நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 22 ஜூன், 2009

மலேசியக் கவிஞர் சி.வேலுசாமியின் திருக்குறள் உரைத்திறன்

    திருக்குறள் தமிழர்களின் அறிவு அடையாளமாகத் திகழும் நூலாகும். இந்நூலைப் பயிலுந்தோறும் புதுப்புதுப் பொருள் விளங்குவதை அவரவர்தம் உழைப்புக்கும் பயிற்சிக்கும் தக உணரலாம். அதனால்தான் உரையாசிரியர்கள் பலர் தோன்றித் தத்தம் பட்டறிவு, கொள்கை, புரிந்துணர்வுகளுக்கு ஏற்பப் பல்வேறு விளக்கங்கள் வரையலாயினர். பரிமேலழகரின் உரை அவர்தம் வடமொழிச்சார்பு காட்டினாலும், திருக்குறளை அவர் எந்த அளவு ஆழமாகக் கற்றுள்ளார் என்பதை அறிஞருலகம் எண்ணி எண்ணி வியப்படைகிறது. அவர் போலும் உரைவரைந்த பின்னாளைய உரையாசிரியர்கள் தங்களின் மதம் தழுவியும், சமயம் தழுவியும், கொள்கை தழுவியும் உரை வரைந்துள்ளமையை நடுநிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு. 

    பாவாணர் தமிழ்மரபுரை தந்ததும் அவர்தம் தமிழ் ஈடுபாடு கொண்டேயாகும். அறிஞர் மு.வ அவர்கள் தெளிவுரை கண்ட பிறகு தமிழகத்தில் உரையாசிரியர்களின் எண்ணிக்கை மிகுந்தது.இன்று உரை வரைவதற்குப் பலரும் போட்டியிட்டு எழுதி வருகின்றனர். பல உரைகள் இன்று படியெடுப்புகளாகவே உள்ளன.சில உரையாசிரியர்கள் நன்கு கற்றுத் திருக்குறளுக்கு உள்ளேயே சில வினாக்களுக்குத் திருவள்ளுவர் விடை வைத்துள்ளதைக் கண்டு காட்டி நம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். பொற்கோ உள்ளிட்ட அறிஞர்கள் வள்ளுவர் காலத்தில் நின்று சிந்தித்துப் பொருள் உரைப்பர். சில இடங்களில் திருக்குறளுக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் பொருள் விளங்கவில்லை எனவும் மேலும் சிந்திக்கவேண்டும் எனவும் குறிப்பிடுவது அவர்களின் சான்றாண்மை காட்டும் செயல்களாகும். 

    தமிழகத்து உரையாசிரியர்களின் பல உரைகளை யான் கற்று மகிழ்ந்தாலும் கடல்கடந்து வாழும் அயலகத்து அறிஞர்கள் வரைந்த திருக்குறள் உரையை இதுநாள்வரை கற்றேனல்லன். அதற்குரிய வாய்ப்பைத் திருவாளர் வேங்கடரமணி ஐயா அவர்கள் மலேசிய நாட்டிலிருந்து உருவாக்கினார்கள். மலேசியாவில் வாழ்ந்த கவிஞர் சி.வேலுசாமி அவர்களின் திருக்குறள் அறத்துப்பாலுக்கு வரைந்த உரையைக் காணும் வாய்ப்பை எண்ணி மகிழ்கிறேன். சி.வேலுசாமியார் மலேசியாவில் நாவன்மை மிக்க பாவலராகவும், தமிழ் இதழ்கள் பலவற்றை வெளியிட்ட இதழாளராகவும் விளங்கியவர். பல நூல்களின் ஆசிரியர். தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு பணிகளைச் செய்தவர். சமய ஈடுபாடு கொண்ட இவர்தம் திருக்குறள் அரிய, இனிய, எளிய உரை பெயருக்குத்தக மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எளிமையாகவும் இனிமையாகவும் உரை இருப்பதுடன் இவரின் அறிவு நுட்பங்கள் பலவற்றைத் தாங்கியும் உள்ளது. இவர்தம் அஃகி அகன்ற அறிவெண்ணி வியக்கிறேன். 

    அகன்று பொருள் விளங்க எழுதுவது எளிது. சுருக்கமாக அதே பொழுது மயக்கமின்றி எழுதுவது ஒரு சிலருக்கே இயலும். திருக்குறளில் நல்ல பயிற்சியுடையவர்களுக்கே இத்தகு உரை வரையமுடியும் என்னும் அளவிற்கு இவர்தம் உரை பெருமை உடைத்து.கருத்து மயக்கமோ,புலப்படுத்தலில் குறையோ இல்லாமல் இருப்பது எம்மனோர்க்கு வியப்பைத் தருகிறது.ஓரிரு இடங்களில் அதிகாரத் தலைப்பை மாற்றியுள்ளமையும் விளக்கம் தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கன. பிறனில் விரும்பாமை(15), வஞ்சியாமை(18) பயன் இல சொல்லாமை(20), வாழ்க்கைத் துணைநலம் (வாழ்க்கைத் துணைவி) என்பன இவற்றிற்குச் சான்றாகும். உரையாசிரியர் வேலுசாமியார் அவர்கள் சிரமம்(174), உபசரிப்பு(83), (263), சபை(67), அனுபவித்தல்(177), பயப்படுதல்(202) என்பன போன்ற பிறமொழிச் சொற்களை எளிமை கருதி பெய்துள்ளமையைக் குறித்தாதல் வேண்டும். இவை கற்பாருக்கு இன்னடிசில் பால்பொங்கலில் தென்படும் ஓரிரு கற்கள் போல் தெரிகின்றன. 

     கவிஞர் சி.வேலுசாமியார் அவர்கள் பழுத்த சிவனியக் கொள்கை சார்ந்தவர் என்பது அவர்தம் முதல் அதிகார விளக்கத்தைக் கற்பாருக்குத் தெற்றென விளங்கும். திருவள்ளுவப் பேராசானுக்கு இறைக்கொள்கை உண்டு என்பதும், ஊழ் பற்றிய நம்பிக்கை இருந்துள்ளதும் அவர் குறள்வழி நாம் அறிகிறோம். ஆனால் அவர் இன்ன இறைவன் எனவோ, இவ்வடிவினன் எனவோ யாண்டும் குறித்தாரில்லை. பொதுப்படையாகவே இறை, இறைவன், வாலறிவன் என்றே குறித்துள்ளார். மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்ற பகுத்தறிவுச் சமயப் புரட்சியாளராகவே நமக்குத் தென்படுகின்றார். அப்படியிருக்க அவரைச் சைவர் எனவோ, கிறித்தவர் எனவோ, சமணர் எனவோ குறிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிஞருலகம் குறிப்பிடுவதுண்டு. நம் உரையாசிரியர் சி.வேலுசாமியார் அவர்களின் முதற் பத்துக் குறட்பாக்களின் உரைகளில் முழுமுதற் கடவுளான சிவனே வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் என்ற முறைமையில் உரை வரைந்துள்ளார். அஃது அவர்தம் சைவ சமய ஈடுபாடு காட்டுகிறது. 

     சி.வேலுசாமியின் உரை முழுவதையும் கற்ற பிறகு ஓர் உண்மை புரிகிறது. திருக்குறளை எத்தகு குறைந்த கல்வியறிவு உடையாரும் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும், திருக்குறள் வழி நிற்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டு உரை வரையப்பட்டுள்ளமை புலனாகிறது. அதற்காக அவர் சொற்களை எளிமைப்படுத்தி, தொடரை எளிமைப்படுத்தி வழங்கியுள்ளமை போற்றற்குரியது. திரிசொற்களைப் பயன்படுத்தாமல் நாளும் நாம் வழங்கும் எளிய சொற்களைப் பெய்து உரைவரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 38 அதிகாரத்திலும் இடம்பெற்றுள்ள அரிய சொல்லாட்சிகளுக்குப் பொருள் தந்து பின்னிணைப்பாக வழங்கியுள்ளமை அவர்தம் உள்ளம் காட்டும். இது பிற உரையாசிரியர்களிலிருந்து வேறுபட்டு நிற்பதற்குச் சான்றாகும். 

     இவ்வாறு அருஞ்சொற்களைப் பட்டியலிட்டுள்ள ஐயாவின் பட்டியலை உற்று நோக்கும்பொழுது ஆதி, பகவன், அவித்தான், அந்தணன் எனும் சொற்களுக்குத் தந்துள்ள விளக்கங்களைக் கவனிக்கும்பொழுது சிவன் என்று குறிப்பு இல்லை. உரையில் இச்சொற்களுக்குச் சிவன் எனப் பொருள் குறிக்கப்பட்டுள்ளது. இவை மாறுகொளல் கூறும் பாங்கினதாக அறிஞருலகம் குறிப்பிடுவதற்கு வழிவகுக்கும். "பொறிவாயில் ஐந்தவித்தான்"எனத் தொடங்கும் குறட்பாவுக்கு," ஐந்து பொறிகள் வாயிலாக ஏற்படும் ஐந்து ஆசைகளையும் அறுத்தவனாகிய சிவனுடைய மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர்கள் கேடின்றி வாழ்வர்" எனும் இடம் இவர்தம் சிவனியப் பற்று அறிய ஒருபதம் சோறு என்க. முதல் அதிகாரத்துள் தம் சமயச்சார்பைக் காட்டினாலும், பிற அதிகார உரைகள் யாவும் அவர் நோக்கில் எளிமை, இனிமை எனும் தன்மைகள் கொண்டே விளங்குகின்றன. 

     துறந்தார் பெருமை(22) எனும் குறளுக்கு உரை வரையும்பொழுது " பற்றுகளை விட்டவர்களின் பெருமையை இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்வது உலகில் இறந்து போனவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றதாகும்" எனக் கிடந்த முறையால் பொருள் கண்டிருப்பது அவர்தம் தெளிந்த உள்ளம் காட்டுவதாகும். அதுபோல் "சிறப்பீனும்" (31) எனும் குறள் பாவுக்கு, " சிறப்பையும் செல்வத்தையும் பெற்றுத் தருகின்ற அறத்தை விடவும் மேலான செல்வம் மக்களுக்கு என்ன இருக்கின்றது?" என்று வரைந்துள்ளமை இவர்தம் உரை வரையும் திறனுக்கு மற்றுமொரு சான்றாக நிற்கின்றது. 

     திருக்குறள் எழுதப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. எனவே இன்று பொருள் கொள்வதில் அறிஞர்கள் சில இடங்களில் மாறுபட்டு நிற்பது உண்டு. அதில் ஒன்று "இயல்புடைய மூவர்(41)" எனும் பகுதியாகும்.வேலுசாமியார் இந்த இடத்துக்கு உரை வரையும்பொழுது " இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடன் வாழ்கின்ற பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி ஆகிய மூவர்க்கும் நன்னெறியில் நிலையாக உதவும் துணையாவான் என்று உரை வரைந்துள்ளார். இது வடமொழி மரபு தழுவிது என்க. வடமொழி வாணர்கள் குறிப்பிடும் இந்த மூவரும் திருவள்ளுவர் குறிப்பிடும் துறவியர்களுக்கு மாறானவர்கள் என்பதால் இந்த இடத்தில் வரையப்பட்டுள்ள உரையைப் பொருத்தமானதாக ஏற்க முடியவில்லை. வாழ்க்கைத் துணைநலத்தில் இடம்பெறும் "கற்பு" என்ற சொல்லுக்குக் கல்போன்ற மன உறுதி என்கிறார். கடமைகளில் தவறாதவளே மனைவி என்கிறார்(66), புகழ்புரிந்த இல் என்பதற்குப் புகழைப் பாதுகாக்கும் மனைவி என்கிறார்(59). மனைவியின் இல்லற நற்பண்புச் சிறப்பை மங்கலம் என்று(60) குறிப்பிடுகிறார். தம்பொருள் என்ப தம் மக்கள்(63) எனும் குறளுக்கு இவர் வரைந்துள்ள உரை "தம்முடைய மக்களே தமக்குச் செல்வம் என்பார்கள். அந்த மக்களும் அவரவர் செய் முன்வினைப் பயன்களுக்கு ஏற்றவாறு வந்து அமைவார்கள்" என்று இயல்பாக அமைத்து, குறிப்பிடுகின்றமை கற்பவருக்குக் கழிபேரின்பம் நல்குவதாகும். 

     "என்பும் உரியர் பிறர்க்கு" எனும் பகுதிக்கு இவர் உரை வரையும்பொழுது உடம்பாலும் என இயல்பாகப் பொருள் காண்பது சிறப்பு. பிற உரையாசிரியர்கள் எலும்பும் பிறருக்கு என வரைவதையே வழக்காகக் கொள்வர். இவர் மட்டும் உடம்பு என்று குறிப்பிடுவதில் ஒரு நுட்பம் உள்ளதும் அதுவும் காலத்திற்கு ஏற்ற ஓர் அறிவியல், மருத்துவவியில் உண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.உலக உயிர்கள் மாட்டு அன்புடையவர்கள் இந்நாளில் தம் உடல் இறப்பிற்குப் பிறகு பிறருக்கு உதவும்பொருட்டு மருத்துவமனைக்கு வழங்கி அன்புடைமையை வெளிப்படுத்தும் உலகியல் நிலைக்குத் தக இந்த உரை வரையப்பட்டுள்ளத்தை எண்ணி எண்ணி மகிழவேண்டியுள்ளது. "புறத்துறுப்பு"(79)எனத் தொடங்கும் குறட்பாவுக்கு உடம்பின் அகத்து இருக்க வேண்டிய அன்பு என்பது இல்லாதர்க்கு வெளியில் இருக்கின்ற உறுப்புக்கள் என்ன உதவி செய்தல் கூடும்? என்று குறளாசானின் உள்ளக் கிடக்கை உணர்ந்து எழுதியுள்ளமை போற்றற்குரியது.

     "செல்விருந்தோம்பி" என்னும் குறட்பாவுக்கு உரிய பொருளைச் சமண சமயம் சார்ந்த பெரியவர்கள் மிகச்சிறப்பாக உரைப்பர். அப்பொருள் இதுதான். சமண முனிவர்கள் ஓரிடத்தில் தங்கி விருந்துண்போர் இல்லை. போகிற போக்கில் கிடைப்பதை உண்பது அவர்தம் சமய ஒழுக்கமாகும். இத்தகையவர்களுக்கு வழங்கி அடுத்து வரும் தவத்துறவியர்களுக்குக் காத்திருத்தல் எனப் பொருள்கூறுவர். இதில் முரண்பட்டவராய் வேலுசாமியார் அவர்கள் "வந்து செல்லும் விருந்தினர்களைப் போற்றி உபசரித்து அடுத்து வரவுள்ள விருந்தினர்களுக்காகக் காத்திருப்பவன் வானவர்க்கும் நல்ல விருந்து படைப்பவனாவான் என்று உரை வரைந்துள்ளமை மூல நூலாசிரியரின் எண்ணத்துக்கு முரணாக அமைகிறது. 

     'அகன் அமர்ந்து ஈதல்'(92) என்னும் இடத்து, உள்ள மலர்ச்சியோடு இல்லாத ஏழைகளுக்கு ஈவதினும்' என்ற பொருள் கொண்டுள்ளமை கருத்துவேறுபாடுகளுக்கு வழிவகுப்பதாகும். ஏழைகள் எனில் உள்ள மலர்ச்சி இல்லாதவர்கள் எனும் பொருளைக் கொடுப்பதால் இது போன்ற தேவையற்ற அடைகளை உரையாசிரியர் தவிர்த்திருக்கலாம். ’நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை நன்றே ஒழிய விடல்’ (113) என்றவிடத்து ஒழியவிடல் என்பதை அழிய விடல் எனக் கொண்டுள்ளமையை இங்கு எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. அதுபோல் சிற்றின்பம் வெட்கி(173),பொருள் வெட்கி(176) என்று இரு இடங்களில் வெஃகி என்பது வெட்கி என அச்சாகியுள்ளமை அடுத்த பதிப்பில் சீர்செய்ய வேண்டுவனவாகும். 

     'கேடும் பெருக்கமும்' எனத் தொடங்கும் குறளுக்கு எளிமையாகவும் புதுமையாகவும் வேலுசாமியார் உரை வரைந்துள்ளார். "கேடும் செல்வமும் வாழ்க்கையில் இல்லாதவை அல்ல. அதனால் நெஞ்சத்தில் நடுவு நிலைமை தவறாமல் இருப்பதுவே சான்றோர்க்கு அழகாகும். வேலுசாமியாரின் எளிய உரைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். அதுபோல் 'நிலையில் திரியாது அடங்கியான்' எனும் குறட்பாவடிக்குத் தன்னுடைய நிலையிலிருந்து மாறுபடாமல் அடக்கமாய் இருப்பவனுடைய உயர்வு மலையினும் மிகப் பெரியதாகும் எனக் கற்றோரும் மற்றோரும் எளிமையாகப் பொருள் உணரும்படி வரைந்துள்ளமையை எண்ணி மகிழலாம். ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்துக்கு வரைந்துள்ள உரைப்பகுதி முழுவதும் கற்பாருக்கு இன்பம் நல்குவனவாகும். 'அறன்கடை' (142) எனும் குறட்பாவுக்கு வரைந்துள்ள உரை சிறிது மயக்கம் தருவதாக உள்ளது. அக்குறளுக்கு அடுத்து அமையும் ’விளிந்தாரின் வேறல்லர்’ எனத் தொடங்கும் குறட்பாவுக்கு, "ஐயப்படாமல் நம்பியிருப்பவருடைய இல்லாளிடத்தில் விருப்பம்கொண்டு தீயன செய்து ஒழுக நினைப்பார் செத்தவரின் வேறானவர் அல்லர்" என்று மிக எளிமையாகவும் தெளிவாகவும் வரைந்துள்ள போக்கு எண்ணும்பொழுது வேலுசாமியாரின் தமிழ்ப்புலமை வெளிப்பட்டு நிற்கின்றது. 

    அதுபோல் 'பகை பாவம்','பிறன்மனை நோக்காத' எனத் தொடங்கும் குறட்பாக்களுக்கு அழகிய விளக்கம் தந்துள்ளார். அழுக்காறாமை அதிகாரத்தில் இடம்பெறும் அழுக்காறு இல்லாதவர் இயல்பை விளக்கும் பொழுது முதற்குறளில் 'ஒருவன் தன் நெஞ்சத்தில் அழுக்காறு இல்லாத தன்மையை ஒழுக்கநெறியாகக் கொள்ளவேண்டும்' என்று ஒரு தொடரில் மிகச்சிறப்பாக மூலக் குறட்பாவை விளக்கிக்காட்டுகிறார். "அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது" எனும் குறட்பா படித்தவர்க்கே பொருள்கொள்வதில் குழப்பம் ஏற்படுத்தும். மயக்கமில்லாமல் உரைவரையும் வேலுசாமியின் ஆற்றல் இங்குப் பளிச்செனப் புலப்பட்டு நிற்கிறது. "அழுக்காறு கொண்டவர்களுக்கு அந்த அழுக்காறே போதும். பகைவர் கேடு செய்யத் தவறினாலும் அந்தப் பொறாமையே அவர்களுக்குக் கேட்டைத் தரும்" என்று எழுதியுள்ளமை சிறப்பானதாகும். 

     'நத்தம்போல் கேடும்'(235) என்னும் குறட்பாவுக்குப் புதிய முறையில் உரை வரைந்துள்ளார். 'சங்குபோல் அழிவும் புகழ் உண்டாக்கக்கூடிய இறப்பும் ஆகிய இவை அறிவாற்றல் நிறைந்தவர்களுக்கேயல்லாமல் மற்றவர்களுக்கு இல்லை'. இவ்வாறு அறிவியல் அடிப்படையில் உரை வரைந்து பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபட்டு உரை கண்டுள்ளார். அதுபோல் 'வசையிலா வண்பயன் குன்றும்' என்னும் குறட்பாவுக்குப் புகழ் அடையாத ஒருவரின் உடலைச் சுமந்த நிலமானது பழிப்பு இல்லாத வளமான பயனைத் தருவதில் குறைந்துவிடும்' என்று வரைந்துள்ளது புறநானூற்றுப் பாடலின் பிழிவாக உள்ளது. 

     ’பற்றற்றேம்’ (275) எனத் தொடங்கும் குறட்பாவிற்குப் 'பற்றுக்களைத் துறந்துவிட்டோம் என்று சொல்கின்றவரின் மறைவான ஒழுக்கக் கேடுகள் எதற்காகச் செய்தோம், எதற்காகச் செய்தோம் என்று சொல்லி வருந்தும்படியான துன்பங்கள் பலவற்றை ஏற்படுத்தும்' என்று வரைந்துள்ளமை மிக எளிதாகவும் இனிதாகவும் உள்ளது. நெஞ்சில் துறவார்(276) எனும் குறளுக்கு வரைந்துள்ள உரைக்கு இன்னும் விளக்கம் தேவையாக உள்ளது. 

     ஊழ் என்னும் அதிகாரத்திற்கு வரைந்துள்ள உரை சற்று விரிவாகவும் விளக்கமாகவும் அமைந்து கற்போர்க்கு இன்பம் பயக்கிறது. திருக்குறளில் மூழ்கி முத்தெடுத்து உரைகண்டுள்ளார் சி.வேலுசாமியார். ஆய்வு நோக்கில் சில நிறை, குறைகளை யான் நடுநின்று குறித்தேன். இவை யாவும் அறிஞர் சி.வேலுசாமியாரின் பேராற்றல் உணர்த்துவதற்கேயாம். அறத்துப்பால் முழுமைக்கும் உரை வழங்கிய அற நெஞ்சினரான சி.வேலுசாமியார் அவர்களின் தமிழ்ப்பணி திருக்குறள் உலவும் காலம் வரை நினைவுகூரப்படும்.

வேலுசாமியார் வாழ்க்கைக் குறிப்பு அறிய இங்குச் சொடுக்குக.

 குறிப்பு: 20,21-06.2009 இரத்தினகிரியில் (வேலூர் மாவட்டம்) நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாம் மாநாட்டில் வெளியிடப்பெற்ற ஆய்வுக்கோவையில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

கருத்துகள் இல்லை: