நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 17 மார்ச், 2013

தமிழாய்வை மேம்படுத்தும் பஞ்சவர்ணம் ஐயா…


 இரா.பஞ்சவர்ணம்

கடந்த கால் நூற்றாண்டுகளாகத் தமிழுக்குத் தொண்டாற்றுபவர்களை அடையாளம் கண்டு உண்மையாக உழைப்பவர்களுடன் அளவளாவி மகிழ்வது என் விருப்பம். அந்த வகையில் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் என்ற நூல் குறித்த மதிப்புரை அண்மையில் நாளேடுகளில் வெளிவந்தபொழுது அதன் ஆசிரியர் பெயரையும் முகவரியையும் கண்டு உடன் தொடர்புகொள்ள நினைத்தேன். பேராசிரியர் மருதூர் அரங்கராசன் அவர்கள் இந்த நூலாசிரியருடன் தொடர்பில் உள்ளார் என்ற குறிப்பு அறிந்தமை அந்த விருப்பைப் பன்மடங்காக்கியது.

ஒருநாள் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூலாசிரியரின் செல்பேசிக்கு அழைப்பு விடுத்தேன். மறுமுனையில் பஞ்சவர்ணம் பேசினார். என்னை அறிமுகம் செய்துகொண்டு, ஐயா தங்களைச் சந்திக்க விரும்புகின்றேன் என்று என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஐயா அவர்கள் நான் தொடர்புகொண்ட நாளில் ஊரில் இல்லை என்றும் தாமே ஒருநாள் புதுச்சேரி வந்து சந்திப்பதாகவும் கூறினார். தொடர்ந்து என் பல்வேறு பணிகளால் ஒரு கிழமை ஓடியது.

இன்று(17.03.2013) உறுதிப்படுத்திக்கொண்டு புதுச்சேரியில் ஐயாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். காலையில் பத்துமணியளவில் புதுச்சேரிக்கு நம் இல்லத்திற்கு வந்த திரு.பஞ்சவர்ணம் ஐயா அவர்களுடன் பிற்பகல் மூன்றரை மணி வரை உரையாடல் தொடர்ந்தது. சற்றொப்ப ஐந்துமணிநேரம் அவர்களின் தமிழாய்வுகளையும் தாவர ஆய்வுகளையும், மின்னாளுகைப் பணியையும் அவரின் அரசியல் நிலைப்பாடுகளையும் அறிந்து வியப்படைந்தேன்.

திரு. பஞ்சவர்ணம் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் பிறந்தவர் (04.07.1949). பெற்றோர் கொ.இராமசாமி கவுண்டர், தைலம்மாள் ஆவர். பள்ளியிறுதி வகுப்பு வரை பண்ணுருட்டியில் பயின்றவர். பிறகு கடலூர் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றவர். 1968 இல் பேராயக் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் முன்னின்று உழைத்தவர். காமராசர், மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர்தம் தன்னலம் கருதாத பணிகளில் ஈர்க்கப்பட்ட பண்ணுருட்டிப் பகுதி மக்கள் இவரை இருமுறை நகராட்சித்தலைவராக அமர்த்தி அழகுபார்த்தனர்.

பண்ணுருட்டிப் பகுதியிலும், நகராட்சியிலும் இருந்த நிலைமைகளை ஊன்றிக் கவனித்த பஞ்சவர்ணம் அவர்கள் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறத் திட்டமிட்டு உழைத்தார். மந்த கதியில் சுழன்ற நகராட்சி நிர்வாகத்தை விரைவுப்படுத்த மக்களுக்குப் பயன்படும் பிறப்பு இறப்புச்சான்று, குடிநீர் இணைப்பு, வீடுகட்ட ஒப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு அலைந்து திரிவதைத் தடுக்க அனைத்து விவரங்களையும் கணினியில் சேமித்து மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க ஆவன செய்தார். இந்திய அளவிலும் உலக அளவிலும் பண்ணுருட்டியின் நகர நிர்வாகம் பத்தாண்டுகளுக்கு முன்னர்ப் பேசப்பட்டது.

ஊழலிலும், சோம்பலிலும் சிக்கி மக்களை இழுத்தடிப்பதில் விருப்பம்கொண்ட அதிகாரிகளால் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமைப்பணிகளின் கூறுகளை மிக எளிதாக மாற்றி மக்களுக்கு வெளிப்படையான ஆளுகையை அறிமுகப்படுத்தியதால் மக்களால் பாராட்டப்பட்டார்.

பண்ணுருட்டிப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் பஞ்சவர்ணம். இதனால் தாவரங்கள் குறித்த ஈடுபாடு இவருக்கு அதிகமானது. மக்கள் இவரின் மரம் நடும் பணிக்கு ஆதரவாக இருக்க, காலம் காலமாக மக்களிடம் இருக்கும் நம்பிக்கைகளை நினைவூட்டும் வகையில் மரத்தால் விளையும் நன்மைகளைக் கூறி மரம் நடுவதில் ஆர்வத்தை உண்டாக்கினார்.

2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு நகராட்சித்தலைவர் பணியிலிருந்து விடுபட்டு முழுமையாகத் தாவரங்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மரங்களைப் பற்றி ஆராய்ந்தார். இந்தியாவெங்கும் காணப்படும் மரங்களைப் பற்றியும், தமிழகத்தில் காணப்படும் மரங்களைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து தகவல்களைத் திரட்டினார். இவர்தம் தகவல் தொகுப்புக்காகவும், மென்பொருள் வடிவமைப்புக்காகவும் கணினி வல்லுநர்களைப் பணியமர்த்தி ஆறாண்டுகள் தொடர்ந்து உழைத்து தாவரத் தகவல் மையத்தின் பணிகளை நிறைவுப்படுத்தி வருகின்றார்.

பஞ்சவர்ணம் அவர்கள்  பிரபஞ்சமும் தாவரங்களும், குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் என்ற இரண்டுநூலை வெளியிட்டுள்ளார். நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டுப் பரிசில்களையும் பெற்றுள்ளன.

பிரபஞ்சமும் தாவரங்களும் என்ற நூல் மக்களிடம் படிந்து கிடக்கும் நவக்கிரகம், இராசி, நட்சத்திரம், திசைகள் குறித்த நம்பிக்கைகளை நினைவூட்டி இறைவழிபாட்டில் இடம்பெறும் தாவரங்களைக் குறித்த பல செய்திகளைத் தருகின்றது. தாவரங்களைப் பற்றி அறிமுகப்படுத்தும்பொழுது அதன் அறிவியல்பெயர், வழக்குப்பெயர், வளரியல்பு, பயன்படும் பாகம், தாவரங்கள் குறித்த பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள், மருத்துவப் பயன்பாடு, சித்தமருத்துவத் தொகைப்பெயர் என்று பலதரப்பட்ட செய்திகள் தரப்பட்டுள்ளன. அந்த வகையில் 85 தாவரங்களைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் நூலாசிரியர் பஞ்சவர்ணம் அவர்கள் சிறப்பாக விளக்கியுள்ளார். 85 தாவரங்களின் படங்களும் வண்ணத்தில் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளன.

குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்….

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு நூலில் இடம்பெற்றுள்ள தாவரங்களைப் பற்றி எழுதியுள்ள பஞ்சவர்ணத்தின் நூல் சங்க இலக்கிய ஆய்வில் ஒரு குறிப்பிடத் தகுந்த ஆய்வு நூலாக உள்ளது. குறிஞ்சிப்பாட்டு நூலில் 112 தாவரங்கள் குறித்த குறிப்பு உள்ளதை எடுத்துரைக்கின்றார். 99 மலர்கள் கபிலரால் குறிக்கப்படுகின்றன என்று அறியப்பட்ட தகவலை 102 மலர்கள் என்று குறிப்பிட்டு உயர்விளக்கம் தருகின்றார்.  தாவரங்களின் புறத்தோற்றம் மற்றும் அடைகுறிப்பிட்டு 35 மலர்கள் பெயரிடப்பட்டுள்ளன என்கின்றார்(பக்கம் 9). 

குறிஞ்சிப்பாட்டு போலவே கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையில் 50 தாவரங்களின் பெயர்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளதை எடுத்துரைத்துள்ளார்(பக்கம்22). Polynomial என்னும் பலசொல்பெயரீடுமுறை மற்ற நாடுகளில் 16, 17 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வழக்கிற்கு வர, தமிழில் கி.மு. என்று குறிக்கத்தக்க காலகட்டத்தில் இருந்துள்ளமையைப் பெருமையுடன் பதிவுசெய்துள்ளார் (பக்கம் 29). மேலும் தொல்காப்பியத்தில் தாவரங்களுக்குப் பெயர்சூட்டும் முறை எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் பஞ்சவர்ணம் நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார்(பக்கம் 31)

 குறிஞ்சிப்பாட்டு நூலின் பாடலடிகளைச் சிறப்பாகப் பிரித்துப் பதிப்பித்துள்ள பஞ்சவர்ணம் தம் ஆய்வை வலிமையுடையதாக்க அனைத்துக் கூறுகளையும் சிறப்புடன் கையாண்டுள்ளார். குறிஞ்சிப்பாட்டு நூலில் இடம்பெறும் 102 மலர்களின் பட்டியல், கபிலர் குறிப்பிடும் மற்ற தாவரங்களின் பட்டியல் (பக்கம்60,61), குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 112 தாவரஙளின் மொத்தப்பட்டியல், சங்க இலக்கியங்களில் இடம்பெறாமல் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் இடம்பெற்ற 19 தாவரங்களின் பட்டியல் (பக்கம் 67),  குறிஞ்சிப்பாட்டில் மட்டும் இடம்பெறும் தாவரங்களின் (8) பட்டியல் (பக்கம் 67), குறிஞ்சிப்பாட்டு மற்றும் பக்தி இலக்கியங்களில் இடம்பெறும் தாவரங்களின் ((8) பட்டியல், குறிஞ்சிப்பாட்டு மற்றும் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் தாவரங்களின் (சேடல்) பட்டியல் (பக்கம் 68) என்று குறிப்பிடத்தக்கப் பட்டியல்கள் ஏராளமாக இந்த நூலில் உள்ளன.

குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு மலரையும் எடுத்துக்கொண்டு அதனைச் சங்க இலக்கியப் புலவர்கள் எவர் எவர் எவ்வாறு பிற இடங்களில் ஆண்டுள்ளனர் என்றும், அதன் தாவரவியல் பெயர், குடும்பம், வகை, வளரியல்பு என்று பலவகை விளக்கங்களைத் தந்துள்ளார். இதனைக் கடந்து இனியொரு பட்டியல் இடமுடியாதபடி மிகச்சிறப்பாக இந்த ஆய்வு அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளது. பிற சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பொருத்தமான இடங்களையும் கண்டுகாட்டியுள்ளார். குறிஞ்சிப்பாட்டின் 112 தாவரங்களையும் குறிப்பிடும் வண்ணப்படங்கள் இந்த ஆய்வுநூலின் தரத்தை உறுதிப்படுத்துகின்றன.

தாவரவியல் ஆய்வில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட திரு.பஞ்சவர்ணம் அவர்களிடம் உரையாடியதிலிருந்து சங்க இலக்கியங்களில் 252 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும், தொல்காப்பியத்தில் 47 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும் திருமூலர் பாடல்களில் 70 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும், அருட்பாவில் 58 தாவரங்கள்  பற்றிய குறிப்புகள்  உள்ளனவாகவும் குறிப்பிடுகின்றார்.

திரு.பஞ்சவர்ணம் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள தாவரத் தொகுப்புக்குள் நுழைந்து தட்டினால்  சங்க இலக்கியங்களில் இடம்பெறும் 252 தாவரங்களைப் பற்றிய செய்திகளைப் படத்துடன் கண்டு மகிழமுடியும்.

கருங்குவளை 93 இடங்களிலும், நீர்முள்ளி20 இடங்களிலும் சங்க இலக்கியக்கங்களில் ஆளப்பட்டுள்ளதை அவர் தரவுத்தொகுப்பு காட்டுகின்றது. அதுபோல் கோடல் தோன்றி, காந்தள் ஒன்றுபோல் குறிக்கப்பட்டிருப்பினும் அனைத்தும் வேறு வேறானவை என்கின்றார். குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகையில் மட்டும் அனிச்சம் என்ற சொல் உள்ளதைக் குறிப்பிட்டு திருக்குறளில் 4 இடத்தில் அனிச்சம் இடம்பெற்றுள்ளது என்கின்றார். இவ்வாறு  4 இடத்தில் குறிப்பிடப்படும் அனிச்சமும் அனிச்சம் பற்றிய பல உண்மைகளைத் தெரிவிக்கின்றன என்கின்றார்.

தண்டலை என்பது சோலை என்று அறிந்திருந்த நமக்குத் தண்டலை என்பது ஒரு தாவரம் என்கின்றார். அதற்குச் சான்றாகத் தண்டலையின் தாவரப்படத்தையும் பூவையும் காட்டி, பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்படும் காட்சிகளுடன் இயைத்துத் தம் கருத்தை நிலைநாட்டுகின்றார். 

பத்துப்பாட்டு நூலுள் 185 தாவரங்கள் இடம்பெற்றுள்ளதையும், சங்க இலக்கியம் தொடங்கி, சங்கம் மருவிய இலக்கியங்கள், பக்திப்பனுவல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் தாவரம் சார்ந்த செய்திகளையெல்லாம் தம் தரவுத் தொகுப்பகத்தில் சேமித்து வைத்துள்ளார் இந்தத் தமிழ் நகராட்சித் தலைவர்.


 இரா.பஞ்சவர்ணம், மு.இளங்கோவன்

தொடர்பு முகவரி:
திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள்,
காமராசர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
607  106
செல்பேசி: 0091 9488945123

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இரா.பஞ்சவர்ணம் அவர்களைப் பற்றிய சிறப்புத் தகவல்களுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு. அருமையான தகவல்கள். இன்று முகநூல் திறப்பதில்லை என நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் படி இன்று முகநூலுக்கு செல்லவில்லை. நாளை இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
மிக்க நன்றி ஐயா.