நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 நவம்பர், 2009

பண்பறிந்து ஆற்றுக...

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்.அதன் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் வாழ்வில் பின்பற்றத்தக்கன.திருக்குறள் மேலோட்டமாக நோக்கும்பொழுது ஒரு பொருளைத் தெற்றென வெளிப்படுத்துவது போலவே ஆழ்ந்து நோக்கும்பொழுது ஆழ்ந்தபொருள் தரும் சிறப்பிற்கு உரியது.நான் வாழ்வில் மிகுதியாக எண்ணி எண்ணி வியந்த குறட்பா இதுவாகத்தான் இருக்கும்.அது இது:

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை(469)

திருவள்ளுவர் இக்குறளை யாது காரணமாக இயற்றியிருப்பினும் உரையாசிரியர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பொருளதிகாரப் பகுப்பில் அரசியல் என்னும் இயல் வகைக்குள் அடக்கி உரை வரைந்துள்ளனர்.அரசனுக்கு அறிவுரை கூறும் முகமாக அமையும் அரசியல் பகுதியில் இக்குறள் இருந்து, அரசனுக்கு உரியதாகக் காட்டப்பட்டாலும் உலகியல் மாந்தர் அனைவருக்கும் பொதுப்படையாக இந்தக் குறட்பா பொருந்துவதாக உள்ளது.இந்தக் குறட்பா வழியாகத் திருவள்ளுவ ஆசான் மாந்தர்களுடன் இணைந்து வாழும் பொழுது கவனமாக இருக்க வேண்டும், உறவு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.எவ்வளவு எச்சரிக்கையாக நாம் இருந்தாலும் நமக்குப் பகை,தொல்லை,உறவு அறுதல் ஏற்படுவது மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறை தெரியாததால்தான் ஆகும்.எனவே வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்தக் குறட்பா கருத்தை வாழ்வில் ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பர்.

வாழ்க்கையில் அதிர்ச்சியையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தும் பல்வேறு சூழல்களில் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும் குறட்பாவாக இது இருக்கின்றது.இந்தக் குறட்பாவுக்கு உரையாசிரியர்களும் தமிழறிஞர்களும் பல்வேறு விளக்கங்களை வரைந்துள்ளனர். தேவைப்படுவோர் அந்த அந்த உரையாசிரியர்கள் வரைந்த உரைப் பகுதிகளைக் கற்றுச் சுவைக்கலாம்.

பரிமேலழகர் தம் உரையில் " வேற்று வேந்தர் மாட்டு நன்றான வுபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்.அவரவர் குணங்களையாராய்ந்து அவற்றிற்கியையச் செய்யாவிடின்" என்பார்.

நான்றான வுபாயமாவது-கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலுமாம்.அவை யாவர் கண்ணும் இனியாவதற் சிறப்புடைமையின்,உம்மை சிறப்பும்மை. அவற்றை அவரவர் பண்பறிந்தாற் றாமையாவது: அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே செய்தல்.தவறு-அவ்வினை முடியாமை.

நல்ல செயல்களைச் செய்தாலும்(கொடுத்தல்,இன்சொல் சொல்லல்) அவற்றை அவரவர் பண்பு அறிந்து செய்ய வேண்டும்.அவ்வாறு பண்பறியாமல் செய்தால் அச்செயல் நன்மைக்குப் பதிலாகத் தீமையை தந்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் எனவும்,'பண்பெனப்படுவது தன் கிளை அறிந்து ஒழுகல்'(கலி.133) எனவும் பிற நூலார் குறிப்பர்.

உலக வாழ்வில் பன்முகத்தன்மை கொண்ட மாந்தர்களை நாம் காண்கின்றோம்.பிறர் வளர்ச்சிக்கு உதவுவதைத் தம் வாழ்நாளாகக் கொண்ட உயர் மாந்தர்,வாய்ப்புக்கு ஏற்ப உதவுவோர்,கால,இட நெருக்கடியால் உதவுவோர்,இன்சொல் கூறுவோர்.கடுஞ்சொல் கூறுவோர், அளவே பேசுவோர்,பேச மறுப்போர்,பயனில உதிர்க்கும் பண்பினர், காலந்தாழ்த்திச் செய்வோர், காலத்தே செய்வோர்,காலம் கடந்தும் செய்யாது இருப்போர்,காலம் கடந்தும் செயலால் வாழ்வோர் எனப் பன்முகச் செயல்மாந்தர்களை நாம் காண்கின்றோம்.இவர்களின் இயல்பறிந்து பழகும்பொழுதே அவர்களுக்கும் நமக்குமான உறவு வளர்பிறையாகும் அல்லது தேயும்.இத்தகு பன்முக வாழ்வியல் மாந்தர்களிடம் நாம் பழகும் சூழல் இயந்திரமயமான உலகில் அன்றாடம் இருந்துகொண்டுதான் உள்ளது.வேக உலகைப் புறுக்கணித்து நாம் தனித்து வாழ்ந்துவிட முடியாது.

நம் இயல்புக்கும் தகுதிக்கும் பொருத்தமான சில வினைகளை ஆற்றும்பொழுது மாந்தர்களின் உளக்குறிப்பு,மனநிலை,விருப்பு,வெறுப்புகள்,கொள்கைகள்,உற்றார் உறவினர் அறிந்து ஆற்ற வேண்டியுள்ளது.அவ்வாறு பன்முகத் தன்மைகளையும் ஆராய்ந்து ஒருவினையை ஆற்றினால்தான் நாம் மேற்கொண்ட செயல் நிறைவேறும்.இல்லையேல் செயல் பாழ்படும். எதிர்ப்பு மேலோங்கும்.வளர்ச்சி வீணாகும்.பகை உணர்வு தோன்றும்.உட்பகை வளரும்.எனவே வினையாற்றுவோர் யாராக இருப்பினும் நல்ல செயல்களில் நாம் ஈடுபட்டாலும் பயனாளியின் இயல்பும்,பண்பும் அறிந்தும் ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

'நன்றாற் றலுள்ளும்' என்றதால் நன்மையே செய்வதாக இருந்தாலும்,நல்லதையே செய்வதாக இருந்தாலும் என்று பொருள்கொள்ள வேண்டும்.'தவறுண்டு' என்றமையால் தவறாக அது போய் முடியும் என்க.'அவரவர் பண்பு' என்றமையால் ஒவ்வொருவருக்கும் பண்பு வேறுபடும் என்று நுட்பமாகப் பதிவு செய்கிறார்.'வினைவகையால் வேறுபடும் மாந்தர் பலர்' என்றும், 'குலத்தின்கண் ஐயப்படும்' என்றும் வேறு இடங்களில் குறளாசான் குறிப்பிடுகின்றமையும் ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கன.

தவத்துறையில் இருக்கும் ஒரு முனிவரைக் காண நேர்ந்தால் வீழ்ந்து வணங்குவதையும், வாய்பொத்தி நிற்பதையும்,முன்னோக்கி நின்று உரையாடிய பின், பின்னோக்கி வருவதையும் விரும்புவர்.அவர் கூறும் அனைத்துக்கும் உடன்பாட்டில் விடை சொல்வதையே விரும்புவர்.ஆம்,அப்படியே ஆகட்டும் என்று உரைப்பதையே விரும்புவர்.

அரசியல் தலைவர்கள் தம் தொண்டர்கள் தம் கட்டுப்பாட்டில் இருப்பதையே விரும்புவர்.வினா எழுப்புவதை எந்த நாளும் விரும்பமாட்டார்கள்.இதனால் பல கட்சிகள் உடைந்த கதையுண்டு. ஆசிரியர்கள் தங்களிடம் பயில்வோர் சித்திரப்பாவையாக இருப்பதை விரும்புவர்.கணவன் மனைவி தம் சொல்லுக்குக் கீழ்ப்படிவதை விரும்புகிறான்.மனைவி தாம் விரும்பும் வண்ணம் கணவன் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறாள்.அதிகாரிகள் தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் எதிர்த்துப் பேசாதவர்களாகவும் சொல்வதைச் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புபவர்களாகவும் உள்ளனர்.இவை விரும்பும் குணங்கள் என்பதிலும் மரபுகளாக இருக்கின்றன.இந்த மரபுகளை மீறும்பொழுதே உறவில் விரிவு ஏற்படுகின்றன.எனவே சமூகத்தில் காலங்காலமாக இருக்கும் மரபுகளை மீறாமல் இருக்கும் பொழுது சிக்கல்கள் தோன்றாமல் இருப்பதால் மரபுகளை அறிவது தேவையாக உள்ளது.எனவே வினாயாற்றும் பொழுது மரபறிதலும் பண்பறிதலும் தேவையாக உள்ளது.பண்பு, மரபு அறியாமல் செய்யும் எந்த வினையும் முற்றுப்பெறுவதில்லை.எனவேதான் ஆளுமை வளர்ச்சியில்,முன்னேற நினைக்கும் மாந்தர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது பன்முகப் பண்புகளை ஏற்றிக் கூறுவர். அக்கூறுகள் முழுமை பெற்றால்தான் வெற்றி ஈட்டும் மாந்தனாக மலரமுடியும்.


ஆளுமை வளர்ச்சியில் பன்முகக்கூறுகள் உண்டென அத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுவது உண்டு.அவையாவன: தோற்றப்பொலிவு,கால மேலாண்மை,இட மேலாண்மை,இன்சொல் கூறல்,உடன்பட்டு மொழிதல், சிறப்பினைப் பேசல்,குறைகளைச் சுட்டாமை,மரபறிதல் என்பன அக்கூறுகளுள் சிலவாம்."பிறர் பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து" என்பார் குமரகுருபரர்.

இன்றைய ஆளுமை வளர்ச்சித்துறைக்கு உகந்தனவான 'அவரவர் பண்பறியும்' குணத்தைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பதிவு செய்துள்ளமை வியப்பளிக்கின்றது. உலகியல் மாந்தர்களுடன் பல நாளும் பழகிய பின்னரே இது போன்ற பட்டறிவுகள் வள்ளுவருக்குத் தோன்றியிருக்கக்கூடும்.எனவே பிறரின் பண்பறிந்து பழகிய திருவள்ளுவர் வழியில் நாமும் பழகி உலகியல் சிக்கலில் சிக்காமல் இருப்போம்.வாழ்வை வளமாக்ககிக் கொள்வோம்.உள்ளத்தில் அமைதி நிலவ இந்தக் குறட்பா உதவும் என்றும் பண்பால் வேறுபட்ட மக்களே உலகில் மிகுதி என்றும் முடிவுக்கு வருவோம்.

அந்தமான் திருக்குறள் கருத்தரங்க மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை(நவம்பர் 2009)

கருத்துகள் இல்லை: