நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 24 மே, 2010

ஈழத்து அறிஞர்கள் அ.பொ.செல்லையா-யோகரத்தினம் அம்மையார் அவர்களின் திருக்குறள்பணிகள்


அ.பொ.செல்லையா


செ.யோகரத்தினம் அம்மா

 ஈழத்து அறிஞர்கள் பலரும் பல வகையில் தமிழ்ப்பணிகளாற்றியுள்ளனர். அயல்நாட்டுக் கல்வியாலும் ஆழமான புலமையாலும் ஈழத்து அறிஞர்களின் வழியாகத் தமிழ் நூல்கள் மேல்நாட்டுக்கு அறிமுகம் ஆயின என்று குறிப்பிடுவது மிகையன்று. அதுபோல் ஈழத்துப் போரின் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வாழும் சூழல் ஏற்பட்டது. அந்த அந்தப் பகுதிகளில் வளமான வாழ்க்கை நிகழ்த்தினாலும் தங்களின் இலக்கியப் பங்களிப்பை மறவாமல் ஆற்றி வருகின்றனர். அவர்களுள் ஈழத்து அறிஞர் அ.பொ.செல்லையா அவர்களும் அவர்களின் துணைவியார் யோகரத்தினம் அம்மையார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் தமிழ் வாழ்க்கையைத் திருக்குறள் பணிகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

அ.பொ.செல்லையா அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு:

 அ.பொ.செல்லையா அவர்கள் 19.01.1937 இல் தென்மராச்சியை அடுத்த மீசாலை என்னும் ஊரில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை மீசாலை விக்கினேசுவர மகாவித்தியாலத்திலும், உயர்கல்வியைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், கல்லூரிக் கல்வியைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். உயர்கல்வியைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற வேளையில் தமது பேச்சு எழுத்து வன்மையையும் நடிப்பு ஆற்றலையும் ஆசிரியர்கள் வித்துவான் மு சபாரத்தினம் & கனகரத்தினம் அவர்களிடம் வளர்த்துக் கொண்டார். பேச்சுப் போட்டியில் அகில இலங்கை அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

  கல்லூரிக் கல்வியின் பொருட்டுத் தமிழகம் வந்துபொழுது தந்தைபெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்தார். பேராசிரியர் அன்பழகனை ஆசிரியராகப் பெற்றவர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஈரத்தமிழில் உணர்வுபெற்றவர். விலங்கியல் பட்டம் பெற்ற பொழுதும் முத்தமிழ் வித்தகர் என்று போற்றப்படும் அளவிற்குத் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டார். ஆசிரியராகத் தமது பணியைக் கொழும்பு தேசுரன் கல்லூரியில் ஆரம்பித்து, இசுப்பத்தான கிறீன்லனட் கல்லூரி சகீராக் கல்லூரி ஆகியவற்றில் கொழும்பு மாநகரில் பணியாற்றினார். பின்னர் பிறந்த மண்ணில் பணியாற்றும் முகமாக மட்டுவில் மகாவித்தியாலயத்திலும் டிறிபேக் கல்லூரியிலும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் பணியாற்றிப் பணி பெற்று பின்பு பளைமத்திய கல்லூரி (முன்பு பளை மகா வித்தியாலயத்தில்) முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முத்தமிழ் மக்கள் கலைக்கழகம் நிறுவிக் கலைப்பணிபுரிந்தவர்.

  ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றும் வேளையில் தம்மிடமுள்ள ஆற்றலை மாணவர்களிடையே திறம்பட ஊட்டினார். நாடகம், பேச்சு, எழுத்து ஆற்றலையும் ஊட்டினார். இவற்றினூடே பகுத்தறிவுக் கொள்கையையும் நற்பண்புகளையும் மாணவர்களிடையே வளர்த்தார். பின்பு கொத்தணி அதிபராகவும் விளங்கினார். கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாகப் பல்கலைக்கழகத்திற்கு கலை, அறிவியல், கணக்கியல், மருத்துவம், பொறியியல் ஆகிய அனைத்துத் துறைகளுக்கும் மாணவர்களை அனுப்பிய பெருமை இவருக்கு உண்டு. அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு ஆனந்தசங்கரியின் பாராட்டையும் பெற்று, சிறந்த முதல்வர் என அரசாங்கத்தால் பாராட்டப்பட்டார். முதல்வராக இருக்கும் பொழுது சாரணியத்திலும் சிறந்து, மாவட்ட ஆணையராகவும் இருந்தார். திருவள்ளுவருக்குச் சிலை எடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.

  பெற்றோர்,உற்றோர், உறவினர் புலால் உண்பவராக இருந்தும், ஆசிரியரின் கொல்லாமை அறத்தை ஏற்றுத் தமது இறுதி மூச்சு வரை புலால் உண்ணாமையைக் கடைப்பிடித்தார்.

 தமது ஓய்வுக் காலத்திலும் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் அரிமாக் கழகத்துடனும் செஞ்சிலுவைச் சங்கத்துடனும் சேர்ந்து தொண்டாற்றினார். அரிமாக் கழகத்தின் செயலாளராக இருந்து 1998ல் இலங்கையிலேயே இரண்டாவது சிறந்த செயலாளர் என்று பாராட்டையும் கேடயத்தையும் பெற்றவர். தமிழரசுக் கட்சியின் குரலாக விளங்கியதுடன், 1989ல் சாவகச் சேரித் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். (ஆனால் நாட்டுச்சூழலால் தம் கடமையாற்ற முடியவில்லை).

  இவர் ஒரு சிறந்த பேச்சாளராக இருந்ததுடன் மேடை நாடகங்கள், பேச்சுப் போட்டிகள், வானொலி நாடகங்கள், நெடுங்கதை, சிறுகதை, நாடக எழுத்தாளனாக, நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, திறனாய்வாளராகவும் சிறந்து விளங்கினார். தமிழகத்தில் பற்றிப் பரவிய திராவிட இயக்க உணர்வு இவர் வழியாக இலங்கையில் பரவியது எனில் மிகையன்று. தமிழகத்தில் திராவிட இயக்கத்தலைவர்கள் நாடகம் மேடைப்பேச்சு வழியே உணர்வூட்டியது போல இவர் இலங்கையில் தம் பணியினைச் செய்துள்ளார். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த காலத்திலும் கனடிய மண்ணிலும் தனது தடத்தைப் பதிக்கத் தவறவில்லை. Canadian Charter of rights and freedoms என்பதைத் தமிழில் மொழி பெயர்த்துக் கனடிய அரசின் பாராட்டைப் பெற்றவர். உதயன், சுதந்திரன், தங்கத்தீபம், பறை ஆகிய இதழ்களில் தொடர் கட்டுரை, கதைகள் இவருடைய இறுதிக் காலம் வரை வெளிவந்து கொண்டிருந்தன.

  வள்ளுவம் மூலம் வையகம் சிறக்கவேண்டும் என்ற பேரவலால் "கேட்கட்டும் குறளின் குரல்" எனும் நூலை யாத்துத் தந்தவர் (இது கனடாவின் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான உரைகளின் மூன்று தொகுப்பாகும் 2004-05 இல் வெளிவந்தவை). தாய் மண்ணிலே எயிட்சின் கொடுங் கரங்கள் தழுவுவதைப் பொறுக்க மாட்டாது 'எயிட்சிலிருந்து பாதுகாப்பது எப்படி?' என்னும் நூலை எழுதி அச்சிட்டுத் தமிழ் மக்களிடையே அரிமாக் கழகத்தினூடாகப் பரவச்செய்தவர். இவர்தம் இறுதி நாட்களில் திருக்குறள் எளிமை உரையை யாழ்ப்பாணத் தமிழில் வெளியிட்டுள்ளார்.

திருக்குறள் எளிமை உரை அறிமுகம்

 திருக்குறளுக்குப் பல உரைநூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குறளின் மூலத்துக்கு இயைந்தும் மாறுபட்டும் அவரவர் கொள்கைகளுக்கு ஏற்ப உரை வரைந்துள்ளனர். திருக்குறள் எளிமை உரை தெளிந்த நீரோட்டமாக உரையைக் கொண்டுள்ளது. ஆசிரியர் பகுத்தறிவுக்கொள்கை உடையவர் என்றாலும் திருக்குறள் வழி நின்றே பல இடங்களில் உரைகண்டுள்ளார். இவர்தம் சொற்செறிவும், உரைகூறும் திட்பமும் சில இடங்களில் வியப்பைத் தருகின்றன.

  குறளின் உட்பொருளை நன்கு உள்வாங்கிக்கொண்டு உரைவரைந்துள்ளதால் தேவையான இடங்களில் கதைபோல நமக்கு உரை வழங்குகிறார். "மனைத்தக்க மாண்புடையள்"(51) என்ற குறளுக்கு "மனைக்குத் தகுந்தாற்போல நற்பண்புடையவளாகத் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவு செய்பவளே நல்ல துணைவியாவாள்" என்று உரைக்கும் பொழுது நம் வாழ்வியல் துணைகொண்டு உரைவரையும் போக்கினை உணர முடிகிறது.

 "குறிப்பின் குறிப்பு உணர்வாரை"(703) என்னும் குறளுக்குப் "பிறரின் புறக்குறிப்புக்களால் அவரவர் அகக் குறிப்புக்களை அறிய வல்லவரை உடைமைகளுள் எதைக் கொடுத்தாயினும் துணையாகக் கொள்ளவேண்டும்" என்று மிகத்தெளிவாக உரை கண்டுள்ளமை போற்றத்தக்கது. குறள், உரை, திருவள்ளுவர் படங்கள், மொழிபெயர்ப்பு குறித்த சில விவரங்கள் நூலாசிரியரின் பிற நூல்கள் குறித்த விவரங்களைக் கொண்டுள்ள இந்நூல் தனித்து ஆராயத்தக்கது.

  "கேட்கட்டும் குறளின் குரல்" என்ற தலைப்பில் அ.பொ.செல்லையா அவர்கள் கனடிய வானொலியில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. திருக்குறளை இன்றைய அரசியல், நாட்டு, நடப்புகளுடன் பொருத்தி ஒவ்வொரு அதிகாரத்தையும் விளக்கும் வகையில் 133 கட்டுரைகளாக இந்த நூல்கள் இயன்றுள்ளன. திருக்குறளை எளிமைப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர் வெற்றிபெற்றுள்ளார் என்று கூறலாம். அ.பொ.செல்லையாவின் பன்னூல் அறிவும் வாழ்க்கைத் தெளிவும், அரசியல் புலமையும் இந்த நூலின் வழி அறியமுடிகின்றது.

 செல்லையா யோகரத்தினம் அவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்புப்பணி திருக்குறளை முதன்முதல் இலத்தீன்மொழியில் வீரமாமுனிவர் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார் என்று அறியமுடிகின்றது. அவரைத் தொடர்ந்து உலகின் பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அ.பொ.செல்லையா அவர்களின் துணைவியார் யோகரத்தினம் அம்மையார் அவர்கள் புதிய முறையில் திருக்குறளை யாவரும் அறிந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

  கனடா போன்ற பிறமொழிச்சூழலில் வாழும் சிறியவர்களும் பெரியவர்களும் திருக்குறளைக் கற்க வேண்டும்> அதன்வழி நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இவ்வுரை விளக்கப்பணி அமைந்துள்ளது. எனவே இந்த நூலின் பெயர் "ஆங்கிலத்தில் திருக்குறள்" என்று அமைந்துள்ளது. "21 அம் நூற்றாண்டிற்கு ஏற்ப செப்பமான சிந்தனையுடன் நாடு, இன, மத, மொழி, வகுப்பு, குழு, இயக்க வேறுபாடின்றி தொகுக்கப்பட்டு, இளைஞர்களும் பாமர மக்களும் யாருடைய உதவியின்றிப் புரியக்கூடிய விரும்பிப் படிக்ககூடிய சிறந்த ஒரு உரையே எமக்குத் தற்பொழுது தேவை. வெறும் கல்விமான்கள் மாத்திரம் ஆய்வுசெய்வதற்கு அல்ல திருக்குறள். "என்ற தம் மொழிபெயர்ப்பு நோக்கினை மொழிபெயர்ப்பாளர் பதிவு செய்துள்ளார் (பக்கம்19).

மொழிபெயர்ப்பு அமைப்பு

 திருக்குறளின் மூலம் தொடக்கத்திலும், அதனை அடுத்து ஆங்கில எழுத்துப்பெயர்ப்பிலும், அதனை அடுத்துமொழிபெயர்ப்பும், அதனை அடுத்துத் தமிழ் உரையும் உள்ளன. திருக்குறளின் மூலத்துக்கு மாறுபட்டும் யோகத்தினம் அம்மையாரின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. முதற்குறளில் ஆதி பகவன் என்பதைச் சூரியனாகக் குறிப்பிடுகிறார். பிற உரையாசிரியர்கள் யாவரும் தெய்வமாகக் குறிப்பிடுகின்றமை இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது.A is for all letters of languages the first letter;likewise sun is for all lives என்று வரைந்துள்ளார்.

 ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் அடிக்குறிப்பாக அதிகாரத்தில் கற்பதற்கு இலகுவான குறள், நடுத்தரமான குறள், கடினமானவை என்று வகுத்துக்காட்டிக் கற்பவருக்குக் குறட்பாவை எளிமையிலிருந்து வலிமைக்குப் படிக்கச் செல்லத் தூண்டுகின்றார். மொழிபெயர்ப்பு நூலின் இறுதியில் மொழிபெயர்ப்பாளரின் வேறு துறைசார்ந்த கட்டுரைகளும் தமிழில் இணைக்கப்பட்டுள்ளன.

 அ.பொ.செல்லையா அவர்களும், யோகரத்தினம் அம்மையார் அவர்களும் ஈழத்தில் பிறந்து கனடிய நாட்டில் குடியேறினாலும் அங்கும் தமிழ்ப்பணியைத் திருக்குறள் பணியைத் தொய்வின்றிச் செய்துள்ளனர். இவர்களின் பன்னூல் வெளியீடுகளும் குறிப்பாகத் திருக்குறள் சார்ந்த வெளியீடுகள் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டும்; ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.

 (இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கிற்காக உருவாக்கப்பெற்று ஆய்வுக்கோவையில் 15,16.05.2010 ஆம் நாள் வெளியிடப்பெற்றுள்ளது. கருத்தரங்க இடம்: நாகர்கோயில். ஒருங்கிணைப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

1 கருத்து:

இன்னம்பூரான் சொன்னது…

I beg to be excused for the English input. Tamil is an universal language now and we must record and preserve the kind of information, which you have painstakingly compiled. I salute both. This must come as a MarabuWiki Essay. I am sure your academic work in Malayasia is going on well.
Warm regards,
Innamburan