நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 26 டிசம்பர், 2013

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையம்

 

     புதுச்சேரியில் பெருமாள்கோயில் தெருவில் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீடு பொலிவுடன் விளங்குகின்றது. 1900 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதெனக் கருதப்படும் இந்தவீட்டில் புதுச்சேரியின் புகழ்மிகு கவிஞராகிய சுப்புரத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட பாரதிதாசன், 1945 இல் குடியேறி 1964 வரை வாழ்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளார்

   மகாகவி பாரதியாரிடம் பேரன்பு கொண்டு பாரதிதாசன் என்ற புனை பெயரை வைத்துக்கொண்டார். பாவேந்தர் (கவிஞர்களின் அரசன்) என்றும் புரட்சிக்கவிஞர் என்றும் அழைக்கப்பட்ட இவர் புதுச்சேரியில் சுதந்தர இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். எண். 95, பெருமாள்கோவில் தெரு, புதுச்சேரி-1 இல் உள்ள பாவேந்தரின் இந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இவ்வில்லத்தில் நினைவு நூலகம், காட்சிக்கூடத்தினை மாண்புமிகு முதலமைச்சர் திரு. எம்..எச். பாரூக் அவர்கள் தலைமையில் மேதகு புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் பி.டி.ஜத்தி  அவர்கள் 1971 ஏப்ரல் 29‡ இல் திறந்து வைத்தார்.

        1977 ஆம் ஆண்டு ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பாரதிதாசன் நினைவு நூலகம், காட்சிக் கூடம் ஆகியவற்றை ஆராய்ச்சி மையமாக மாற்றியமைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாள் இந்நினைவு நூலகம்காட்சிக் கூடமானது, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் -ஆய்வு மையமாக மாற்றியமைக்கப்பட்டது.

   புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள், கையெழுத்துப்படிகள், அவர் எழுதிய நூல்கள், இதழ்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், பாவேந்தரைப் பற்றி அவர்காலத்தில் வாழ்ந்து பழகிய நண்பர்கள், கவிஞர்கள், உறவினர்களிடமிருந்து ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட செய்திகள், பாவேந்தரைப்பற்றிய தமிழ் அறிஞர்களின் கருத்துகள், இதழ்களின் மதிப்புரைகள்  ஆகியன அருங்காட்சியகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்கள்

   இலக்கியம், அரசியல், பத்திரிகை, திரைப்படத்துறை, மொழி, இனம், நாடு தொடர்பாகப் பாவேந்தரின் வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பல அரிய நிழற்படங்கள்  பாவேந்தரின் படைப்புகளின் முகப்பு அட்டைகள், அவரது கலை, இலக்கியப் பணிகள் பற்றிய அறிஞர்களின் பாராட்டுரைகள், இதழ்களின் கருத்துரைகள் வேண்டிய குறிப்புகளுடன் அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கையயழுத்துப் படிகள்

    பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தம் கைப்பட எழுதிய கவிதைகள், கலை, இலக்கியம், அரசியல் சார்ந்த தம் நண்பர்களுக்கு எழுதிய மடல்கள், அவர் ஆசிரியராகப் பணியாற்றிய போது அவரால் எழுதப்பட்ட பாடத் தயாரிப்புகள், சங்க இலக்கியம், திருக்குறள் உரைதொடர்பாக அவரால் எழுதப்பட்ட குறிப்புகள், தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் ஆகியோரால் எழுதப்பட்ட மடல்கள், வாழ்த்துச் செய்திகள் போன்றன  அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 இதழ்கள்

    பாவேந்தர் பாரதிதாசன் இதழாசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய புதுவை முரசு (1930), ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (1935) , குயில் (1947) திங்கள் இதழ், கிழமை இதழ், தினசரி  ஆகியவற்றின் படிகளும், அவரது கவிதைகள் இடம்பெற்ற பொன்னி, தமிழ்முரசு, தேசசேவகன், சுகாபிவிருத்தினி, குடிஅரசு ஆகிய இதழ்களும், பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர்களும் மற்றும் பாரதிதாசன் படித்த புத்தகங்களான கம்பராமாயண அகராதி, புறப்பொருள் வெண்பா மாலை, கோடீச்சுரக்கோவை, சமுதாயமும் பண்பாடும், பெரியபுராணம், அஷ்டபிரபந்தம், ஞானவாசிட்டவமலராமாயண வசனம், பிங்கல நிகண்டு, சூதசங்கிதைப் புராணம் உள்ளிட்ட நூல்கள் பலவும் மக்கள் பார்வைக்கும்  ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்கும் ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நூலகம்

      1926 முதல் 1964 வரை பாரதிதாசன் அவர்களால் எழுதப்பட்ட  நூல்களும் அவற்றின் பல்வேறு பதிப்புகளும், அப்பதிப்புகள் குறித்து எழுதப்பட்ட திறனாய்வு நூல்களும்  இலக்கியம், மொழியியல், நாடகம், நாட்டுப்புற இலக்கியம் தொடர்பான பல்துறைப்பட்ட நூல்களும், இலக்கிய இதழ்களும் நூலகப் பகுதியில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகம் ஆய்வாளர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பார்வை நூலகமாக (Reference Library) 1971 முதல் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

ஆய்வுப் பணிகள்

  பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, அவர்தம் படைப்புகள் தொடர்பாக முனைவர்பட்ட (Ph.D.) ஆய்வினை மேற்கொள்ளத் தேர்ந்தெடுக்கப்படும் புதுச்சேரியைச் சேர்ந்த  ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பாரதிதாசன் அருங்காட்சியகத்தின் மூலம் ஆய்வு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது.

   பாரதிதாசன் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்குப் பயன்படும் வகையில் பாரதிதாசன் எழுதிய நூல்கள், அந்நூல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள திறனாய்வு நூல்கள், ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், புதுவை முரசு, குயில், தேசசேவகன், சுகாபிவிருத்தினி, கழகக் குரல், ஆத்மசக்தி, பொன்னி, பாரதிதாசன் நினைவு மலர், பைங்கிளி, தமிழம், எழுத்தாளன், சக்தி, திராவிடநாடு, பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர், பாரதிதாசன் மணிவிழா மலர், சுரதா, உண்மை, தமிழரசு ஆகிய இதழ்கள், எம்.. எம்.பில், பிஎச்.டி., டி.லிட்,. பட்ட ஆய்வேடுகள்; பாரதிதாசன் தொடர்பான சமகாலக் கவிஞர்கள், அறிஞர்களிடமிருந்து ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் செய்திகள் உட்படப் பல அரியதொகுப்புகள் இந்த ஆய்வு மையத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது.

         பாவேந்தர் ஆராய்ச்சி நூலகத்திற்கு வரும் ஆய்வாளர்களுக்கு வழங்கும் வகையில் பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காணொளி வட்டுகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சுமொழிகளில் உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

1947 முதல் 1962 வரை பாரதிதாசன் இதழாசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய குயில் இதழில் வெளிவந்துள்ள கவிதைகள், கட்டுரைகள் அனைத்தும் வகைப்பாடு செய்யப்பட்டு 1996 இல் இம் மையத்தின் வாயிலாக முனைவர் அ.கனகராசு அவர்களால் பாரதிதாசன் குயில் அடைவு’ (ஆய்வடங்கல்) எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நூலகம் திங்கள்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து மற்ற நாள்களில் திறந்திருக்கும். ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி: புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள பாவேந்தர் பாரதிதாசன் விளக்கக் கையேடு

கருத்துகள் இல்லை: