நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்


சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேட்டை நாணயக்காரத் தெருவில் பெருமைக்குரிய அறிவுத் திருக்கோயிலாக விளங்குவது சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம் ஆகும். கும்பகோணத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அறப்பணிகள் செய்த கோபு சிவகுருநாதன் செட்டியார் பி.. பி.எல் (1865-1926) அவர்கள் நினைவாக நிறுவப்பெற்றுள்ள இந்த நூல் நிலையம் 1954 இல் நிறுவப்பெற்றது. தனிக்கட்டடத்தில் இயங்க வேண்டி முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களால் 21.05.1958 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டடம் உருப்பெற்று 09.11.1959 இல் சர். பி. டி. இராசன், பார் அட் லா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. தமிழ்நூல்களுக்காக அமைந்த இந்த நூலகத்தில் இன்று நாற்பதாயிரம் நூல்கள் உள்ளன.

இந்த நூலகத்திற்கு அறக்கட்டளையாக மயிலாடுதுறை வட்டம் சென்னியநல்லூர் வல்லம் என்னும் சிற்றூரில் 03.05.1962 இல் 24-46 ஏக்கர் நிலம் எழுதிவைக்கப்பட்டது. நில உடைமைச்சட்டம் 58/ 1961 இன் படி தமிழக அரசு 17-88 ஏக்கர் நிலத்தை எடுத்துகொண்டு இழப்பீடாக 1977 இல் பத்திரங்களை வழங்கியுள்ளது. இப்பொழுது ஐந்து ஏக்கர் நிலத்தின் வருவாயில் நூலகம் பாதுகாக்கப்படுகின்றது.

இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் பல தொகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டு  முதல் தொகுதி 1954 இலும் அடுத்த இருதொகுதிகளாக 1971 இலும் புத்தகப்பட்டியல் அச்சிடப்பட்டுள்ளன. இந்த நூலகத்திற்குப் பல பெரியோர்கள் நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர்.
இந்த நூலகத்திற்கு வியாழக்கிழமைதோறும் விடுமுறை. பிற விடுமுறை நாள்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

காலை 9 மணி முதல் பகல் பகல் 12 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நூலகம் திறந்திருக்கும்.
இந்த நூலகத்தைப் பயன்படுத்த எந்த வகையான கட்டணமும் இல்லை.

இந்த நூலகத்தில் உள்ள நூல்கள்  கீழ்வரும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • புராணம்
  • தலபுராணம்
  • சாத்திரமும் தோத்திரமும்
  • திருமுறை
  • சமயம்
  • சங்க நூல்கள்
  • பிரபந்தங்கள்
  • அந்தாதி
  • உலா
  • கலம்பகம்
  • குறவஞ்சி
  • கோவை
  • சதகம்
  • தூது
  • பரணி
  • பிள்ளைத்தமிழ்
  • மாலை
  • வெண்பா
  • இதிகாசம்
  • கீதை
  • வைணவம்
  • நீதிநூல்கள்
  • இசை
  • புதுமைக்கவி
  • மொழிபெயர்ப்பு
  • கட்டுரைகள்
  • அகராதி
  • நிகண்டு
  • இலக்கணம்
  • கல்வெட்டு
  • வாழ்க்கை வரலாறு
  • தமிழக வரலாறு
  • உலக வரலாறு
  • அரசியல்
  • உளவியல்
  • யாத்திரை
  • அறிவியல்
  • உடற்பயிற்சி
  • மருத்துவம்
  • சோதிடம்
  • மாந்திரீகம்
  • கைத்தொழில்
  • நாவல்கள்
  • கணிதம்
  • நாடகம்
  • இசுலாம்
  • கிறித்தவம்
  • பலவகை நூல்கள்
  • பத்திரிகைகள்


நூலகம் உள்பகுதி



 நூல்களின் பாதுகாப்பு
பொறியாளர் கோமகன், திரு. கோடிலிங்கம்
முனைவர் மு.இ, திரு. கோடிலிங்கம்
தமிழ் நூல்களைப் பார்வையிடும் பொறியாளர் கோமகன்

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாளுவோர் எடுத்த இடம் குறிப்பிட மகிழ்வேன்.

கருத்துகள் இல்லை: