நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 நவம்பர், 2015

இசைக்கொண்டல் நெல்லை ஆ.சுப்பிரமணியன்



நெல்லை ஆ.சுப்பிரமணியன்

ஏழுவண்ணக் கொடி பறக்குது - அதில் 
எங்கள் எண்ணம் குடியிருக்குது

என்ற பாடல் வரிகள் திருச்சிராப்பள்ளி வானொலியைத் தொடர்ந்து கேட்பவர்களுக்கு நினைவுக்கு வரும். கூட்டுறவுச் சங்கத்தின் பெருமையை விளக்கும் வகையில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் எழுதி(1976), நெல்லை ஆ. சுப்பிரமணியன் அவர்கள் இசையமைத்த மேற்கண்ட பாடல் வரிகள் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஈர்க்கும் தன்மையுடையன. இந்தப் பாடலுக்கு இசையமைத்த நெல்லை ஆசுப்பிரமணியன் அவர்கள் புதுச்சேரியில் தம் மகள் வீட்டில் இருப்பதாகவும், சென்று சந்திக்கும்படியும் திருச்சிராப்பள்ளிப் பொறியாளர் செ. அசோகன் ஐயா அன்பு வேண்டுகோள் விடுத்தார். எனக்கு இருந்த அலுவல் அழுத்தங்களில் இந்தச் செய்தியைப் பலநாள் மறந்திருந்தேன்.

இன்று (27.11.2015) அலுவலகப் பணி முடித்து இல்லம் திரும்புவதற்கு வெளியே வந்தபொழுது, நெல்லையார் நினைவு வந்தது. சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைச் சொல்லி ஐயாவிடம் இசைவு பெற்றேன். புதுச்சேரியின் எல்லைப் பகுதியில் புதியதாக உருவாகும் நகருக்கு வரச் சொன்னார்கள். குறிப்பிட்ட நகரில் நுழைந்து வீட்டைத் தேடிப்பார்த்து, கண்டுபிடிக்க இயலாமல் திரும்பத் தொடங்கியபொழுது, மீண்டும் ஐயாவிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. முகவரி தெரியாமல் திகைத்ததை அவர்கள் புரிந்துகொண்டு, தம் மருகரை அனுப்பி, இல்லத்திற்கு அழைத்து, அறிமுகம் ஆனார்கள். மாலை நான்கரை மணிக்கு உரையாடத் தொடங்கிய நாங்கள் இரவு எட்டரை மணி வரை உரையாடினோம். உரையாட்டிலிருந்து சில துளிகள்:

நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்கள் எண்பது அகவை நிரம்பிய பெருமகனார். திருச்சிராப்பள்ளி வானொலியில் 1979 முதல் 1993 வரை இசையமைப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அதற்கு முன்பாக 1949 முதல் 1978 வரை திருச்சிராப்பள்ளி வானொலியில் பங்கேற்புக் கலைஞராக இருந்தவர். பல்வேறு இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்குரியவர். பல்வேறு இயக்குநர்களின் கீழ் வானொலி நிலையத்தில் பணிபுரிந்தவர். இவர் வழங்கிய இசை நிகழ்வுகளும், இசைப் பங்களிப்புகளும் தமிழிசை வரலாற்றில் குறிக்கத்தகுந்தன.

நெல்லையார் திருக்குறளின் 133 அதிகாரங்களிலும் இடம்பெற்றுள்ள 1330 குறட்பாக்களையும் இசையமைத்துப் பாடி, அனைவரின் பாராட்டையும் பெற்றவர். திருச்சிராப்பள்ளி வானொலியில் கீர்த்தனாஞ்சலிஎன்ற பெயரில் ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 7 மணிக்கு இவர் தியாகராசரின் கீர்த்தனைகளுக்கு விளக்கம் சொன்ன முறை இசையார்வலர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்வாகும். அதுபோல் திருமுறைத் தேனமுதம்என்ற நிகழ்வின் வாயிலாகப் பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முதன்மையான இசைப்பாடல்களைத் தருமபுரம் சுவாமிநாதன் உள்ளிட்ட ஓதுவார்களின் குரலில் ஒலிக்கச் செய்த பெருமையும் நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்களுக்கு உண்டு. ‘சந்தத் தமிழ்ப்புனல்என்ற தலைப்பில் திருப்புகழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து மக்களுக்கு இசைவிருந்து படைத்தமையும் இவர் வாழ்க்கைப் பக்கங்களில் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். பதினான்கு ஆண்டுகள் திருச்சிராப்பள்ளி வானொலியில் இவையொத்த இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கியுள்ளார்.

நெல்லை ஆ. சுப்பிரமணியன் செட்டிநாட்டுப் பகுதியான பள்ளத்தூரில் பிறந்தவர். திருச்சி வானொலியில் நிறைய சுப்பிரமணியன்கள் இருந்தனர். எனவே இவரின் முன்னோர்கள் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் நெல்லை ஆ. சுப்பிரமணியன் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.

நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்கள் பள்ளத்தூரில் எட்டாம் வகுப்புவரை பயின்றவர். இசையில் இளம் அகவை முதல் ஆர்வம் இருந்ததால் இசையாசிரியர்களிடம் முறையாக இசைபயின்றவர். தம் 16 ஆம் அகவையில்  கோட்டையூர் கோயிலில் இவரின் இசையரங்கேற்றம் நடைபெற்றது.

நெல்லையாரின் இளம் அகவையில் அதாவது இவரின் ஏழாம் அகவையில் பள்ளத்தூரில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. பள்ளத்தூர் கோயிலுக்கு அருகில் மேடையமைத்து, பெருந்திரளாசைவ சமய ஈடுபாட்டாளர்கள் கூடியிருந்தனர். தவத்திரு. மறைமலையடிகளார் தலைமையில் மாநாடு நடைபெற்றது. அப்பொழுது ஊர்ப் பெரியோர்கள் 7 அகவை கொண்ட சுப்பிரமணியனை மறைமலையடிகளின் திருமுன்பாகத் திருவாசகம் பாடும்வகையில் மேடையேற்றினர். திருவாசகத்தின் திருக்கோத்தும்பிப்பாடல்களையும், ‘பால் நினைந்தூட்டும்பாடலையும் பாடியபொழுது மழலைச் செல்வனின் இனிய குரலினை அடிகளார் வியந்து பாராட்டினார்இந்த நிகழ்ச்சிக்கு நீதியரசர் எம் . எம். இஸ்மாயில், பாஸ்கரத் தொண்டைமான், சரவண முதலியார் முதலான அறிஞர்கள் வருகை தந்திருந்தனர்.

கண்டரமாணிக்கம்(திருப்பத்தூர்) என்னும் ஊரில் தவத்திரு. வாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி, அவர் கையால் அந்த நூலினைப் பரிசாகப் பெற்றவர். இளமைப் பருவம் முதல் இவர்களைப் போன்ற அருளாளர்களின் ஊக்கம் நெல்லை சுப்பிரமணியன் அவர்களை இசைத்துறையில் ஈடுபாடுகொள்ள வைத்தது.



தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்'

என்னும் குறட்பாக்களைத் தம் வாழ்நாளில் பின்பற்றத் தகுந்த குறள்களாக நினைத்துப் பார்க்கின்றார்.

செட்டிநாட்டைச் சேர்ந்த பழ. அண்ணாமலை அவர்கள் நெல்லை சுப்பிரமணியன் அவர்களை இளமையில் நன்னெறிப்படுத்தியவராவார். தமிழறிஞர் கி. பெ. விசுவநாதம் அவர்கள் கோவையில் பேசிய ஒன்றரை மணி நேரப் பேச்சொன்று அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களால் பதிவு செய்யப்பெற்றுப் பாரி நிலையம் வழியாக வள்ளுவரும் குறளும்என்ற தலைப்பில் நூலுருவம் பெற்றது. அந்த நூலைக் கற்றதால் திருக்குறளில் நெல்லை ஆ. சுப்பிரமணியன் அவர்களுக்கு டுபாடு ஏற்பட்டது.

திருச்சியில் ஒவ்வொரு மாதமும் நெல்லை மாவட்டக் குழுவின் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதில் தொடர்ந்து பேசிய பேராசிரியர் இராதாகிருஷ்ண ஐயர் அவர்கள் திருக்குறளுக்கு விளக்கம் சொல்லுவார். அவரின் விளக்கத்திற்கு முன்பாக ஒவ்வொரு அதிகாரக் குறட்பாக்களும் நெல்லை ஆ. சுப்பிரமணியன் அவர்களால் பொருத்தமான இசையில் பாடப்படும். இனிய ஓசையில் பாடல் அமைவதால் ஒவ்வொரு மாதமும் பார்வையாளர்களின் வருகை அதிகரித்தவண்ணம் இருந்தது. திருக்குறளில் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்களுக்கு இருந்ததால் கருத்துக்குத் தகுந்தபடி 133 அதிகாரத்தையும் 133 இராகங்களில் பொருத்தமான வகையில் பாடினார்(1961-1965). இவரின் திருக்குறள் பணியை அறிந்த திருக்குறள் வீ.முனுசாமியார் இவர்களுக்கு ‘இசைக் கொண்டல்’ என்ற விருது வழங்கிப் பாராட்டினார்.

நெல்லை ஆ. சுப்பிரமணியனாரின் வாழ்க்கைக் குறிப்பு

காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் 15. 05. 1935 இல் திரு. ஆண்டியப்பப் பிள்ளை, இரத்தினம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர்.  இவரின் முன்னோர்கள் நெல்லையை அடுத்த முந்நீர்ப்பள்ளம் ஊரினர். இளமை முதல் இசையீடுபாடு நெல்லையாருக்கு இருந்தது. பல இசை அறிஞர்களிடம் தொடர்ந்து இசையறிவு பெற்றவர். வீணை வித்துவான் காரைக்குடி சாம்பசிவ ஐயர் அவர்களின் சீடர் கொத்தமங்கலம் கணபதி சுப்பிரமணியம் ஐயர் அவர்களிடம் இசை பயின்றவர்.

இவரின் முதல் இசை அரங்கேற்றம் 1949 இல் நடைபெற்றது. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இவரின் அரங்கேற்றத்துக்கு வயலின் வாசித்தவர். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். 1949 முதல் திருச்சிராப்பள்ளி வானொலியில் வாய்ப்புகள் பெற்றுப் பாடத் தொடங்கினார். 1979 முதல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பணியில் இணைந்து இசைச் சித்திரங்கள், இசை நாடகங்கள், சர்வ சமய நல்லிணக்கப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், சேர்ந்திசை எனப் பல நிகழ்ச்சிகளின் வாயிலாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மணிமேகலை காவியம் இவரால் இசை வடிவம் பெற்றது. மதுரை வானொலி நிலையம் தயாரித்த சிவகாமியின் சபதம் 56 வார நெடுந்தொடர் இவரால் இசையமைக்கப்பட்டது. இரமண தீபம், இரட்சண்ய யாத்திரிகம் உள்ளிட்ட இசைத் தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார்.

வானொலி நிலையப் பணியின்பொழுது இவரால் இசையமைக்கப்பட்ட கிராமிய இசை நிகழ்ச்சிகள் தேசிய அளவிலும், சார்க் நாடுகளின் அளவிலும் விருதுகளைப் பெற்றுள்ளன; ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவர் இசையமைத்த ‘தொட்டில் முதல் தொட்டில்வரை’ என்ற நிகழ்ச்சி 1989 இல் ஆறு நாடுகளில் ஒரே நேரத்தில் ஒலிபரப்பானது.

தமிழிசை நிகழ்ச்சிகளுக்குத் தாமே பொறுப்பேற்று நெறிப்படுத்தியுள்ளார். தமிழிசை மரபு குன்றாமல் இருப்பதற்கு, எழுபதிற்கும் மேற்பட்ட இசையறிஞர்களின் பாடல்களை ஒலிபரப்பியுள்ளார்.

அனைத்து இந்திய வானொலியின் Music Composer, இந்திய அரசின் Song and Drama Division பிரிவால்  Expert Music Composer என்று தகுதி காணப்பெற்றவர்.

பக்திப் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த கவிஞர்களை நாட்டுப்பற்று ஊட்டும் பாடல்களை எழுதச் செய்தவர்.

வேளாண்மைத் துறைக்கு உதவியான கருத்துகளைக் கொண்ட( புகையான், பூச்சிக்கொல்லி, எலி ஒழிப்பு, கூட்டுறவு போன்ற) பாடல்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எளிய மெட்டுகளைக் கொண்டு இசையமைத்துப் பணிபுரிந்தவர்.

அருணகிரிநாதரின் வரலாறு ‘இசைக் கோபுரம்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபொழுதும், முத்துத்தாண்டவர் இசை நாடகம் உருவான பொழுதும் அவைகளுக்கு இசையமைத்தமை குறிப்பிடத்தக்க பணிகளாகும்.

நெல்லை. ஆ.சுப்பிரமணியன் அவர்களின் இசையமைப்பில்  பாம்பே சரோஜா, பாம்பே இலலிதா வாணி ஜெயராம், ஜிக்கி, சூலமங்கலம் சகோதரிகள், ஜமுனா ராணி, டி.எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிதம்பரம், ஏ.எல். இராகவன், டி. எல். மகாராஜன், டி. எல். தியாகராஜன், வீரமணி, ஜாலி ஆபிரகாம், எஸ். என். சுரேந்தர், டி.என். சேஷகோபாலன், இராஜ்குமார் பாரதி, புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டவர்கள் பாடியுள்ளனர்.

நெல்லை ஆ.சுப்பிரமணியன் அவர்களின் தமிழிசைப் பணியைப் பாராட்டித் தமிழ்நாட்டரசு 'கலைமாமணி' என்னும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழிசைத் துறையில் ஈடுபட்டு உழைத்தாலும், திருக்குறள் போன்ற நூலைப் பாடிய இப்பெருமகனாரின் குரல் ஒலி பதிவுசெய்து பாதுகாக்கப்படாமல் போனமை தமிழிசையின் போகூழ் என்றே சொல்லவேண்டும்.

நெல்லை ஆ. சுப்பிரமணியன் அவர்களின் துணைவியார் திருமதி. செல்லம்மாள் ஆவர். இவர்களுக்குச் சரவணபவன், ஆண்டியப்பன் என்னும் இரு மகன்களும், நிறைமதி என்ற மகளும் உண்டு.

திருச்சிராப்பள்ளியில் நிறைவாழ்க்கை வாழ்ந்துவரும் இசைமேதை நெல்லை. ஆ. சுப்பிரமணியன் அவர்களுக்கு நம் வணக்கமும் வாழ்த்துகளும்!




கருத்துகள் இல்லை: