நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

பேராசிரியர் தெ.முருகசாமி அவர்கள்

பேராசிரியர் தெ.முருகசாமி

தமிழ் இலக்கியப் பரப்பில் நினைவுகூரத் தக்க அறிஞர்களுள் முனைவர் தெ. முருகசாமி அவர்கள் சிறப்பிடம் பெறுபவர் ஆவார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய இவர் தமிழ் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகளை வரைந்து வருபவர். தமிழ்ப்புலமையும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இவர்தம் வாழ்க்கைக் குறிப்பை இவண் பதிந்து வைக்கின்றேன்.

முனைவர் தெ. முருகசாமி அவர்கள் கடலூர், ‘புரூக்சுபட்டு’ என்னும் ஊரில் 18. 04. 1943 இல் திருவாளர்கள் தெய்வநாயகம், தனபாக்கியம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள வண்டிக்காரன்பாளையம் என்னும் ஊரில்தான் பேராசிரியர்கள் இரத்தினசபாபதி, இராசாக் கண்ணனார், நடேச முதலியார், ஆ. சிவலிங்கனார், சுந்தரசண்முகனார் உள்ளிட்ட அறிஞர்கள் பிறந்து, தமிழுக்குத் தொண்டு செய்தனர்.

புருக்சுபட்டு என்னும் ஊர் ஆங்கிலேய அதிகாரி ஒருவரின் பெயரில் அமைந்த ஊராகும். இந்த ஊர் இறைவனை  வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள்  “புருடேசர் நகர்க் குகனே” என்று புகழ்ந்து ஒரு பதிகம் பாடியுள்ளார்.

தெ.முருகசாமி அவர்கள் கடலூர் முதுநகரில் தொடக்க, உயர்நிலைக் கல்வி பயின்றவர். பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிறகு மயிலம் கல்லூரியில் தமிழ் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, பி.ஓ.எல்., முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மயிலம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்று(1970), கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி 2000 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றவர். இதழ்களுக்குக் கட்டுரை வரைதல், இலக்கியப் பொழிவு நிகழ்த்துதல், சமய இலக்கியங்களைப் பயிற்றுவித்தல் போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.

பேராசிரியர் தெ.முருகசாமி அவர்கள் மிகச் சிறந்த கட்டுரையாசிரியர் ஆவார். இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள், வழிபாடு குறித்து அரிய கட்டுரைகள் வரைந்துள்ளார். செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, குமரகுருபரர், மக்கள் சிந்தனை, உழவாரம், மெய்கண்டார், தெளிதமிழ், தினமணி, பொதுமறை (மதுராந்தகம்) உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருபவர். தமிழகத் திருக்கோயில்களில் வடமொழி அர்ச்சனை கூடாது என்று ஆணித்தரமாக எழுதி, உண்மை விளக்கியவர்.

அகநானூறு - களிற்று யானை நிரைப் பகுதிக்கு உரைவரைந்த பெருமைக்குரியவர். அரிமளம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், திருப்போரூர் முருகன் சந்நிதி முறை உள்ளிட்ட நூல்களுக்கு உரை வரைந்தவர். தவத்திரு. குன்றக்குடி அடிகளார் நூல்கள் தொகுப்பாக வெளிவந்தபொழுது அதன் உருவாக்கத்தில் பணிபுரிந்தவர்.

தெ.முருகசாமி அவர்கள் 1964 இல் பி.ஓ.எல். படிக்கும் காலத்தில் நேரு அவர்களின் பிறந்தநாள் நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதுபொழுது நடைபெற்ற இசைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதன் காரணமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொணடு டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களில் கையால் பரிசு பெற்றவர்.

முனைவர் அப்துல் கலாம் அவர்களின் கையால் சங்க இலக்கிய நூல்கள் தில்லியில் வெளியிட்டபொழுது, அவரால் சிறப்பிக்கப்பட்டவர்.

தமிழ் இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறித்த பெரும்புலமை கொண்ட பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு விளக்கும் தொடர்ப்பொழிவுகளைச் செய்துவருகின்றார்.

பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் தமிழ்போல் நெடிது வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.



கருத்துகள் இல்லை: