நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள்...


மொழிஞாயிறு பாவாணர் அவர்கள்

மொழிஞாயிறு எனவும் மொழிநூற் கதிரவன் எனவும் போற்றப்படும் தேவநேயப்பாவாணர் அவர்கள் 07.02.1902 இல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலில் பிறந்தவர்.இவர்தம் பெற்றோர் ஞானமுத்து,பரிபூரணம் அம்மையார்.தொடக்கக் கல்வியைக் கிறித்தவப் பள்ளிகளில் பயின்ற பாவாணர் அவர்கள் இளம் அகவையில் முகவை மாவட்டம் திருவில்லிப்புத்தூர் வட்டம் சீயோன் மலையிலுள்ள சீயோன்நடுநிலைப்பள்ளியில் முதற்படிவ ஆசிரியப்பணியில் சேர்ந்தார்(1919-21).அதன் பிறகு பல பள்ளிகளில் பணிபுரிந்தும், மதுரைத்தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றும்(1924) பல அரிய தமிழாய்வு நூல்களை வெளியிட்டும் அனைவராலும் மதிக்கப்பட்டும் சிறப்பெய்தினார்.

1940 இல் இவர் எழுதிய ஒப்பியன்மொழிநூல் இவரின் மிகப்பெரும் ஆய்வுகளுக்கு அடிப்படை நூலானது.தமிழ் உலகில் தோன்றிய முதல்மொழி எனவும்,தமிழர்களே முதலில் தோன்றிய நாகரிக மாந்தர்கள் எனவும் மாந்தன் முதலில் தோன்றியது கடலுள் மூழ்கிய குமரிக்கண்டத்தில் எனவும் குறிப்பிட்டார்.இந்த முடிவை நிலைநாட்டுவதில் தம் வாழ்நாளின் பெரும் பங்கைச் செலவிட்டார்.இவர்தம் ஆய்வுமுடிவுகள் உண்மை என்பதை அண்மையில் கிடைத்துவரும் பல்வேறு அகழாய்வு,புதைபொருள், கடலாய்வுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.இவர் வழியில் வேர்ச்சொல்லாய்வு தமிழில் ஒரு தனித்துறையாக வளர்ந்துவருகிறது.

ஆரியச் சார்பான ஆய்வாளர்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் செல்வாக்குடன் விளங்கிய காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பாவாணர் தம் ஆய்வுகளைச் செய்தார்.வறுமையில் வாடினாலும் மான உணர்வுடன் செயல்பட்டவர்.செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலிகளாகப் பல தொகுதிகளை வெளியிட நினைத்து உழைத்தவர்.இசையிலும்,இயலிலும் நல்ல புலமையுடையவர்.பன்மொழி அறிவு நிரம்பப்பெற்றவர்.வடமொழி வரலாறு எழுதிய பெருமைக்குரியவர்.வடமொழி கலந்து கிடந்த மணிப்பவளத் தமிழைத் தனித்தமிழாக்கிய பெருமை பாவாணருக்கு உண்டு.அதனால்தான் மறைமலையடிகள்,பெரியார் உள்ளிட்ட அனைவராலும் போற்றப்பட்டவர்.

மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்பொழுது இவர் மாரடைப்பால் இயற்கை எய்தினார்
(15.01.1981). இவரின் தனித்தமிழ்க்கொள்கை தமிழகம் கடந்து உலக நாடுகளில் எல்லாம் இன்று பரவி நிற்கிறது.

வாழ்க பாவாணர் புகழ்!வளர்க அவர்தம் தனித்தமிழ் நெறி!

தமிழ் விக்கியில் பாவாணர் பற்றி...

3 கருத்துகள்:

கோவி.மதிவரன் சொன்னது…

தமிழ்க்கூறு நல்லுலகில் சிறப்பிற்குரிய இடத்தைப் பெறுபவர் பாவாணர் ஐயா. அவர்கள். வாழ்க அவர் புகழ்

சுப.நற்குணன் சொன்னது…

தமிழ் வாழும் காலமெல்லாம் பாவாணர் புகழும் வாழ வேண்டும்;
அவர் காட்டிய வழியில் தமிழ்கூறு நல்லுலகம் மீட்சி பெற வேண்டும்.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

தமிழ்த்தொண்டு புரிந்த ஐயா அவர்களின் சிறப்பு தமிழ் உள்ளளவும் வாழும்.இதைத்தங்கள் கட்டுரை வழி புரிந்தது. நன்றி!