நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 28 அக்டோபர், 2014

காரும் மாலையும் முல்லை…


படப்பிடிப்புக் காட்சி


படப்பிடிப்புக்காட்சி

இலக்கியம் பயிலத் தொடங்கியதிலிருந்து கார்காலம், மாலைநேரம், மாலைநேரத்தில் பீர்க்கம்பூ பூக்கும், ஆநிரைகள் வீடு வந்து சேரும், ஆயர்கள் வரும்வரை இல்லில் பெண்டிர் காத்திருப்பர் என்பதைத் தொடர்ந்து கேட்கவும் படிக்கவுமாக இருந்துள்ளேன்.

அப்பொழுது மருத நிலத்தில் (வயலும் வயல்சார்ந்த இடமும்) இருந்தபடி முல்லைநில (காடும் காடு சார்ந்த இடமும்) வாழ்க்கையைப் படிக்க நேர்ந்தது. சிலபொழுது நெய்தல் நிலம் (கடலும் கடல்சார்ந்த இடமும்) சார்ந்த வாழ்க்கையையும் வாழ நேர்ந்தது. ஆனால் முல்லைநிலத்தைப் பார்த்ததோடு சரி. அங்கு வாழ்ந்தது இல்லை. அதனால் முல்லைநிலத்தில் ஒருநாளாவது வாழ்வோமே என்று நினைத்துக்கொண்டிருந்தபொழுதுதான் அது நேர்ந்தது.

பெரும்பாணாற்றுப்படையில் வரும் தொடுதோல் மரீஇ.. எனத் தொடங்கும் பாடலடிகள் முற்றாக ஆயர்மகன் ஒருவனின் வருணனையைக் கொண்டுள்ளதை அந்த அடிகளை ஆழமாகக் கற்கும்பொழுது அறிந்தேன். முல்லைநிலத்தில்தான் தமிழர்களின் இசைக்கருவிகள் தோன்றியுள்ளன என்ற குறிப்பையும் இப்பாடலடிகள் தருகின்றன. இந்த அடிகளை நம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சு. அவர்கள் பாடிக்காட்டிய முறைமையை அறிந்ததிலிருந்து அதனைக் காட்சிப்படுத்திப் பார்ப்போம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

முதலில் ஆயர்குல மகனாக யாரை நடிக்கவைப்பது என்று சிந்தித்தபொழுது திரைப்பட இயக்குநர் அண்ணன் .கௌதமன் அவர்கள் என் எழுத்தாளர் நண்பர் ஒருவரை நடிக்கவைக்கலாம் என்று கருத்துரைத்தார். அவர்தான் சரியான தேர்வாக எனக்கும் தெரிந்தது. ஆனால் அவருக்கு வேறொரு பணி இருந்ததால் அந்தத் தேர்வு பொய்த்தது. அதுபோல் ஒளி ஓவியர் யார் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். பழைய   ஒளி ஓவியர் கிட்டவில்லை. என் பொருள்நிலைநோக்கிப் புதியதாக ஓர் ஒளி ஓவியரைத் தேர்ந்தெடுத்தேன். வேறொரு சூழலில் புதியதாகக் கிடைத்த இலக்கிய நண்பர் ஒருவரை நடிக்க வரும்படி அழைத்தேன். அவர் உடனடியாக வருவதற்கு இசைவு தெரிவித்தார்.

நானூறுக்கும் குறையாத நாட்டு மாடுகள் தமிழகத்தில் ஓரிடத்தில் கிடைக்குமா என்று என் நண்பர்கள் பலரையும் தொடர்புகொண்டு கேட்டுப் பார்த்தேன். பலரும் மாடுதேடும் படலத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஒருமுறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளைக் கடந்ததைப் பார்த்த நினைவு எனக்கு வந்தது. சாலைகளில் மாடுகள் கடக்கும் என்று அறிவிப்புப் பலகையும் அங்கு இருந்தது. மாடுகள் கடக்கும்வரை இடையூறின்றி நாம் காத்திருக்க வேண்டும். இலங்கைச் சாலைகளில் தயிர்ப்பானைகளும் விற்பனைக்கு இருந்தன.

என் கல்லூரி நண்பர் திரு. முத்து அவர்களிடம் படப்பிடிப்பு உரிய வகையில் நடக்க நானூறு நாட்டுமாடுகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் மாடு உள்ள இடத்தை அடையாளம் கண்டு இசைவும் பெற்றுவிட்டார். நாடு கிடைத்தாலும் கிடைக்கும். நாட்டுமாடு கிடைக்காது போலும். பாலுக்கு ஆசைப்பட்டு இனக்கலப்பு தமிழகம் முழுவதும் மாட்டிலும் நிகழ்ந்துவிட்டது.

மாடு கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு மகிழ்வுந்து அமர்த்திக்கொண்டு ஒளி ஓவியருடன் சேலம் நோக்கிப் புறப்பட்டோம். விழுப்புரத்தில் இரவுப்பொழுதில் செந்நிறப் பானைகள் இரண்டை வாங்கிக்கொண்டோம். ஆயர்மகன் தீமூட்டிக் குழல் செய்வதற்குத் தேவைப்பட்டது. இரவு உணவை உளுந்தூர்ப்பேட்டையில் உண்டோம். மூன்று மணிநேர ஓட்டத்திற்குப் பிறகு சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ஆத்தூரில் தங்கினோம். நண்பர் முத்து அவர்கள் எங்களை வரவேற்க விடுதிக்கு வந்திருந்தார். நண்பர்களுடன் உரையாடியவாறு காலையில் படப்பிடிப்புக்கு வேண்டியவற்றைச் சிந்தித்தோம்.

ஆயர்மகன் குடிப்பதற்குக் கூழ் தேவைப்பட்டது. இரவு பதினொரு மணிக்கு நண்பர் முத்து அவர்கள் கூழ் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வைகறை நான்கு மணிக்கு எங்கள் குழுவினர் எழுந்து கடன்முடித்தோம். ஆயர் மகனாக நடிக்கும் அறின் சென்னையிலிருந்து ஆத்தூருக்குத் தொடர்வண்டியில் வந்துசேர்ந்தார். காலை 5 மணிக்கு வந்து எங்களுடன் இணைந்துகொண்டார். மகிழ்வுந்து புறப்பட்டு திரு. முத்து அவர்களின் இல்லம் நோக்கிச் சொன்றது. அங்குக் கூழையும் பானையையும் எடுத்துக்கொண்டோம். கொல்லிமலைக் கேழ்வரகின் சுவையைச் சுவைத்து மகிழ்ந்தோம்.

எங்கள் வண்டி முல்லைநிலம் நோக்கிப் புறப்பட்டது. நண்பர்கள் சிலர் எங்களுக்காக வழியில் காத்திருந்தனர். திரு. செயராமன் அவர்கள் உள்ளூர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். திரு. பாம்பையன் அவர்கள் எங்களுக்காகத் தம் மாநாடுகளை ஒரு கறட்டில் தேக்கி வைத்திருந்தார்.

காலை 7 மணிக்கு நாங்கள் படப்பிடிப்புக் களத்திற்குச் சென்றுசேர்ந்தோம். இடையில் பாக்கும், மஞ்சளும், சோளமும் பசுமையைப் பரிசாக நீட்டி எங்களை வரவேற்றன. வரும்பொழுது நின்றுபேசுவோம் என்று இயற்கைக்குப் பதிலுரைத்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். நான்கு பக்கமும் மலையும் காடுமான ஒரு முல்லைநிலப் பகுதி ஓவியத்தில் தீட்டியது போல் கண்முன் இருந்தது. இரவு மழைபெய்திருந்ததால் நிலம் குளிர்ச்சியாக இருந்தது. மழையின் காரணமாக மாடுகள் மேட்டுநிலத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தன. இந்த மாநாடுகள் மழையில் நனைந்தாலும், வெயிலில் காய்ந்தாலும் தாங்கிக்கொள்ளும் வகையில் உடல்வாகு பெற்றிருந்தன. மாடுகளின் கால்கள் குதியப்பட்டு, குழுவாக இருந்தன. கன்றுகள் சில இளம் வெயில் தாங்காமல் நிழல்தேடித் தாயின் நிழலில் அடைந்து கிடந்தன. சில நிழல்தேடி மெதுவாக நடந்து பார்த்தன. புல்லைக் கொறித்துப் பார்த்தன சில. கன்றுகள் எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பல நாள்களாகத் தேடிய இயற்கை அழகு எங்கள் கண்களைக் குளிர்வித்தன. நண்பர்கள் திரு. முத்து, திரு. செயராமன் உள்ளிட்டோர் எங்களைத் திரு. பாம்பையன் பொறுப்பில் விட்டுவிட்டுப் புறப்பட்டனர்.

புகைப்படக் கருவியை ஒளி ஓவியர் எடுத்து, இருந்தும், கிடந்தும், நின்றும், ஓடியம், தவழ்ந்தும் பல கோணங்களில் படமாக்கினார்.  மாடுகளும், கன்றுகளும் எங்கள் கருவிகளுக்குள் சிறைப்பட்டன. தேவையான கோணங்களில், விருப்பங்களில் காலை பதினொரு மணி வரை படமாக்கினோம். கதிரவனின் வெப்பக்கதிர்கள் தன் சினத்தை வெளிப்படுத்தியபொழுது மாடுகள் மேய்ச்சலுக்குப் புறப்பட்டன. காடுவரை கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பினோம்.

அதற்குள் காலை உணவை எங்கள் ஓட்டுநர் எங்களுக்காக  வாங்கி வந்திருந்தார். மணிமேகலையில் இடம்பெறும் காயசண்டிகையின் யானைத்தீ போன்று பசி எங்களை வாட்டி வதைத்தது. ஆர்வமுடன் கிடைத்த உணவை உண்டுமுடித்தோம். காலை உணவுக்குப் பிறகே அனைவருக்கும் நல்ல “நெகா” வந்தது. அடுத்து, இருந்தஇடத்தில் எடுக்கும் காட்சிகளைத் திட்டமிட்டு எடுத்துமுடித்தோம். ஆயர்மகன் கூழார் இடையனாக அமைந்த காட்சி, செந்தீ தொட்ட காட்சி, படலைக் கண்ணியனாக நடமாடும் காட்சிகள் படமாயின.  அதற்குள் பகலுணவையும் எங்கள் ஓட்டுநர் வாங்கிவந்தார்.

அந்த ஊரில் மாவு அடைதான் பகலுணவாகக் கிடைத்தது. ஆளுக்கு நாலு மாவுஅடை(பரோட்டா) வந்து சேர்ந்தது. உண்மையாக மாடுமேய்க்கும் பாம்பையன் குழுவுக்கும் மாவு அடை வாங்கி வந்தோம். அனைவரும் மகிழ்ச்சியாக ஒரு சிறுகுடில் அருகிருந்த மாமர நிழலில் வயிறார உண்டோம். பிற்பகல் மூன்று மணியானது. இனி மாடுகள் காட்டிலிருந்து தண்ணீர்குடிக்க நீர்நிலைக்குத் திரும்பும் என்றார்கள். புதுச்சேரிக்குப் புறப்படுவதற்கு அணியமாக எங்கள் உடைமைகளைப் மகிழ்வுந்தில் வைத்துவிட்டு மீண்டும் மாடுகளை வரவேற்க, காட்டைநோக்கிப் புறப்பட்டோம். மாடுகள் எங்களைப் பார்த்து விரட்ட வாய்ப்பு இப்பொழுது உள்ளது என்று திரு. பாம்பையன் குறிப்பைச் சொல்லிவிட்டு, மாடுகளைக் கீழிறக்க, காட்டை நோக்கிச் சொன்றிருந்தார். அனைவரும் பாதுகாப்பாக உரிய இடங்களில் இருந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம்.

மாடுகளும் கன்றுகளுமாக ஒவ்வொன்றாக நீர்நிலை நோக்கி வந்தன. பெரிய காளைகள் இப்பொழுது மாடுகளுக்குப் பாதுகாவலர்கள் போல் வந்தன. அதன் திமில்களும், கொம்புகளும் எங்களுக்கு அச்சத்தைத் தந்தன. ஆனாலும் அவை அழகிய ஆவின் மையலில் இருந்ததால் எங்களை அது பொருட்படுத்தவில்லை. கன்றுகள் சில புதியதாகத் தெரிந்தன. அங்கு வந்த திரு. பாம்பையன் சொன்னார்: நேற்று மேய்ச்சலுக்குச் சென்ற ஒரு மாடு திரும்பவில்லை. சினை மாடு. இரவு மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் கன்றுபோட்டு, இரவு முழுவதும் கன்றைப் பாதுகாத்து, காலையில் மேயச் சென்ற மாடுகளுடன் இணைந்து இப்பொழுது வந்துள்ளதைச் சொன்னார். அந்த மாட்டையும் கன்றையும் பார்த்தபொழுது ஈன்றணிமைத்தாய் இருந்தது. நேற்றுப் பிறந்த இளம் கன்று மெதுவாகத் தாயுடன் நடந்து சென்றமையைக் கவனித்தபொழுது சீறாப்புராணத்தில் நபிபெருமானைக் காண்பதற்குப் புறப்பட்ட இளம் மறியாகத் தெரிந்தது.

மாலைநேரம் என்பதால் மழைக்கு உரிய கருமுகில்கூட்டங்கள் வானுக்கு அழகுசேர்த்து நின்றன. மயில்கள் அங்குமிங்கும் அகவிக்கொண்டே இருந்தன. சில மயில்களைப் பார்த்தோம். மழைநேரத்தில் கூட்டமாகத் தோகைவிரித்தாடும் என்றார்கள். சோளங்களை வீசியெறிந்தால் அவற்றை உண்ணக் கூட்டமாக வரும் என்ற குறிப்பையும் அறிந்தோம். வேண்டிய காட்சிகளைப் படமாக்கிக்கொண்டு அனைவரிடமும் நீங்கா விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

இடையில் மஞ்சள்செடிகளும் சோளப்பயிர்களும் எங்கள் ஓளிப்படக் கருவிக்குள் கட்டுண்டன. தொடுதோல் என்று பெருபாணாற்றுப்படையில் வரும் செருப்பைப் படமாக்க மறந்தது அப்பொழுதுதான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது.

காலையில் செருப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். என்றாலும் படம் எடுக்கும் பரபரப்புகளுக்கு இடையில் செருப்புக்காட்சி எடுக்காமல் விடுபட்டிருந்தது. கடைத்தெருவை அடைந்து 98 அகவையுடைய திரு. இராசு நாயுடு அவர்களைக் கண்டு அவரிடம் இருந்த பழைமையான தோல்செருப்பைக் கேட்டபொழுது அருகிலிருந்த வீட்டுக்கு என்னை அழைத்துச்சென்று தேடிப்பார்த்தார். கைப்பற்றி நடந்த அகவை முதிர்ந்த அவரின் அன்புமொழிகளும், ஆர்வமும், எங்களுக்கு உதவத் துடித்த உள்ளமும் புரிந்தது. மாலை மங்கிவிட்டது என்று ஒளி ஓவியர் குறிப்பு கொடுத்தார். எங்கு தேடியும் செருப்பு கிடைக்கவில்லை. அவர் வீட்டில் இருவரும் தேடிப்பார்த்தோம். கடைசிவரை தோல் செருப்பு கிடைக்கவில்லை. அந்தச் செருப்பு குமிழ் ஆணிகள் அடிக்கப்பட்டு அவர் மாடு மேய்க்கப் பயன்படுத்தியது. தா.பழூர், மதனத்தூர், கும்பகோணம் வரை கொள்ளிடக்கரையில் அவர் வந்து மாடுமேய்த்த கதைகளை இடையில் எனக்குச் சொன்னார்.


நேற்று மாலை இந்த இடத்தில்தான் செருப்பை வைத்திருந்தேன் என்று நாயுடு அவர்கள் சத்தியம் செய்தார். அவர் மனைவியார் அண்மையில்தான் மறைந்தார். அந்தச் சடங்கிற்கு வந்தவர்கள் யாரோ எடுத்துச் சென்றிருக்க வேண்டும் அல்லது இரவுபெய்த மழையில் தோல்செருப்புகள் அடித்துச்செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று திரு. நாயுடு அவர்கள் எனக்கு ஆறுதல்சொன்னார். 

 படப்பிடிப்புக் காட்சி


படப்பிடிப்புக்குழு


படப்பிடிப்புக் குழு


 படப்பிடிப்புக் காட்சி


 படப்பிடிப்புக் காட்சி




கருத்துகள் இல்லை: