத்தாவின் பாட்டுப்பயணம்' என்ற திங்கள் இதழை நடத்தியவர். 1958 இல் தமிழ் எழுத்தாளர் மன்றம் தொடங்கியவர். பாவேந்தர் பாரதிதாசனுக்கு விழா எடுத்த பெருமைக்குரியவர். புலிக்கொடியோன், பனப்பாக்கம் கு. சீத்தாவின் பாட்டுப்பயணம் (இரு தொகுதிகள்), பாட்டரங்கப் பயணம்(இரு தொகுதிகள்) முதலியன இவரின் நூல்களாகும். மதியொளி என்ற கையெழுத்து ஏட்டை மாணவப்பருவத்தில் நடத்தியவர்.

உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வருபவர்.

பனப்பாக்கம் கு.சீத்தா அவர்கள் பெரியார் படைப்புகள், அண்ணா படைப்புகள், திருக்குறள், உள்ளிட்ட நூல்களைக் கொண்ட ஆய்வு நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

1978 இல் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் பாவேந்தர் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். 1991 இல் பாவேந்தர் விருது பெற்றவர். கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் உள்ளிட்ட சிறப்புக் கவியரங்கங்களில் பங்கேற்றவர். 

பனப்பாக்கம் கு.சீத்தா அவர்கள் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதைகளைப் போல் உயிரோட்டமான கவிதை வடிப்பதில் வல்லவர்.

புதுச்சேரி, சென்னை, திருசிராப்பள்ளி, சீன வானொலிகளில் இவரின் உரைகள் நேர்காணல்களாக ஒலிபரப்பப்பட்டுள்ளன.


தமிழ் வாழ்க்கை வாழ்ந்துவரும் சிந்தனைக் கவிஞர் பனப்பாக்கம் கு. சீத்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை: