நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

தமிழ் விக்கிப்பீடியா



கலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுளன. இக்கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச்செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது. இம்முயற்சி உலகெங்கும் நடைபெற்று வருகிறது. பிரஞ்சுமொழியில் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள் அந்த நாட்டில் வழங்கிய பழைய கலைகளைப் பதிவு செய்தன. பிரான்சில் மக்கள் புரட்சி ஏற்படவும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்புரட்சி ஏற்படவும் கலைக்களஞ்சியங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஒரு மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும். அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகரவரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன. ஒரு பொருள் சார்ந்தும் துறை சார்ந்தும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கும் முயற்சி அறிவார்வம் நிறைந்த சமூகத்தில் இயல்பாகவே உள்ளது. தமிழ்க் கலைக்களஞ்சியம் பல்லாண்டுகளுக்கு முன் வந்தாலும் அதனை மறுபதிப்பு செய்யும் ஆர்வம் நமக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்று இசைக்கு ஒரு கலைக்களஞ்சியத்தை முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் வழியாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பிரெஞ்சு மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட டெனிஸ் டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்.
கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுவதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந்தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் சேவையாகவும் இது அமையும்.(விக்கிப்பீடியா மேற்கோள்)

அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணையத்தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா (தீடிடுடிணீஞுஞீடிச்) என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.

விக்கி (Wiki) என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு "விரைவு' என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி (wiki)+ என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிப்பீடியா (wikipedia) என்ற சொல் உருவானது.

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு சனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர் பல மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. விக்கிப்பீடியா தொழில் நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68 வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்சு என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் அவர்களும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியை தொடங்கினர். ஜிம்மி வேல்சு முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிப்பீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்கவேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய,விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளி விவரங்களை இணைக்கலாம். இத்தகு வசதியுடைய விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தமிழ் முயற்சி 2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கில இடைமுகத்துடன் வெற்றிடமாகவே முதல் பதிவு ஒரு சோதனை முயற்சியாக இருந்தது.

2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ்விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார்.இவர் இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.

இந்திய மொழிகளில் தெலுங்கு(42,918), இந்தி(32,681), மணிப்புரி(23,414), மராத்தி(23211) என்ற அளவில் கட்டுரைகள் உள்ளன. தமிழில் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் தரமுடையதாகவும், செறிவுடையதாகவும் உள்ளன. ஆனால் இந்தியாவின் பிறமொழிக் கலைக்களஞ்சியங்களில் கட்டுரைகள் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அவை தானியங்கி முறையில் எண்ணிக்கை மிகுத்துக்காட்டப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. அதுபோல் சிறு, சிறு குறிப்புகளும் கட்டுரைகளாகக் கணக்கிடப்பட்டுள்ளனவாம்.
தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.

தமிழ் விக்கியில் பலர் பங்களிப்பு செய்தாலும் குறிப்பிடத்தக்க சில முன்னோடிகளை நன்றியுடன் நினைவுகூர்வது பொருத்தமாகும். திருவாளர்கள் மயூரநாதன், சொ.இல.பாலசுந்தரராமன், நற்கீரன், இரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனகசிறீதரன், பேரா.செல்வக்குமார், பேராசிரியர் வி.கே,குறும்பன், கார்திக் பாலா, டானியல் பாண்டியன்,தேனி எம்.சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி (பட்டியல்நீளும்) ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பல்வேறு துறைகளில் பேரறிவு பெற்றவர்களாக விளங்குகின்றனர். தகவல் தொழில் நுட்ப அறிவு மிகுதியானவர்களாகவும் உள்ளனர். தமிழுக்கு உழைக்க வேண்டும் எனவும் தமிழ் உலகின் பிறமொழிகளுக்குத் தாழ்ந்தது இல்லை என நிறுவும் வேட்கை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். எனவே இவர்களின் முயற்சியில் பல துறை சார்ந்த கட்டுரைகள் தமிழில் மிகுந்துள்ளன. விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்குவதால் யாரும் எழுதலாம். குறிப்பிட்டவர்கள்தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எந்தப் பொருள் பற்றியும் எழுதலாம். எனவே இன்று தமிழ் விக்கியில் தகவல் தொழில்நுட்பம், கணினித்துறை, கணக்கு, மின்னியல், கட்டடக்கலை, உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த பலர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற துறைகளில் இன்னும் மிகுதியான கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறை சார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம்,தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள்,சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். கட்டுரைகளாக இருப்பவை கலைக்களஞ்சியத்திலும் பாடல், பழமொழிகள் இவற்றை மூலம் என்ற விக்கி பகுதியிலும் பதிவு செய்யலாம்.

விக்கிப்பீடியாவில் தமிழ்ச்செய்திகளை எப்படி உள்ளிடுவது?

விக்கிப்பீடியாவில் செய்திகளை உள்ளிடப் பல வழிகள் உள்ளன. முதலில் நமக்கு என விக்கி பக்கத்தில் ஒரு பயனர் கணக்கு தொடங்க வேண்டும். நமக்கு என ஒரு கடவுச்சொல்லும் தருதல் வேண்டும். விக்கியின் முகப்புப் பக்கத்தில் நாம் உள்ளிட நினைக்கும் சொல்லைத் தட்டச்சிட்டால் அந்தச் சொல் பற்றி முன்பு விளக்கம் இருந்தால். அதனை விக்கி காட்டும். அதன் வழியாகச் சென்று புதிய விளக்கம் திருத்தம் செய்யலாம். பயனர் கணக்கு இல்லாமலும் ஒருவர் எழுதிய கட்டுரையைத் திருத்தலாம். அவ்வாறு செய்பவர்களின் கணிப்பொறி ஐ.பி.எண் விக்கியின் வரலாற்றுப்பகுதியில் பதிவாகும். எனவே விக்கிப்பீடியாவில் கட்டுரை உள்ளிட்டாலும், திருத்தங்கள் மேற்கொண்டாலும் அதன் துல்லியமான பதிவுகள் நம்மையறியாமலே பதிவாகிவிடும்.

நாம் தேடும் சொல்லுக்குரிய விளக்கம் அல்லது கட்டுரை இல்லை என்றால் இந்தத் தலைப்பில் கட்டுரை வரைய விருப்பமா என்ற ஒரு குறிப்பு இருக்கும். ஆம் என நாம் நினைத்தால் அங்குத் தோன்றும் அந்தப் பெட்டியில் கட்டுரைக்குரிய செய்தியை ஒருங்குகுறி எழுத்தில் தட்டச்சிட்டுப் பக்கத்தைச் சேமிக்கவும் என்றால் நாம் எழுதிய கட்டுரை விக்கியில் இணைந்துவிடும்.இவ்வாறு வெளியிடும் முன்பாக இணைப்பு வழங்கவும், படங்கள்,அட்டவணைகள் இணைக்கவும் வசதிகள் உள்ளன. மேலும் நாம் தட்டச்சு இட்டதை வெளியிடுவதற்கு முன்பாக வடிவமைப்பு, எழுத்துப் பிழைகளைச் சோதித்துக்கொள்ளவும் முடியும். அங்குத் தோன்றும் பெட்டியில் உள்ள அடையாளக் குறிகளை அழுத்தி உரிய தேவைகளைப் பெறலாம்.

முதலில் பழகுபவர்கள் அங்கு உள்ள மணல்தொட்டியில் பழகிப் பின்னர் நம் பதிவுகளை முறையாக இடலாம். சிறு தவறுகளுடன் வெளியிட்டால் நம்மைப் பார்த்து மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்று யாரும் தாழ்வுமனப்பான்மையடைய வேண்டாம். மூத்த பயனாளர்கள் நாம் செய்துள்ள தவறுகளைத் திருத்தி அந்தக் கட்டுரைகளை மிகச்சிறந்த கட்டுரைகளாக மாற்றவும் வாய்ப்பு உள்ளது.

விக்கியில் கட்டுரைகள் வரைபவர்கள் பல தரத்தினர். திறத்தினர். சிலர் துறை சார்ந்த கட்டுரைகளை எழுதுவார்கள். சிலர் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வரைவார்கள். சிலர் பிறர் வரைந்த கட்டுரைகளை அனுமதி பெற்று அல்லது பிறர் விருப்பத்திற்கு இணங்க விக்கியில் வெளியிடுவர். அவ்வாறு பிறர் கட்டுரை என்பதற்கு இணைப்பு வழங்கியோ அவர் பெயர் குறித்தோ பெருந்தன்மையாக நடந்துகொள்வர். பதிப்புரிமை விக்கியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு இல்லை. யார் வேண்டுமானாலும் மாற்றவும் திருத்தவும் செய்வர். விக்கியின் கட்டுரைகள் தரமுடையனவாக இருந்தாலும் பார்வைக்கு,தகவல் அறிய உதவுமேயல்லால் ஆதாரப்பூர்வ சான்றாகக் காட்ட இயலாது.

விக்கியில் தமிழ்க் கட்டுரைகள் பல துறை சார்ந்து வெளிவருவதால் புதிய கலைச்சொற்கள் நமக்குக் கிடைத்துள்ளன. முன்பு ஒருவர் ஒரு கலைச்சொல்லை உருவாக்கினால் அந்தச் சொல் வெளியில் தெரிவதற்கும் பயன்பாட்டுக்கு வருவதற்கும் பலகாலம் ஆகும்.ஆனால் இன்று புதிய கலைச்சொற்கள் அறிமுகமானால் அதுபற்றிய கலந்துரையாடல்கள் இணையத்தில் உடன் நடந்து திருத்தம் தேவை என்றால் திருத்தத்துடன் அல்லது சரியான சொல் என்றால் உடன் வழக்கிற்கு வந்துவிடுகின்றன. அந்த வகையில் இற்றைப்படுத்தல், ஒருங்குகுறி, சுட்டி, மென்பொருள், வன்பொருள், குறுவட்டு, உலாவி, இணையம், வலைப்பூ, திரட்டி, பயனர், கடவுச்சொல் என்ற சொற்களைச் சான்றாகக் காட்டலாம்.

உயர்கல்வியில் தமிழ் நடைமுறைக்கு வரும்பொழுது மிகச்சிறந்த கட்டுரைகள் தமிழ் விக்கியில் வெளிவர வாய்ப்பு உண்டுஅதுபோல் ஆட்சியிலும் அலுவலிலும் தமிழ் முழுமையாக நடைமுறைக்கு வரும்பொழுது அனைவரின் பயன்பாட்டுக்கு உரியதாக விக்கி மாறும்.

கற்றவர்கள் விக்கியில் எப்படி பங்களிக்கலாம்?

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது மட்டும் நம் கடமை என நினைக்க வேண்டாம். முன்பு எழுதிய கட்டுரைகளை நாம் திருத்தலாம். எழுத்துப்பிழை, தொடர்ப்பிழை,பொருட்பிழைகளைக் களையலாம். படங்கள், புள்ளி விவரங்களை இணைக்கலாம். விக்கியில் கட்டுரை எழுதுவதைக் கல்வி நிறுவனங்களில் ஒரு பாடமாக அல்லது செய்முறைப் பயிற்சியாக மாற்றலாம்.

விக்கிப்பீடியா களஞ்சியமாக மட்டும் இல்லாமல் விக்சினரி என்ற பெயரில் அகரமுதலியாகவும் உள்ளது. விக்கி செய்திகள் என்ற பகுதியில் செய்திகளைக் காணலாம். விக்கி மேற்கோள் என்ற பகுதியில் சிறந்த மேற்கோள்களின் தொகுப்பு காணப்படும். விக்கிமூலம் என்ற பகுப்பில் பல்வேறு மூல ஆவணங்கள் இருக்கும். விக்கி மேப்பியா என்ற வசதியைப் பயன்படுத்திப் புவி அமைவிடம் விளக்கும் படங்களைக் காண முடியும். நாம் இருந்த இடத்திலேயே நாம் பார்க்க நினைக்கும் இடத்தைப் பார்த்துவிட முடியும். விக்கி கட்டற்றக் கலைக்களஞ்சியம் என்னும் தன் பெயருக்கு ஏற்ப கட்டற்ற தகவல்களைத் தாங்கி நிற்கிறது.

விக்கிக்கு எனச் சில நெறிமுறைகள் உள்ளன. கலைக்களஞ்சிய வடிவில் இருத்தல், கட்டுரைகள் நடுநிலையுடன் இருத்தல். கட்டற்ற உள்ளடக்கம், அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், இறுக்கமான சட்டத் திட்டங்கள் இல்லாமை என மயூரநாதன் இதனை நினைவுகூர்வார்.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறியவேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிப்பீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது. தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயிற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர். கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.

(18.08.2009 தினமணி நாளிதழில் வெளிவந்த என் கட்டுரையின் முழுவடிவம்)
நனி நன்றி : தினமணி நாளிதழ்
முனைவர் நா.கணேசன்
திரு.அண்ணாகண்ணன்
தமிழ்விக்கிப்பீடியா ஆர்வலர்கள்

3 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

விக்கிபீடியாவில் வவுனியாவைப்பற்றியும் சிவன்கோவிலைப்பற்றியும் மட்டுமே நான் எழுதியுள்ளேன். விக்கிபீடியாவைப்பற்றி பல தெரியாத விடயங்களை தந்துதவியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

RAGUNATHAN சொன்னது…

ஐயா, தமிழ் விக்கிபீடியா பற்றி அறிந்திருந்த போதும் இந்தக் கட்டுரையை தினமணி நாளிதழில் படித்த பிறகே அது பற்றிய ஒரு தெளிவு கிடைத்தது. இப்போது நானும் ஒரு பயனராக, கட்டுரை பங்களிப்பாளராக விக்கியில் வலம் வருகிறேன். அந்த வகையில் தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டின் ஒரு சிறு பகுதியாக அக்கட்டுரை விளங்குகிறது. இது பலருக்கு ஊக்கம் அளிக்கும் விடயமாகும். விக்கிபீடியா குறித்து இன்றியமையா துவக்க நிலை தகவல்களை அக்கட்டுரையில் தாங்கள் விளக்கியமைக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்பின் இரகு
தங்கள் தமிழன்புக்கு நன்றி.
விக்கி வளர்க்கப்பட வேண்டிய ஒரு தளம்.அனைவரும் பங்கெடுப்போம்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி