நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 19 ஜூலை, 2014

அருணா செல்வம் அவர்களின் தயக்கம் ஏனோ அதைச் சொல்ல! நூலுக்கான அணிந்துரை



எழுத்தாளர் அருணா செல்வம் அவர்களின் மரபுப்பாடல் தொகுப்பை அண்மையில் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இணையத்தில் முன்பே இவரின் ஆக்கங்களைப் படித்து மகிழ்ந்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இணையத்தில் இவர் வரைந்துள்ள படைப்புகள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவையாகும்.

பெண் பாவலர்கள் பெரும்பாலும் புதுப்பாக்களைத்தான் இன்று எழுதிவருகின்றனர். இவர்களுள் தனித்து நின்று மரபுப்பாடல் புனைந்துவரும் ஒரு செயலுக்கே தமிழுலகம் இவரைப் போற்றி மகிழும்.

வாழ்க்கைச் சூழலில் கடல்கடந்து வாழ்ந்தாலும் அருணாசெல்வம் அவர்கள் தாய்த்தமிழகத்தையும், தமிழ்மொழியையும், இலக்கியத்தையும் மறக்காமல் நினைவில்கொண்டு வாழ்ந்துவருவதை இவர்தம் கவிதைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்து, தமிழுக்குக் கவிதைகளால் வளம்சேர்த்தவர். அந்தப் பாவேந்தர் பிறந்த மண்ணில் பிறந்த கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிரான்சுநாட்டில் இப்பொழுது வாழ்ந்தாலும் அங்கிருந்தபடியே தமிழுக்கு அழுத்தமான பணிகளைச் செய்துவருவதை நண்பர்கள் வழியாக அறிந்துள்ளேன். அவரிடம் மரபு இலக்கணங்களைக் கற்ற அருணா செல்வம் அவர்கள் தமிழுக்கு ஆக்கமான, செழுமையான பாக்களைத் தந்துள்ளமை பாராட்டினுக்கு உரியது

அருணா செல்வம் அவர்களின் பாடல்களில் ஆசிரியப்பாவின் அழகிய ஓசை எதிரொலிக்கின்றது. அருமையான சொல்லாட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. தேர்ந்த கற்பனைகள் நம் உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. எதுகை, மோனைகளுக்குக் குறைவில்லை. தமிழ், இயற்கை, பெண்ணுரிமை, காதல், தாய்ப்பாசம், கம்பன் படைப்பு குறித்து இவர் எழுதியுள்ள கவிதைகள் கற்கண்டு நிகர்த்தவை.

நாடு விட்டு நாடுவந்தோம்
நல்ல நிலையில் வாழுகின்றோம்!
வீடு விட்டு வெளிச்சென்றால்
வேற்று மொழியைப் பேசுகின்றோம்!
ஓடு கின்ற காலமதில்
ஒருநாள் ஒன்றாய்ச் சேருகின்றோம்!
கூடும் இந்த இடந்தனிலும்
கொஞ்சும் மொழியை மறக்கலாமா?”

என்று பாடியுள்ளமை புலம்பெயர் மக்கள் அனைவருக்குமான கவிதையாக இது விளங்குகின்றது. தமிழை அனைவரும் பேசி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தாய்மையின் தவிப்பு இவரிடம் இருப்பதை உணர்கின்றேன்.

அலைகள் உரசும் கடலருகில்
அமைதி யற்று அமர்ந்திருந்தேன்!
கலைகள் பேசும் கண்ணழகி!
கவிதை பாடும் சொல்லழகி!
சிலைகள் தோற்கும் உடலழகி!
சிந்தை முழுதும் பண்பழகி!
நிலையாய் மனத்தில் நின்றவளோ
நேரம் கடந்தும் வரவில்லை!

என்று பாடியுள்ள பாட்டில் யாப்பின் ஓட்டம் கண்டு வியக்கின்றேன்!.

சட்டென்றே ஒரு முத்தம் என்ற தலைப்பில் வரைந்துள்ள பாட்டில் பாவேந்தரின் வீச்சைக் கண்டு நின்றேன்.

தொட்டணைக்க உரிமையுள்ள
தோதான அத்தைமகன்!
சட்டென்றே ஒருமுத்தம்
தந்துவிட்டு வந்திருந்தால்
கட்டான காளையவன்
கனவினிலே வந்திருப்பான்!
பட்டென்றே ஏன்வந்தோம்?
பண்பின்றி ஏக்கமுற்றாள்!”

என்று எளிய சொற்களைக் கொண்டு புனைந்துள்ள வைரவரிகள் நெஞ்சில் குற்றாலச் சாரலாய் இன்பம் ஊட்டும்.

சிற்றிலக்கிய வகையான அந்தாதி பாடும் இந்தப் பெண்பாற் புலவரிடம் அன்பு வேண்டுகோள் வைக்கின்றேன். சிறுகதை, புதினம் புனையும் நீங்கள் மரபுப்பாட்டில் அமைந்த ஒரு பாவியம்(காவியம்) புனைய முன்வர வேண்டும். அதற்கான ஆற்றல் தங்களிடம் இருப்பதை நான் உணர்கின்றேன். பாவேந்தரின் தமிழ், தங்கள் வழியாக இந்தத் தமிழ்ச்சமூகத்துக்குப் பாட்டு ஆறாக ஓடிப் பயன்தரட்டும்.

வாழ்த்துகளுடன்
மு.இளங்கோவன் 14/02/2014

குறிப்பு: அருணா செல்வம் அவர்கள் புதுச்சேரியில் பிறந்து இப்பொழுது பிரான்சில் வாழ்ந்துவருகின்றார். இயற்பெயர் முத்து கஸ்தூரிபாய். முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். பெற்றோர் முத்துலட்சுமி தேவி, முத்து இராசகோபால். நான்கு நாவல்களையும், கவிதை நூல்களையும், தொடர்கதைகளையும், சிறுகதைகள், கட்டுரைகளையும் எழுதிவருபவர். பிரான்சு கம்பன் கழகத்தின் மகளிர் அணியில் பொறுப்பு ஏற்றுத் திறம்படச் செயல்படுபவர்.

நூல் கிடைக்குமிடம்: 
மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17
விலை : 60-00




2 கருத்துகள்:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

நல்ல நூல் அறிமுகம். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி ஐயா
வாங்கிப்படிக்கின்றேன்