நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 19 மார்ச், 2009

கொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...

கே.எஸ்.ஆர்.கல்லூரியில் தமிழ்மணம் அறிவிப்பு 
 
 தமிழில் இணையப் பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் நடத்த முன்பே திட்டமிட்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் தமிழில் இணையத்தைப் பயன்படுத்தினால் தமிழுக்கு ஆக்கம் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் பலருடன் தொடர்புகொண்டு பயிலரங்குகள் நடத்தும் முயற்சியில் அண்மைக் காலமாக வெற்றியுடன் செயல்படுகிறேன். அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் பயிலரங்கம் நடத்தும் முயற்சியில் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களும் அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் பேருதவி புரிந்தனர். அவ்வகையில் அக் கல்லூரியில் 14.03.2009 காரி(சனி)க் கிழமை பயிலரங்கம் நடத்த கல்லூரி நிருவாகத்தினரும் முதல்வரும் அன்புடன் இசைவு தந்திருந்தனர். அமெரிக்காவில் வாழும் முனைவர் நாக. கணேசன் அவர்களும் இங்கு நடைபெற பல்லாற்றானும் உதவினார். 
 
  13.03.2009 பகல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு இரவு 10 மணியிளவில் திருசெங்கோடு சென்று சேர்ந்தேன். இரவு கல்லூரி விடுதியில் தங்கவைக்கப்பட்டேன். பேராசிரியர் இரா. சந்திரசேகர் அவர்களின் ஏற்பாட்டில் முனைவர் த. கண்ணன் அவர்கள் வரவேற்றார். நாளை நடக்கும் நிகழ்வுகள் பற்றித் திட்டமிட்டபடி இரவு கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன்.
  
கே.எஸ்.ஆர்.கல்லூரி வரவேற்புப் பதாகை 
 
14.03.2009 காலையில் கருத்தரங்கிற்காக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ள மயிலாடுதுறைப் பேராசிரியர் கண்ணன் அவர்கள் வந்துசேர்ந்தார். பிறகு செல்வமுரளி அவர்களும் வந்து சேர்ந்தார். அனைவரும் காலை உணவு உண்டு பேரா.சந்திரசேகரன் அவர்களுடன் கல்லூரி இயக்குநர் அவர்களையும் முதல்வர் அவர்களையும் கண்டோம். அங்கு எனக்கு முன்பாக புலவர் செ.இராசு அவர்கள் உரையாடிக்கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புலவர் இராசு அவர்களுடன் அரங்கிற்கு வந்தேன். மாணவர்களும் இணைய ஆர்வலர்கள் பலரும் காத்திருந்தனர். 
 
  திட்டமிட்டபடி 10 மணிக்குப் பயிலரங்கு தொடங்கியது. உள்ளூர்ச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதழாளார் திரு.விசயகுமார் அவர்கள் தம் சங்கமம் இணைய இதழுக்காகவும் தொலைக்காட்சிக்காகவும் தளத்துக்காகவும் செய்திகள் காணொளியில் பதிவு செய்யும் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையத்துறையில் இயங்கி வருபவர். அவர் பற்றி முன்னமே அறியாததால் அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. பிறகுதான் அவர் ஆற்ற்ல் நேரடியாக உணர்ந்தேன். இனிவரும் காலங்களில் அவரை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள நினைத்துள்ளேன். இது பற்றி அவருடன் உரையாடி அவர் அன்பையும் நட்பையும் பெற்றேன். 
 
 திரு.மா.கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முனைவர் இரா.சந்திரசேகரன் விருந்தினர்களை நன்கு அறிமுகம் செய்தார். முனைவர் நா.கண்ணன் (கல்லூரி முதல்வர்) அவர்கள் வாழ்த்துரை நல்கினார். புலவர் செ. இராசு அவர்கள் அரியதொரு தொடக்கவுரையாற்றினார். திரு.டி.என்.காளியண்ணக் கவுண்டர் அவர்களின் திருமகனார் திரு. இராசேசுவரன் (ஓய்வு பெற்ற நீதிபதி) அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தார். நீதிபதி ஐயா அவர்கள் நன்கு பேசினார். என்மேல் அன்பு பாராட்டினார். கவுண்டர் ஐயா அவர்கள் சென்னை சென்றுள்ளதாகவும் அடுத்தமுறை வந்து கண்டுபேசலாம் எனவும் தெரிவித்தார். அவருடன் உள்ளூர் ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். 
 
கல்லூரி முதல்வர், நீதியரசர் இராசேசுவரனுடன் மு.இ.
    நீதியரசர் இராசேசுவரன் அவர்களுடன் மு.இ.
 
  தேநீர் இடைவேளைக்குப் பிறகு 11.30 மணிக்கு என் உரை அமைந்தது. 1.00 மணிவரை என் உரை தொடர்ந்தது. தமிழ் இணையத்தள வளர்ச்சி, தட்டச்சு.99 விசைப்பலகை, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மதுரைத் தமிழ் இலக்கிய மின்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை, விருபா, நூலகம், தமிழ்மணம் பற்றிய செய்திகளைக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். இணைய இணைப்பு சரியாக சில நேரம் கிடைக்காததால் சிறிது தொய்வு ஏற்பட்டபொழுது வேறு தகவல்களைப் பரிமாறி இயல்பாக அரங்கை நடத்த முயன்றேன். திரு.இரவிசங்கர் (விக்கி ஆர்வலர்) அவர்களை அங்குதான் முதன்முதல் சந்தித்தேன். எனக்குத் தேவையான சில காட்சி விளக்கங்களுக்கு உதவினார். பேரா.குணசீலனும் உதவினார். 
 
  பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நிகழ்ச்சிக்காகக் கரூரிலிருந்து வந்திருத்தார்.அவர் மகன்கள் அமெரிக்காவில் உள்ளனர்.எனவே நா.கணேசன் அவர்களுக்குப் பேராசிரியர் தங்கமணி ஐயா நன்கு அறிமுகம் ஆனவர். கணேசன் அவர்களின் தகவலால் பேராசிரியர் வந்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னமே பேரா.பே.க.வேலாயுதம் அவர்கள் இல்லத்தில் தங்கமணி ஐயாவைக் கண்டு உரையாடி நான் நட்புப்பெற்றவன். அவரைக் கண்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.தருமபுரியிலிருந்து பொறியாளர் நரசிம்மன் அவர்களும் பார்வையாளராக வந்து கலந்துகொண்டார். தமிழ் ஓசை களஞ்சியத்தில் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்தது. அதனைக்கண்டு திருச்சியிலிருந்து ஈழத்தமிழறிஞர் மருத்துவர் வே.த.லோகநாதன் அவர்கள் தம் மகளாருடன் வந்து பயிற்சியில் கலந்துகொண்டு ஆர்வாமாகப் பயிற்சிபெற்று கடைசிவரை இருந்து விடைபெற்றனர். பகல் உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்தோம். விடுதியில் சிறப்பாக உணவு ஆயத்தம் செய்திருந்தார்கள். 
 
 பகல் 2.30 மணியளவில் மீண்டும் அமர்வு தொடங்கியது. திருவாளர்கள் இரா.குணசீலன், த.கண்ணன், ப.சரவணன் கட்டுரைகளைக் காட்சி விளக்கத்துடன் படைத்தனர். விக்கிபீடியா பற்றி இரவிசங்கர் அவர்களும், இணையத்தளப் பாதுகாப்புப் பற்றி செல்வமுரளியும் இடையில் உரையாற்றினார். நேரம் அவர்களுக்கு அதிகமாக வழங்கமுடியாமைக்கு வருந்தினேன். பயனுடைய தகவல்களைத் தந்தனர். நான் மின் இதழ்கள் பற்றி மாலை 4 மணி வரை உரையாற்றினேன். பிறகு எளிமையாக நன்றியுரைத்தலுடன் நிறைவு விழா நடந்தது. தமிழ்த்துறைக்குச் சென்று அனைவரிடமும் விடைபெற்று விடுதி அறைக்கு வந்தேன். அங்குப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களும் பேராசிரியர் கண்ணன் (மயிலாடுதுறை) அவர்களும் காத்திருந்தனர். கண்ணன் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு இணையம் பற்றிய தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். அது பற்றி சிறிது நேரம் உரையாடிவிட்டு, கரூருக்கு நாங்கள் புறப்பட ஆயத்தமானோம். 
 
 முதலில் திருச்செங்கோடு வரை மயிலாடுதுறை கண்ணன் எங்களுடன் வந்தார். அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நானும் பேரா. இராசசேகர தங்கமணியும் வேலூர் வழியாக கரூர் வந்து சேர்ந்தோம்.பேராசிரியர் காலையில் சந்திப்பதாக உரைத்து விடைபெற்றார். 9.30 மணியளவில் கரூர் வந்து வள்ளுவர் விடுதியில் கரூர் மாவட்ட நூலகர் திரு.செ.செ. சிவக்குமார் ஏற்பாட்டில் தங்கியிருந்தேன். அந்த விடுதியின் உரிமையாளர் மிகப்பெரும் செல்வ வளம் உடையவர் எனவும், திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர் எனவும் வள்ளுவர் பெயரில் பல கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வைத்துள்ளதாகவும் அறிந்தேன்.அவர் பெயர் திருவாளர் செங்குட்டுவன் ஐயா என அறிந்தேன். செங்குட்டுவன் ஐயா விடுதியில் தமிழறிந்த இளங்கோ தங்குவது சிறப்புதானே!. மின்னஞ்சல் அனுப்பல், படித்தல் முதலிய பணிகளை முடித்துப் படுக்கும்பொழுது இரவு 12 .30மணியிருக்கும். 
 
  15.03.2009 காலையில் திரு.சிவக்குமார் அவர்கள் சென்னைக்குப் பணியின் பொருட்டுச் சென்றவர்கள் தொடர்வண்டியில் திரும்பினார். வண்டியில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்டு நடக்கவேண்டிய பணிகளைத் திட்டமிட்டார். காலையில் மாவட்ட நூலக அதிகாரி திரு.செகதீசன் ஐயா அறைக்கு வந்து ஒருவரை ஒருவர் கண்டு வணங்கினோம். இவர்களின் சொந்த ஊர் தாரமங்கலம் பகுதியில் இருந்ததாலும் தருமபுரியில் இவர்கள் முன்பு பணிபுரிந்ததாலும் அங்குள்ள என் நண்பர்கள் வழியாக அவர்களின் மேல் எனக்கு அளவுக்கு அதிகமான அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. இருவரும் சிற்றுண்டி முடித்துக்கொண்டு மாவட்ட நூலகத்திற்குச் சென்றோம். 
 
கரூர் நூலக முகப்பில் தமிழ்மண வரவேற்பு 
  பயிற்சி பெறுவோர் 
  நூலகர்களுக்குப் பயிற்சியளிக்கும் நான் 
  செ.செ.சிவக்குமார், மு.இ., செகதீசன் 
  
 முனைவர் கடவூர் மணிமாறன் கருத்துரை 
 
  காலை 9 மணிக்குச் சென்ற பிறகுதான் திரு செ.செ.சிவக்குமார் நேரில் அறிமுகம் ஆனார். அதற்கு முன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் மட்டும் தொடர்பு கொண்டிருந்தோம். அவரைப் பார்த்ததும் எனக்கு அவர்மேல் ஓர் ஈடுபாடு வந்தது. மிகச்சிறந்த செயல்திறம் உடையவர். கரூரில் என்ன உதவியையும் யாரிடமும் பெற்றுக் கொள்ளும்படியான திறமையும் வினைத்திட்பமும் கொண்டவர்.மாவட்ட மைய நூலகத்தை இவர் மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். புதிய கட்டடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட நூலகமாக அது விளங்குகிறது. கணிப்பொறிகள் திரும்பிய திசைகளில் இருந்து அனைவருக்கும் உதவக் காத்துள்ளன. மாணவர்களை நூலகத்தின் பக்கம் இழுக்க பல திட்டங்களை வைத்து நடைமுறைப் படுத்தியவர். நகரின் நடுவே நூலகம் கரூருக்கு அழகுக்கு அழகு சேர்த்து விளங்குகிறது. 
 
  அரங்கில் 9.15 மணிக்கு என் விளக்கம் தொடங்கியது. அங்கிருந்த கணிப்பொறியை முதற்கண் தமிழில் இயங்கும்படி செய்தேன்.பின்னர் சிவக்குமார் அவர்களின் கணிப்பொறியும் தமிழில் இயங்கும்படி செய்தேன். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகர்களுக்கும் பயன்படும் வண்ணம் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 30 நூலகர்கள், முனைவர் கடவூர் மணிமாறன், பேரா. இராச்சேகர தங்கமணி, திரு.காமராசு உள்ளிட்ட இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். நூலக அலுவலர் அவர்களும் சிவக்குமார் அவர்களும் பிற பணிகளையும் கவனித்தபடி அரங்கை வழிநடத்தினர். 
 
   தமிழ்த் தட்டச்சிலிருந்து அனைத்துத் தகவல்களையும் பகல் ஒரு மணிவரை எடுத்துரைத்தேன். கணிப்பொறியை எனக்கு உதவிக்கு இயக்க இருவர் இருந்தனர். முறைப்பாட்டில் மின்சாரம் 10-12 நிற்பதாக இருந்தது.சிவக்குமாரின் ஏற்பாட்டில் மின்சாரம் தொடர்ந்து வந்தது. உள்ளூர் செய்தியாளர்கள், தொலைக்காட்சிக்காரர்கள் வந்து குவிந்தனர். இணையப் பயிலரங்கச் செய்தி கரூர் நகரம் முழுவதும் பரவியது. ஒரு மணி நேரத்தில் பரவியது. 1-00-2.30 மணிவரை உணவுக்காகப் பிரிந்தோம். 
 
  மீண்டும் மின்னிதழ்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.மின்னஞ்சலில் இருக்கும்பொழுது திரு.கண்ணன் (கொரியா) மயிலாடுதுறை நெடுஞ்செழியன், அறிவழகன் உள்ளிட்டவர்கள் இணைப்பில் வந்து மகிழ்வூட்டினர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பவுது உள்ளிட்ட பல தகவல்கள் என் இரு அமர்வுப் பேச்சிலும் தெரிவிக்கப்பட்டன. பலரும் புதிய அனுபவங்களை பெற்றனர். மாலை 5.30 மணிக்கு அனைவரிடமும் விடைபெற்று அறைக்கு 6 மணிக்குத் திரும்பினேன். 
 
   அரை மணி நேர ஓய்வுக்குப் பிறகு கிங் தொலைக்காட்சி நிலையம் அழைத்துச் செல்லப்பட்டேன். திரு.சிவராமன் என்ற இதழாளர் முன்பே வந்து அழைப்புவிடுத்தார்.ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் இணையம் சார்ந்த உரையாடலை நிகழ்த்திப் பதிவு செய்துகொண்டார். நிறைவில் ஓரிரு நாட்டுப்புறப் பாடல்களை நான் பாடும்படி நேர்ந்தது. அதனைக் கண்ட திரு. சிவராமன் நாட்டுப்புறப் பாடலில் நேர்காணல் செய்யாமல் விட்டுவிட்டோமே என வருந்தினார். மீண்டும் ஒருமுறை வருவதாக உரைத்து புறப்பட்டேன். இரவு உணவு நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களுடன் முடித்து அறைக்குச் சென்றபொழுது இரவு 10.30 மணியிருக்கும். சில பணிகளை முடித்து ஓய்வெடுக்கும் முன்பாக கரூர் வழக்கறிஞர் இராம. இராசேந்திரன் அவர்கள் காலையில் சந்திப்பதாகத் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார். (கிங் தொலைக்காட்சி ஒளிபரப்பு 18.03.2009 இரவு 9-10 ஒருமணி நேரம் ஒளிபரப்பாகியுள்ளது. அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்.) 
 
  மறுநாள் நடந்த கரூர் நண்பர்கள் சந்திப்பு, நாமக்கல் நிகழ்ச்சி பற்றி பிறகு எழுதுவேன்...

1 கருத்து:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

மாரத்தான் ஓட்டம் போல் தொடர்ந்து தமிழகம் எங்கும் கல்லூரிகளிலும் நூலகங்களிலும் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தி வரும் தங்களின் பணி பாராட்டுக்குரியது. இந்நிகழ்வில் விக்கிப்பீடியா அறிமுகத்துக்கு வாய்ப்பு தந்தமைக்கு அனைத்து விக்கிப்பீடியர் சார்பாக என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முயற்சி தொடர வாழ்த்துகிறேன்.