நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புதுவையில் குறும்படப் பயிற்சி வகுப்பில் இயக்குநர் வ.கௌதமன்


மு.இளங்கோவன்,புதுவை அரசு கொறடா அங்காளன்,இயக்குநர் வ.கௌதமன்

புதுவையில் நிழல் அமைப்பும், நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பும் இணைந்து குறும்படப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது.ஆறு நாள்கள் நடக்கும் பயிற்சியில் நேற்று(30.12.2010) சந்தனக்காடு தொடர், மகிழ்ச்சித் திரைப்படம் ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் வ.கௌதமன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.தம் திரைத்துறைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

முன்னதாக நம் இல்லத்துக்குக் குடும்பத்தினருடன் வந்த இயக்குநர் அவர்களுக்கு அன்பான வரவேற்பு நல்கி,சிறிய விருந்தோம்பல் செய்து மகிழ்ந்தோம். பிறகு நேராக புதுவை,திருவள்ளுவர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க இயக்குநர் சென்றார்.தொண்ணூறு மாணவர்களுக்கு மேல் பயிற்சியில் கலந்துகொண்டனர்.இவர்களுக்குக் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்படுகின்றது.

நானும் இயக்குநருடன் பயிற்சி வகுப்புக்கு உடன் சென்றேன். மாலை 4 மணிக்குச் சிறப்பு வகுப்பு தொடங்கியது.

நண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசு வரவேற்றார். புதுவை அரசு கொறடாவும் முன்னாள் அமைச்சருமான திரு.அங்காளன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். நிழல் திருநாவுக்கரசு இயக்குநர் கௌதமன் அவர்களை அரங்கிற்கு அறிமுகப்படுத்தினார்.

இயக்குநர் கௌதமன் தம் திரைத்துறைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இயக்குநருக்கு உரிய தகுதிகளை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும், நடிப்பை எவ்வாறு கற்றுக்கொள்வது என்றும் தம் பட்டறிவிலிருந்து விளக்கினார். இலக்கிய ஆர்வம் உடையவர்களாகவும்,சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்றுநோக்கும் இயல்புடையவர்களாகவும், அவ்வாறு நோக்கியவற்றை உள்ளுக்குள் தேக்கிக்கொள்பவராகவும் இருக்கும்பொழுது மிகச்சிறந்த நடிகர்களாக மிளிரமுடியும் என்று குறிப்பிட்டார். சந்தனக்காடு தொடரை உருவாக்கத் தாம் மேற்கொண்ட களப்பணிகளை நினைவுகூர்ந்தார்.

தம் மகிழ்ச்சித் திரைப்படத்தில் காட்சி அமைப்பதில் மேற்கொண்டு உத்திமுறைகளையும் விளக்கினார்.மாணவர்கள் எழுப்பிய பல்வேறு ஐயங்களுக்கு அவர் விரிவாக விடை தந்தார்.


பயிற்சிப்பட்டறை மேடையில் இயக்குநர் கௌதமன்,புதுவை அரசு கொறடா அங்காளன், நிழல் ப.திருநாவுக்கரசு


பயிலரங்கப் பொறுப்பாளர்களுடன் இயக்குநர் வ.கௌதமன்

கருத்துகள் இல்லை: