நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பேராசிரியர் பெ. மாதையன்


பேராசிரியர் பெ.மாதையன் 

தமிழகத்துப் பல்கலைக்கழகங்களில் தகுதியான கல்வியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அறிஞர்கள் அடிக்கடி நினைவூட்டி வருகின்றனர். கல்வியார்வமும், தொடர் உழைப்பும், பெரும் புலமையும் கொண்டவர்கள் சரிவரப் போற்றப்படாமையால் தமிழகத்தின் ஆராய்ச்சிப் புலமும், கல்விப் புலமும் வனப்பிழந்து நிற்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று தொடர்ந்து ஆராய்ச்சித் துறையில் பங்களிப்பை நல்கிவரும் பேராசிரியர்களுள் புலமையாலும் உழைப்பாலும் அனைவராலும் போற்றக்கூடியவராக விளங்குபவர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் ஆவார். 

சற்றொப்ப அரை நூற்றாண்டுகளாகச் சங்க இலக்கிய ஆய்வுகள், அகராதியியல் ஆய்வுகள், இலக்கண ஆய்வுகள் என்று ஒரே சிந்தனையில் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் பெ. மாதையன் அவர்களின் ஆராய்ச்சி நுட்பத்தை உள்வாங்கிய கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்டவர்களின் பாராட்டைப் பெற்றதுடன் அவர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் இவர் தமிழ் ஆய்வுப்பரப்பில் வலம் வருகின்றார். மொழியியல் அறிஞர் பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழாய்வுலகிற்குக் கிடைத்தவர் பேராசிரியர் பெ.மாதையன் ஆவார். செயல்திறமும் பழகுதற்கு இனிய பண்பும் கொண்ட பேராசிரியர் பெ. மாதையன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

பேராசிரியர் பெ. மாதையன் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் திருவாளர் கு.பெருமாள் கவுண்டர், நல்லதங்காள் ஆகியோருக்கு மகனாக 15. 01. 1952 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை மேட்டூர் பொது சன சேவா சங்கத் தொடக்கப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை அரசு தொடக்கப் பள்ளியிலும் பயின்றவர்.

சேலம் அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பும் (1970), தமிழ் இளங்கலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலையும்,  சென்னைப் பல்கலைக்கழகத்தில் (1977-80) முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணியைத் தொடங்கிய (1982-87) முனைவர் பெ. மாதையன் அவர்கள் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களைத் தமிழுலகிற்குத் தந்துள்ளார்.

பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் பதிப்புத்துறைப் பொறுப்பாளர், பதிவாளர், தேர்வு நெறியாளர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பப் பணியாற்றியவர். இவரின் மேற்பார்வையில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் முனைவர்பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபத்தாறுக்கும் மேற்பட்ட இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு கல்விக்குழுக்களில் அறிவுரைஞராகவும், புறநிலைத் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு அறக்கட்டளைப் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். பல்வேறு கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்து பணிபுரிந்துள்ளார்.

பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாகவும், பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் வழியாகவும் பல்வேறு ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு தமிழாராய்ச்சித்துறைக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மர இனப் பெயர்த்தொகுதி (இருதொகுதிகள்), சங்க இலக்கியச் சொல்லடைவு, சங்க இலக்கிய அகராதி, வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை உருவ உள்ளடக்க ஆய்வுகள், அகராதியியல், தமிழ் அகராதிகளில் பல்பொருள் ஒருசொல் பதிவமைப்பு, தமிழ் அகராதிகளில் சொற்பொருள்,  A Dictionary of Standardized Technical Terms of Computer Science (English-Tamil), அகராதியியல் கலைச்சொல் அகராதி, அகத்திணைக்கோட்பாடு, நற்றிணை - ஆய்வுப்பதிப்பு முதலியன இவர் ஆய்வுத்திட்டங்களின் வழியாக உருவாக்கிய நூல்களாகும். இவை தவிரப் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குப் பாட நூல்களையும் உருவாக்கித் தந்துள்ளார். தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்ட உருவாக்கக் குழுவிலும் இவர் பணியாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட பேரகராதித் திட்டத்தில் இப்பொழுது இணைந்து பணிபுரியும் பேராசிரியர் பெ. மாதையன் அவர்கள் பல்வேறு அகராதி உருவாக்கக் குழுக்களில் வல்லுநராக இருந்து கருத்துரை வழங்கியுள்ளார்.

சங்க கால இனக்குழுச் சமூகமும் அரசு உருவாக்கமும் சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பெண்டிர் காதல் கற்பு, தமிழில் வினையெச்சங்கள் வரலாற்றாய்வு, தமிழ்ச்செவ்வியல் படைப்புகளில் கவிதையியல் சமுதாயவியல் நோக்கு, தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள், அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும், சங்க இலக்கியத்தில் குடும்பம், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் காலமும் கருத்தும், தமிழாய்வு, பெருஞ்சொல்லகராதி, அகராதியில் கலைச்சொல்லகராதி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். 

பாவலரேறு ச. பாலசுந்தரனார் அவர்களின் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை(மூன்றுதொகுதிகள்) ஆகிய நூல்களைப் பதிப்பித்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வழியாக வெளியிட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.


பேராசிரியர் பெ.மாதையன் அவர்களின் ஆராய்ச்சி நூல்கள் பல பரிசில்களைப் பெற்றுள்ளன. இவை ஆய்வுலகிற்குப் பெருங்கொடையாக விளங்குகின்றன. தொடர்ந்து தமிழாய்வுத்துறையில் ஈடுபட்டு நூல்களை வெளியிட்டுவரும் பேராசிரியர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்பது நம் அவா!.





1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பேராசிரியர் பெ.மாதையன் அவர்களின் தமிழ்ப் பணியினைப் போற்றுவோம்