நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 5 ஜூன், 2014

சிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் விளக்கமும்…



புலவர் நா. தியாகராசன்( தலைவர், மாதவி மன்றம், பூம்புகார்)

சிலப்பதிகாரம் குறித்தும் அதன் கதையமைப்பு, இசைக்கூறுகள் குறித்தும் அறிஞர் பெருமக்கள் பலர் அளிக்கும் விளக்கங்களைக் கேட்டுக் கேட்டு அவ்வப்பொழுது மகிழ்வதுண்டு. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார் பாரதியார். அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது “பத்தாண்டுகள் படித்தேன். சிலப்பதிகாரம் கொஞ்சம் விளங்கியது. அறுபதாண்டுகளாகப் படிக்கின்றேன். இன்னும் சில இடங்களில் ஐயம் உள்ளது” என்றார்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு உரைக்கும் நூல் மட்டுமன்று. தமிழர்களின் மலையளவு இசையறிவை விளக்கும் ஒப்பற்ற நூலாகும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்து நிலத்திற்குமான இசையைப் பொருத்தமாக அங்கங்கு இளங்கோவடிகள் வைத்துள்ளார்.  ஒவ்வொரு பாடலடிகளிலும் மிகப்பெரிய உண்மைகளைப் பொதிந்துவைத்துள்ளார். சிலப்பதிகாரத்தை வல்லார்வாய் கேட்கும்பொழுது அரிய உண்மைகள் வெளிப்படும்.

பலவாண்டுகளாக அறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாரின் இசையுரைகளை நாடாக்களிலிருந்து வட்டாக்கிக் கேட்டு வருகின்றேன். அண்மையில் பூம்புகார் சென்றபொழுது புலவர் நா. தியாகராசன் அவர்கள் பழைய ஒலிநாடா ஒன்றைப் பாதுகாப்பாக வைத்திருந்ததைக் காட்டி, இந்த நாடாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடிய கானல்வரிப் பாடல்கள் உள்ளன என்றார். அதனை உடனே கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மேலிட்டது.

1971 ஆம் ஆண்டு காவிரிப்புகும்பட்டினத்தின் கடற்கரையில் சித்திரை முழுநிலவு நாளில் இந்த நாடாவில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது என்ற குறிப்பையும் புலவர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அதனைக் கேட்கமுடியாத அமைப்பில் அந்த நாடா இருந்தது. spool tape recorder இருந்தால் நம் கையினுக்குக் கிடைத்த ஒலிநாடாவைக் கேட்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஐயாவிடம் அந்த நாடாவைப் பெற்று வந்தேன். புதுச்சேரி முழுவதும் அலைந்து பார்த்தோம். இந்த வகைக் கருவி கிடைக்கவில்லை. முகநூலில் இதுகுறித்த உதவி கேட்டபொழுது திரு. எஸ். வி. சேகர் உள்ளிட்ட நம் நண்பர்கள் பலவகையில் வழிகாட்ட முன்வந்தனர். 

இதனிடையே ஒலிப்பொறியாளர் ஒருவரைப் பற்றி அண்ணன் தேவா நினைவூட்டினார். கடந்த வெள்ளியன்று சென்னைக்குச் சென்று என் கையில் இருந்த ஒலிநாடாவைக் கொடுத்து எம் பி. 3 வடிவில் மாற்றித் தரும்படி அந்த ஒலிப்பொறியாளரைக் கேட்டோம். அவர் வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி வட்டில் மாற்றி, இன்று(04.06.2014) வழங்கினார். ஒலித்தூய்மை செய்து கேட்கும் தரத்தில் என் கையினுக்கு நாடா இன்று கிடைத்தது. அரிய புதையல் ஒன்று கிடைத்த மன மகிழ்வைப் பெற்றேன். இரண்டு வட்டில் முதற்படியும், அடுத்த இரண்டு வட்டில் ஒலித்தூய்மை செய்த வடிவும் கிடைத்தன.

ஒரு வட்டில் 25 நிமிடமும் இன்னொரு வட்டில் 45 நிமிடமும் என சற்றொப்ப 70 நிமிடங்கள் சிலப்பதிகாரக் கானல்வரிக்குக் குடந்தை ப. சுந்தரேசனார் விளக்கம் சொல்கின்றார்.(எஞ்சிய சில மணித்துளிகள் அறிஞர் மு. வ. அவர்களின் பேச்சு உள்ளது). சிலப்பதிகாரத்தை ஐயா ப.சு. அவர்கள் எவ்வளவு நுட்பமாகப் படித்துள்ளார் என்பதும் எவ்வளவு பெரிய இசைப்பேரறிவு அவர்களுக்கு இருந்துள்ளது என்றும் இந்த நாடாவைக் கேட்டு வியப்புற்றேன். மரபு வழியான விளக்கங்களைத் தகர்த்தெரிந்து இசை நுட்பம் கலந்த விளக்கம் தருவது பாராட்டும்படியாக உள்ளது. இந்த இசை உண்மைகளை விளக்க மற்ற நூல்களிலிருந்து விளக்கம் காட்டுவது ப. சு. வின் பேரறிவுக்குச் சான்றாகும்(எ.கா. சங்கதி= இயைபு).

கானல்வரியை விளக்கும்பொழுது திங்கள் மாலை வெண்குடையான், மருங்கு வண்டு சிறந்தார்ப்ப, கரிய மலர் நெடுங்கண், கயலெழுதி வில்லெழுதி, தீங்கதிர் வாள்முகத்தாள், நுளையர் விளரி நொடி தருதீம் பாலை எனும் பாடல்களுக்கும் கட்டுரைப்பகுதிகளுக்கும் அளித்துள்ள விளக்கங்கள் மிகச் சிறப்பாக உள்ளன.


தமிழிசையின் மேன்மையை விளக்கும் சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் அளித்த விளக்கத்தை நாற்பத்தியிரண்டு ஆண்டுகளாக, கங்காரு தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல் பாதுகாத்துத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் செயல்பட்ட புலவர் நா. தியாகராசன் அவர்கள் உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டிய பெருமகனார் ஆவார். இவரைப் போலும் மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர்களைக் கொண்டாடும் அளவிற்கு நம் தமிழ்நாடு இன்னும் முன்னேறவில்லை என்று கவலைகொண்டு, அன்னார் நிறைவாழ்வுவாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

மாதவி மன்றத் தலைவர் புலவர் நா. தியாகராசனுடன் மு.இ, (பூம்புகாரில் படப்பிடிப்பின்பொழுது, 20.05.2014)

2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

இவரைப் போலும் மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர்களைக் கொண்டாடும் அளவிற்கு நம் தமிழ்நாடு இன்னும் முன்னேறவில்லை என்று கவலைகொண்டு,
>>
வெட்கப்பட வேண்டிய விசயம். சமீபத்தில்தான் பூம்புகார் சென்று வந்தேன். முத்தும், பவளமும், ரத்தினமும் கொட்டிக் கிடந்த கடற்கரையில் இன்று கர்வாடும், மீனும் இருக்கு. எப்பேர்ப்பட்ட கற்புக்கரசி கண்ணகி!? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவளின் நினைவிடம் போதிய வெளிச்சமின்றி தூசும் தும்புமாய் இருக்கு.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

தங்களின் பதிவு மூலமாக அரிய செய்திகளை அறிந்தேன். பிரமிப்பாக இருந்தது. நன்றி.